சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அட்டமஸ்தானாதிபதி தேரர், குறித்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வருகை தந்தபோது, மற்ற நபர்களுக்கு வழங்கப்படாத விசேட சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்று கோரப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டத்தரணிகள் உள்ளிட்ட ஏனையவர்கள் வழமையான நடைமுறைக்கு அமைவாக நீதிமன்ற வளாகத்திற்குள் வருகைத்தந்த போதிலும், சிறுமி வன்புணர்வு குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேகநபரான பல்லேகம ஹேமரதன தேரர் மாத்திரம் எந்தவொரு வழமையான நடைமுறைக்கும் கீழ்படியாமல், விசேட நுழைவாயில் வழியாக நீதிமன்றத்திற்குள் வந்ததாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக முன்னிலையாகியுள்ள சட்டத்தரணிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்குள்ளான தேரருக்கு பிரபு சலுகையா?
“சந்தேகநபரான தேரர் நீதிமன்றத்திற்கு எந்தவித சோதனைக்கும் உட்படுத்தப்படாமல், ஒரு VIP போலவே வந்தார்” என, பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி சானக அபேவிக்ரம தெரிவித்தார்.
சந்தேகநபரான தேரரிடம் காணப்படும் சிவில் மற்றும் அரசியல் அதிகாரம் குறித்து நீதிமன்றத்திற்கு உணர்த்துவதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என்பதே சட்டத்தரணியின் நம்பிக்கையாகும். “இவர் ஒரு சந்தேகநபர்தானே. மற்ற வழக்குகளில் சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லும்போது சோதனை செய்துதான் அழைத்துச் செல்கிறார்கள் என்றால், இந்த வழக்கின் சந்தேகநபருக்கு மட்டும் ஏன் அந்த சட்டம் பொருந்தவில்லை? இதன் மூலம் அவர் தனக்குள்ள சிவில் அதிகாரத்தைத்தானே வெளிப்படுத்துகிறார்?”
எதிர்கால விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
தற்போதைய பதில் அட்டமஸ்தானாதிபதி ஈதலவெட்டுணு வஞ்ஞானதிலக தேரரும் பொதுவான சோதனை நடைபெறும் இடத்தின் ஊடாகவே நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். ஆனால், நீதிபதி, சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கு மாத்திரம் வழங்கப்படும் அந்தச் சலுகை, சிறுமியொருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய வழக்கின் சந்தேகநபரான பல்லேகம ஹேமரதன தேரருக்கு எவ்வாறு வழங்கப்பட்டது என சட்டத்தரணி சானக அபேவிக்ரம கேள்வி எழுப்பியுள்ளதுடன், இவ்வாறு வழங்கப்பட்டுள்ள சலுகை முழு விசாரணை செயல்முறையையும் பாதிக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.
“இது தொடர்பாக நாம் நீதிமன்றத்தின் முன்னிலையில் கடும் கேள்விகளை எழுப்பினோம். ஏனெனில், இந்த தேரரிடம் இருக்கும் சிவில் அதிகாரம், இந்தத் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவிலான அதிகாரமாகும். அது எங்களுக்குத் தெரியும். இந்தக் குற்றம் தொடர்பில் முதன்முதலில் தகவல் வெளியானதிலிருந்து இடம்பெற்ற ஒவ்வொரு சம்பவமும் அந்தச் சிவில் அதிகாரத்திற்கு உட்பட்டே இடம்பெற்றுள்ளன. தேரரை கைது செய்வதை பொலிஸாரின் மூலம் தடுத்து நிறுத்தக்கூடிய அளவுக்கு அவருக்கு சிவில் அதிகாரம் இருந்திருந்தால், நினைத்துப் பாருங்கள் ஒரு சந்தேகநபராக நீதிமன்றத்திற்கு வரும்போதும் அதே அதிகாரத்தை மீண்டும் வெளிப்படுத்தி வந்தால், இது தொடர்பில் யாருக்கு நம்பிக்கை வைக்க முடியும்” என தெரிவித்த சட்டத்தரணி அபேவிக்ரம, பொலிஸாரின் விசாரணைச் செயல்முறையே, சந்தேகநபரான தேரரின் சிவில் மற்றும் அரசியல் அதிகாரத்தின் அளவை வெளிப்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பாதிக்கப்பட்ட சிறுமியின் உரிமைகளுக்காக முன்னிலையாகி தான் முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்ட அநுராதபுரம் பிரதான நீதவான் சசிந்து சியபத் விக்ரமரத்ன, இது தொடர்பில் அறிக்கை ஒன்றைக் கோருமாறு உத்தரவிட்டதாக சட்டத்தரணி அபேவிக்ரம தெரிவித்தார்.
“கௌரவ நீதவான் அவர்கள் இது தொடர்பில் தனது தீவிர கவனத்தைச் செலுத்தினார். உடனடியாக இது தொடர்பில் விசாரணை நடத்தி, அடுத்த வழக்கு விசாரணையின்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றத்தின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.”
சிறுமிக்கு உளவியல் பரிசோதனை
இந்நிலையில், நீதிமன்றத்தில் மேலதிக அறிக்கையொன்றை சமர்ப்பித்த நிட்டம்புவ பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் விசாரணைக்குப் பொறுப்பான அதிகாரிகள், சம்பவத்திற்குப் பின்னர் சிறுமி கடுமையான மன அழுத்தம் மற்றும் அதிர்ச்சியான நிலையில் இருப்பதாகத் தெரியவருவதால், அது தொடர்பில் பரிசோதனை செய்வதற்காக சிறுமியை ராகம போதனா வைத்தியசாலையின் விசேட மனநல வைத்தியரிடம் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரியுள்ளனர்.
பொலிஸாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான், சிறுமியை மனநல வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அதன் அறிக்கையை அடுத்த வழக்கு விசாரணையின்போது தம்மிடம் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான பல்லேகம ஹேமரதன தேரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்ததிஸ்ஸ, ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினரும், அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தைச் சேர்ந்த பெருமளவான சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனர்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபரான தேரர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமி ஆகியோரின் DNA மாதிரிகளைப் பரிசோதித்து, அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கடந்த வழக்கு விசாரணைகளின்போது அநுராதபுரம் பிரதான நீதவான் சசிந்து சியபத் விக்ரமரத்ன, அரச இரசாயனப் பரிசோதகருக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதற்கு மேலதிகமாக, பொலிஸ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக விசாரணையின் சுருக்கக் குறிப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
