வான்வழி குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டு, 20 ஆண்டுகளாக நீதி கிடைக்காத தமிழ் சிறுமிகள் நினைவுகூரப்பட்டனர்!

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கை விமானப்படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 54 தமிழ் பாடசாலை மாணவிகள் உட்பட 61 பேர் போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவில் இரு இடங்களில் நினைவுகூரப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில், 2006 ஓகஸ்ட் 14ஆம் திகதி, முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது இலங்கை விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதலில் அங்கிருந்த 54 பாடசாலை மாணவிகளும் 7 பணியாளர்களும் கொல்லப்பட்டனர்.

மேலும், 150க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர், அவர்களில் சிலர் நிரந்தரமாக ஊனமுற்றனர்.

குண்டுவீச்சில் கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள், 20ஆவது முறையாக, 2026 ஓகஸ்ட் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு இடைக்கட்டு சந்திக்கு அருகில், சிறுவர் இல்லம் அமைந்திருந்த இடத்தில் ஒன்றுகூடி, கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர்.

மலர் தூவி, விளக்கேற்றி இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வு வன்னி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் நடைபெற்றது.

முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில், கொல்லப்பட்ட பாடசாலை மாணவிகளின் புகைப்படங்களுடன் இடம்பெற்ற நினைவேந்தலில் பிரதான விளக்கை, தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவி செல்வம் நிரோஜனியின் தாயார் செல்வம் மேரிபுஷ்பலதா ஏற்றிவைத்தார்.

இந்த நினைவேந்தலில் கொல்லப்பட்ட மாணவிகளின் உறவினர்களுடன், வன்னி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தில், அனர்த்தங்களை எதிர்கொள்வது மற்றும் முதலுதவி வழங்குவது தொடர்பான மாணவிகளுக்கான பயிற்சிப் பட்டறை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி அதிவேக போர் விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தொடர் குண்டுவீச்சில் மாணவிகள் கொல்லப்பட்டனர்.

அப்போது இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளராக இருந்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, செஞ்சோலை ஒரு விடுதலைப் புலிகளின் இராணுவப் பயிற்சி முகாம் எனக் குற்றஞ்சாட்டி, அது நியாயமான இலக்கு எனத் தெரிவித்திருந்தார்.

எனினும், இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட வடக்கில் பணியாற்றிய பல்வேறு மனிதாபிமான அமைப்புகள் உறுதிப்படுத்திய தகவல்களின்படி, செஞ்சோலை சிறுவர் இல்லம் எந்தவொரு இராணுவப் பயிற்சி நிலையமாகவும் இருக்கவில்லை.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவரான உல்ஃப் ஹென்ரிக்சன் (Ulf Henricsson), குண்டுவீச்சுக்குப் பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற தமது கண்காணிப்பாளர்கள், தாக்குதலுக்குள்ளான இடத்தில் எந்தவொரு இராணுவ நிலைப்பாடோ அல்லது ஆயுதங்களோ இருந்ததற்கான ஆதாரத்தைக் காணவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வன்முறைக்கு பலியாகியிருப்பவர்கள் அப்பாவி சிறுவர்கள் என ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) அப்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் மார்கரெட் வெனமன் (Ann M. Veneman) தெரிவித்திருந்தார்.

Latest articles

Similar articles