1996 கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் உறுப்பினர்கள் இணைந்து உருவாக்கவுள்ள 42 மாடிகளைக் கொண்ட தொடர்மாடி குடியிருப்புக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டது.
பெலவத்தையில் உள்ள டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் அமைந்துள்ள காணியில், 240 வீட்டுத் தொகுதிகள் இடம்பெறும், ஒவ்வொரு தளமும் அணியைச் சேர்ந்த ஒரு முக்கிய கிரிக்கெட் வீரரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1996 உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க அடிக்கல்லை நாட்டினார்.
“1996 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அணியில் இருந்த 14 பேருக்கும் தலா பத்து பேர்ச்சஸ் காணியை வழங்கினார். ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பின்னர், 42 மாடி அடுக்குமாடி குடியிருப்பை நிர்மாணிக்க ஒரு இந்திய முதலீட்டாளரை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்,” என ரணதுங்க கூறியுள்ளார்.
“இந்த திட்டத்தின் மூலம் 30 முதல் 40 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான முதலீட்டை இலங்கைக்கு கொண்டு வர நாங்கள் எதிர்பார்க்கின்றோம்” என அவர் மேலும் கூறினார்.
1996 உலகக் கிண்ண அணி உறுப்பினர்களான அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹநாம, ரொமேஷ் களுவிதாரண, முத்தையா முரளிதரன் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
