கிழக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலையொன்றில் புதிதாக நியமனம் பெற்ற முஸ்லிம் பெண் பணியாளர்கள் அணிந்திருந்த ஆடை காரணமாக அவர்கள் கடமைக்கு சமூகமளிப்பதை வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தடுத்ததாகக் கூறி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கனிஷ்ட சுகாதாரப் பணியாளர் பதவிக்கு நியமனம் பெற்ற ஒன்பது முஸ்லிம் பெண்கள், ஓகஸ்ட் 6ஆம் திகதி கடமையைப் பொறுப்பேற்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
அப்போது வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ சங்கர், அவர்கள் அணிந்திருந்த ஆடையுடன் கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்க முடியாது எனக் கூறி, கடமைக்கு சமூகமளித்ததைப் பதிவு செய்யும் ஆவணத்தில் கையொப்பமிட அவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மறுநாளும் கடமைக்கு சமூகமளிப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்றபோது, அந்த முஸ்லிம் பெண் அதிகாரிகள் அதே நிலைமையை எதிர்கொண்டுள்ளனர்.
ஓகஸ்ட் 10ஆம் திகதி, அவர்களில் 5 பேர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்தப் பிரச்சினையை வைத்தியசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்ததாக அவர்களுக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி எம்.எம்.எம். முஹஸ்ஸம், பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
“வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ சங்கர் மற்றும் மற்றொரு வைத்திய அதிகாரியான வைத்தியர் ராஜிந்திரனை சந்தித்து இது தொடர்பாக நாங்கள் விசாரித்தோம். மேலும், இந்த விடயத்தை வைத்தியசாலை வளாகத்திற்குள்ளேயே உள்ளக நடைமுறையின் ஊடாகத் தீர்க்க முடியுமா என்பதையும் ஆராய்ந்தோம். ஆனால், அவ்வளவு இலகுவான நடைமுறை எதுவும் இல்லை என்பது அந்தக் கலந்துரையாடலுக்குப் பின்னர் எங்களுக்குத் தெளிவானது” என அவர் தெரிவித்துள்ளார்.
2019 ஜூன் 26ஆம் திகதி அரச நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் அரச அதிகாரிகளின் ஆடை தொடர்பாக வெளியிடப்பட்ட அரச நிர்வாக சுற்றறிக்கை 13/2019(1) ஐ வைத்தியசாலை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக சட்டத்தரணி முஹஸ்ஸம் தெரிவித்துள்ளார்.
“அரச சேவையின் கௌரவத்தைப் பேணும் வகையில் பொருத்தமான, கண்ணியமான ஆடையை அணிந்த பின்னர், ஏதேனும் மதச் சம்பிரதாயத்திற்கு அமைய தமது ஆடையை அமைத்துக் கொண்டிருக்கும் அதிகாரிகள் இருப்பின், அவர்கள் தமது உத்தியோகபூர்வ ஆடையை அணிந்ததன் பின்னர், அந்த மத அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும், அதிகாரிகளால் முழு முகத்தையும் (இரு காதுகளையும் தவிர) தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையிலும் மேலதிக ஆடை அல்லது அணிகலனைப் பயன்படுத்தலாம்.” என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ருடானி சாஹீருடன் இணைந்து ஓகஸ்ட் 10ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அம்பாறை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்வதற்கு முன்னின்ற சட்டத்தரணி எம்.எம்.எம். முஹஸ்ஸம், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர் மற்றும் வைத்தியசாலையின் ஒழுக்காற்று அதிகாரி உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட குறித்த சுற்றறிக்கையை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“அதாவது, அவர்களின் உத்தியோகபூர்வ சீருடையில் எந்த மாற்றமும் அல்லது குறைபாடும் ஏற்படுத்தப்படவில்லை. சுகாதாரப் பணியாளர்களுக்குரிய உத்தியோகபூர்வ சீருடையிலேயே அவர்கள் வருகின்றனர். அதற்கு மேலதிகமாக, மறைக்க வேண்டிய சில பகுதிகள் இருப்பதால் அதற்குத் தேவையான ஆடைகளை அணிகின்றனர். அதற்கான மாற்றங்களைச் செய்ய முடியும் என்பது இந்த சுற்றறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கையை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், வைத்தியசாலையின் ஒழுக்காற்று அதிகாரி வைத்தியர் ரஜீந்திரன் உள்ளிட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் மேற்பார்வை அதிகாரிகள் மீறியுள்ளனர்”
சுகாதாரப் பணியாளர்களுக்கு தனியான சுற்றறிக்கை இருப்பதாகவும், ஆடை தொடர்பாகவும் சுற்றறிக்கை ஒன்று இருப்பதால் அதனை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என வைத்தியசாலை அதிகாரிகள் சட்டத்தரணிகளுடனான கலந்துரையாடலின்போது தெரிவித்ததாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.
முஸ்லிம் இளம் பெண்கள் தங்களது ஆடை காரணமாக கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்படாத விவகாரம் தொடர்பாக ஓகஸ்ட் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, அந்த நேரம் வரை இந்த விடயம் தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“இன்னும் சுமார் 90,000 பேர் வெளியில் இருக்கிறார்கள். எனவே தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி வைத்தியசாலை சேவையை சீர்குலைக்க வேண்டாம்” என அமைச்சர் கூறியுள்ளார்.
பிரச்சினை ஏதேனும் இருந்தால் அது தொடர்பாக சுகாதார அமைச்சிடம் முறைப்பாடு செய்யுமாறும் அமைச்சர் சுகாதாரப் பணியாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, முஸ்லிம் பெண் அதிகாரிகள் ஆடை தொடர்பாக எதிர்கொள்ளும் பிரச்சினை குறித்து தமது கட்சி சுகாதார அமைச்சின் செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக சமூக நீதிக் கட்சியின் தலைவரும் தெஹிவளை–கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் அர்க்கம் முனீர் ஓகஸ்ட் 12ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
