உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது தமக்கு கடுமையான சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ரமழான் நோன்பு காலத்தில் தமக்கு வலுக்கட்டாயமாக பன்றி இறைச்சி உண்ணக் கொடுத்தாகவும், அந்த வழக்கின் பிரதிவாதியான முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது தனது தரப்பு வாதத்தை முன்வைத்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துள்ளார்.
வெளியாளர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதி குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான மொஹமட் சரிது ஆதம் லெப்பை எனும் மொஹமட் சரீப் ஆதம் லெப்பை அல்லது கபூர் மாமா அல்லது அபு ஹதீத், பொலிஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதி முழுவதும் தாம் கடுமையான உடல் மற்றும் மனரீதியான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களாக வாக்குமூலங்களை வழங்கிய பிரதிவாதிகளில், பாதிக்கும் மேற்பட்டோர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் தங்களைச் சித்திரவதை செய்து, ஒப்புதல் வாக்குமூலங்களில் கையெழுத்து பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இரண்டாவது பிரதிவாதி உட்பட மேலும் ஏழு பிரதிவாதிகள் கடந்த 17ஆம் திகதி தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
அவர்களில், 7ஆவது பிரதிவாதி மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன் எனும் தாயிபு அல்லது அபு மிசாம், 8ஆவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள அப்துல் மனாப் மொஹமட் சிரிதவுஸ், 10, 18 மற்றும் 19ஆவது பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள அப்துல் லதீஃப் மொஹமட் சாஃபி, ராசிக் ராஸா ஹுசைன் மற்றும் கவிச் மொஹமட் மொஹமட் ஜெம்சித் ஆகியோரும், 12 மற்றும் 14ஆவது பிரதிவாதிகளாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள மொஹமட் சவாஹிர் மொஹமட் ஹசன் மற்றும் ரஷீட் மொஹமட் இப்ராஹிம் ஆகியோர்களாவர்.
தன்னைச் சித்திரவதை செய்து, ரமழான் நோன்பு காலத்தில் பன்றி இறைச்சியுடன் வலுக்கட்டாயமாக உணவு உண்ணச் செய்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் யார் என்பதை இரண்டாவது பிரதிவாதியான மொஹமட் சரிது லெப்பை, மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் தெரிவித்துள்ளதாகவும், எனினும் அது தொடர்பில் தாம் எத்தகைய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பது குறித்து நீதிபதிகள் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை எனவும் நீதிமன்ற தகவல் வட்டாரங்கள் மூலம் எமக்குத் தெரியவந்துள்ளது.
பாரிய மனித உரிமை மீறல்
வழக்கு விசாரணைகளின்போது வெளிப்படும் இத்தகைய சித்திரவதைச் சம்பவங்கள் தொடர்பில், அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகள் உள்ளதாக, இது வெறுமனே உடல் ரீதியான சித்திரவதையைத் தாண்டி, ஒருவரின் மத நம்பிக்கைகள் மற்றும் கலாசார நம்பிக்கைகளுக்கு எதிராக அரச மட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மிகவும் கொடூரமான செயலாகக் கருதப்படக்கூடியது என்பதால், பிரதிவாதியின் தரப்பு வாக்குமூலத்தின் அடிப்படையில் இதற்கு எதிராக நீதிபதிகள் எவ்வாறான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என நாம் கேட்டபோது, மனித உரிமைகள் தொடர்பில் பிரபலமான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்.
“இது மிகவும் பாரதூரமான செயலாகும். ஒரு நபரின் மதம், கலாசாரம் அல்லது நம்பிக்கைகள் தொடர்பான விடயங்களை அவரது பலவீனமாகக் கருதி, அதனை ஒரு சித்திரவதை முறையாகப் பயன்படுத்தி பொலிஸார் அல்லது குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ஒப்புதல் வாக்குமூலங்களையோ அல்லது வாக்குமூலங்களையோ பெற்றிருந்தால், அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, நீதிமன்றத்தில் அது தொடர்பான விடயங்களை அறிக்கையிடுமாறு நீதிபதிகள் உத்தரவிட முடியும்” என அந்த சட்டத்தரணி தெரிவித்தார்.
அரசியலமைப்பு மற்றும் ICCPR சட்டம்
அத்துடன், இவ்வாறான சித்திரவதைச் செயல்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழும், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) கீழும் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அந்த சட்டத்தரணி குறிப்பிடுகின்றார்.
“எமது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில், 12(2) ஆவது உறுப்புரையில், மதம், இனம், சாதி போன்ற வேறுபாடுகளின் அடிப்படையில் எவரையும் பாகுபடுத்தி நடத்தக்கூடாது என மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்திலும், இவ்வாறான பாகுபாடுகளை மேற்கொள்ளவோ அல்லது மதம், இனம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை அவமதிக்கும் வகையில் செயற்படவோ கூடாது என மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.”
