உலக சதுரங்க சாம்பியன் தமிழகத்தின் குகேஷ்

தமிழக வீரர் குகேஷ் உலக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ் இந்தச் சாதனையை படைத்துள்ளார். அதோடு மிகக் குறைந்த வயதில் உலக சதுரங்க சாம்பியனாகி வரலாறு படைத்துள்ளார் குகேஷ்.

உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான 18 வயது குகேஷ் தொம்மராஜு ஆடினார்.

இருவருக்கும் இடையில் 14 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பம் முதலே மிகவும் சவாலான போட்டியாக இருவருக்கும் இருந்து வந்துள்ளது.

முதலில் சில சுற்றுகளில் குகேஷின் கை ஓங்கியிருந்தாலும், அதன் பின் சீனாவை சேர்ந்த 32 வயதான டிங் லிரேன் தனது பட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ள கடுமையாக ஆடினார். ஒன்பதாவது சுற்றின் முடிவில், இருவரும் சமநிலையில் இருந்தனர்.

அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் சமமான வாய்ப்புகளும் சமமான சறுக்கல்களும் இருந்தன. ஆனால ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர்.

பத்தாவது சுற்றின் இறுதியிலும் இருவரும் சமநிலையில் இருந்தனர். பதினொறாவது சுற்றில் குகேஷ் சிறப்பாக ஆடி, ஆட்டத்தைத் தன்வசப்படுத்தி இருந்தார்.

12வது சுற்றில் மீண்டும் சவாலான ஆட்டத்தைக் கொடுத்து, தனக்கான புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார் டிங் லிரேன்.

எனவே அடுத்த சுற்றான 13வது ஆட்டத்தை உலகின் சதுரங்க இரசிகர்கள் அனைவரும் உற்று நோக்கியிருந்தனர். அனைவரும் மிகவும் எதிர்ப்பார்த்த 13வது ஆட்டம் சமநிலையில் முடிவடைந்தது.

14வது ஆட்டம் தொடரும் போது, ​​அது சமநிலையில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார்.

உலக சதுரங்க சாம்பியன் போட்டியின் வெற்றிக்குப் பிறகு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குகேஷ், “இரண்டு வருட தீவிர பயிற்சிக்குப் பின் கிடைத்த வெற்றி இது” என்றார்.

இந்தப் போட்டிக்கு உடல்ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

குகேஷ் 10 வருட பயிற்சியின் விளைவாக இந்த சாதனையைப் படைத்துள்ளதாகக் கூறியதோடு, இந்தியாவுக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு பறிக்கப்பட்ட சாம்பியன் பட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று கனவு கண்டதாகவும் தெரிவித்தார்.

உலக சாம்பியன் ஆனது பெரு மகிழ்ச்சி என்று குறிப்பிட்ட அவர் லிரேன் தோல்வி அடைந்ததற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இறுதியாக, இந்த வெற்றியை இந்திய மக்களுக்கு அர்பணிப்பதாகக் கூறினார் குகேஷ். (BBC Tamil with minor changes)

Latest articles

Similar articles