இந்திய கிரிக்கெட் வீரர் மாயங்க் அகர்வால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் விமான பயணத்தின் போது குடிநீர் என நினைத்து அசிட்டை குடித்து விட்டதாக கூறப்படுகிறது.
அசிட் வாயில் பட்டதால் எரிச்சல் ஏற்பட்டு அதை கீழே துப்பி இருக்கிறார். எனினும், எரிச்சல் அதிகமாக இருக்கவே அவரை விமானத்தில் இருந்து இறக்கி அகர்தலாவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி கிண்ணத் தொடரில் கர்நாடகா அணியின் தலைவராக செயற்படும் மாயங்க் அகர்வால், திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா சென்றார்.
அந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பின் சக வீரர்களுடன் அகர்தலாவில் இருந்து குஜராத் மாநிலம் சூரத் செல்ல விமானத்தில் ஏறியுள்ளார். விமான பயணத்தின் போது குடிநீர் வேண்டுமெனக் கேட்டு இருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட குடிநீர் போத்தலில் இருந்து அவர் சிறிதளவு அருந்தியதும் கடும் எரிச்சல் ஏற்பட்டு அதை கீழே துப்பி இருக்கிறார்.
தற்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் 2024 ரஞ்சி கிண்ணத் தொடரில் மாயங்க் அகர்வால் திறமைமையை வெளிப்டுத்தியுள்ளார். இதுவரை நான்கு போட்டிகளில் பங்கேற்று 460 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாாடியுள்ள அவர் அதில் 1,488 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். (tamilmykhel)
