இலங்கை இராணுவத்தின் கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கண்டறிவதற்கான நம்பகமான, சுயாதீனமான சரிபார்த்தல் செயன்முறை எதுவும் நடைமுறையில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி, இலங்கையைச் சேர்ந்த சுமார் 900 இராணுவ உறுப்பினர்கள் மற்றும் 140 பொலிஸ் அதிகாரிகளை ஹெய்ட்டிக்கு அனுப்புவதை உடனடியாக இடைநிறுத்துமாறு பதினான்கு சர்வதேச மனித உரிமைகள் மற்றும் பாதிப்புக்குள்ளானோர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
ஐக்கிய நாடுகள் சபை, ஹெய்ட்டி அரசாங்கம் மற்றும் ஹெய்ட்டியில் வன்முறை குழுக்கள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஐ.நா. பாதுகாப்பு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பல்தேசிய பாதுகாப்புப் பணியான வன்முறைக் குழுக்கள் ஒழிப்புப் படையணியின் (GSF) நிலையியற் செயற்குழு ஆகியவற்றை விளித்ததாக, இந்த கூட்டு அறிக்கை அமைந்துள்ளது.
பணிக்கு அமர்த்தப்படும் ஆளணியினர் தொடர்பான பரிசீலனைச் செயன்முறையின் போதுமான தன்மையே கரிசனைகளின் மையப்பகுதியாக உள்ளது. இந்த சரிபார்த்தல் முதன்மையாக இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் வழங்கப்படும் தகவல்களில் மாத்திரமே தங்கியிருப்பதாகவும், கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பெயர்களை மீளாய்வு செய்வதன் மூலம் இது பூர்த்தி செய்யப்படுவதாகவும் அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன.
இது ஒரு சுயாதீனமான மனித உரிமைகள் சரிபார்த்தல் பொறிமுறையாக அமையாது என அந்த குழுக்கள் வாதிடுகின்றன.
ஏற்கனவே குறைந்தது ஒரு வேட்பாளராவது அமெரிக்க தூதரகத்தினால் லீஹி சட்டத்தின் கீழ் (Leahy Law) நிராகரிக்கப்பட்டுள்ளார் என்ற உண்மையை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இது, மனித உரிமைகள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை இலங்கை இராணுவம் முன்மொழிந்து வருகிறது என்பதற்கான சான்றாக அமைகிறது எனவும், சுய-சான்றளித்தல் செயன்முறை நம்பகமானது என்ற எந்தவொரு வாதத்தையும் இது பலவீனப்படுத்துகிறது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இலங்கை அமைதிப்படைப் பிரிவினரின் நிலைப்படுத்தல்கள் மீதான இதற்கு முந்தைய ஒரே நம்பகமான சரிபார்ப்பான — இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் (HRCSL) ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கும் (OHCHR) இடையிலான கூட்டுப் பரிசீலனை செயன்முறை 2024 இல் முறிவடைந்தது என்று அந்த குழுக்கள் குறிப்பிடுகின்றன. 2024 டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் ஆணைக்குழுவினது கற்றறிந்த பாடங்கள் தொடர்பான அறிக்கையானது இச் செயன்முறை OHCHR உடன் கூட்டாக நடத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொண்டது. ஏனெனில் OHCHR மட்டுமே இரகசிய ஐ.நா விசாரணை ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களைக் கொண்டுள்ளது. அவற்றை HRCSL சுயாதீனமாக அணுக முடியாது.
இந்த நிலைப்படுத்தலை மேற்கொள்வதில் முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருந்தவர்களாகக் கூறப்படும் இலங்கையின் இரு மூத்த அதிகாரிகள் குறித்து இக்குழுக்கள் குறிப்பாக கவலைகளை எழுப்பியுள்ளன. அவர்கள் சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் Mi-24 விமானங்களைக் கொண்ட ஒரே தாக்குதல் ஹெலிகொப்டர் படைப்பிரிவாகச் செயற்பட்ட 9ஆவது படைப்பிரிவுக்கு கட்டளையிடும் அதிகாரியாகச் செயற்பட்ட இலங்கையின் தற்போதைய பாதுகாப்புச் செயலாளர் எச்.எஸ்.சம்பத் துயகொந்த மற்றும் அதே காலப்பகுதியில் MiG-27 தரைவழித் தாக்குதல் பிரிவில் பணியாற்றிய, நியூயோர்க்கிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் இராணுவ ஆலோசகர் எயார் கொமடோர் அசேல வசந்த ஜயசேகர ஆகியோரே அவர்களாவர். இந்த இரு நபர்களும் குறிப்பிட்ட உரிமை மீறல்களுக்கு தனிப்பட்ட முறையில் பொறுப்பானவர்கள் எனக் கண்டறியப்படவில்லை என்பதை இந்த அமைப்புகள் வலியுறுத்துகின்றன. அவை வெளிப்படுத்தும் கவலை நிறுவன ரீதியானதாகும்: “எவரொருவரது நடத்தை, கட்டளைப் பொறுப்புகள் அல்லது செயற்பாட்டு வகிபாகங்கள் தம்மளவில் நியாயமான முறையில் ஒரு சுயாதீனமான மதிப்பீட்டைக் கோருகின்றனவோ, அவர் ஏனையோரைக் கண்காணிப்பதற்கும், சான்றளிப்பதற்கும் அல்லது அவர்தம் சரிபார்த்தலுக்காக வாதிடுவதற்கும் பொறுப்பாக இருத்தலாகாது,” என அந்த அறிக்கை கூறுகிறது.
இந்த அறிக்கையானது பிரதானமாக ஹெய்ட்டியில் இலங்கையின் முந்தைய அமைதிப்படை சாதனைகள் குறித்த பதிவை சுட்டிக்காட்டுகிறது. 2004 இன் பிற்பகுதிக்கும் 2007 ஒக்டோபருக்கும் இடையில், ஐ.நா கட்டளையின் கீழ் ஹெய்ட்டியில் நிலைப்படுத்தப்பட்ட அடுத்தடுத்த இலங்கை இராணுவப் பிரிவுகளைச் சேர்ந்த உறுப்பினர்களில் குறைந்த பட்சம் 134 உறுப்பினர்கள் ஒன்பது வயதுடைய சிறுவர்கள் உட்பட ஹெய்ட்டி சிறுவர்கள் மீதான பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகங்களில் தொடர்புபட்டிருந்தனர்.
ஒரு இரகசிய ஐ.நா விசாரணை இந்த துஷ்பிரயோகம் “இலங்கை இராணுவம் நிலைப்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட ஒவ்வொரு இடத்திலும் அடிக்கடி” நிகழ்ந்ததாகக் கண்டறிந்ததுடன், கட்டளையிடும் அதிகாரிகள் இதனை அறிந்திருந்ததோடு நேரடியாக இதில் தொடர்புபட்டிருந்தனர் எனவும் கண்டறிந்தது. தான் 100 இற்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக ஒரு சிறுவர் விசாரணையாளர்களிடம் கூறினார்.
ஆரம்பத்தில் 134 சந்தேகநபர்கள் பற்றிய அறிக்கைகள் இருந்தபோதிலும், பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டிய இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்துள்ளது — 2008 இல் 23 பேர் தண்டிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதில் இருந்து 18 ஆகவும், பின்னர் 9 ஆகவும், இறுதியாக 2018 தகவலறியும் உரிமை பதிலளிப்பில் 3 ஆகவும் குறைந்தது. இந்த விவகாரம் 2014 இல் முடித்து வைக்கப்பட்டுவிட்டதாக சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவிடம் இலங்கை கூறியது, ஆனால் அக்குழுவின் தொடர் கேள்விகளுக்கு அது ஒருபோதும் பதிலளிக்கவில்லை. இந்த விடயம் திருப்திகரமான முறையில் தீர்க்கப்பட்டது என்பதை எந்தவொரு ஐநா அமைப்பும் உறுதிப்படுத்தவில்லை.
இலங்கைப் படைப்பிரிவு ஆர்டிபோனைட் (Artibonite) பிராந்தியத்தில் தளம் அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது — இது இதற்கு முந்தைய கென்னியா தலைமையிலான பணியின் போது சிறுவர்களை உள்ளடக்கிய பாலியல் சுரண்டல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகள் எழுந்த அதே பிரதேசமாகும்.
இந்த நிலைப்படுத்தலின் செயற்பாட்டுத் தன்மையைக் கருத்திற் கொண்டு, பொலிஸ் படைப் பிரிவில் இலங்கையின் விசேட அதிரடிப்படை (STF) ஆளணியினர் சேர்த்துக்கொள்ளப்படலாமா என்பது குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. அமெரிக்க லீஹி சட்டக் கட்டமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மீளாய்வைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட சில STF ஆளணியினர் ஏற்கனவே விலக்கப்பட்டிருக்கலாம் என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இந்த அமைப்புகள் ஐநா மற்றும் GSF நிலையியற் குழுவிடம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றன:
• முழுமையான OHCHR பங்களிப்பு மற்றும் அனைத்து தொடர்புடைய ஐ.நா ஆவணங்களை அணுகும் வசதியுடன் கூடிய, ஒரு சுயாதீனமான சரிபார்த்தல் பொறிமுறை நடைமுறைக்கு வரும் வரை நிலைப்படுத்தலை உடனடியாக இடைநிறுத்துதல் வேண்டும்.
• சாத்தியமான நலமுரண்களைக் கொண்ட அதிகாரிகள், சரிபார்த்தற் செயன்முறையை சான்றளிப்பதில் அல்லது அங்கீகரிப்பதில் எந்தவொரு பங்கையும் வகிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.
• நிலைப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, நிலைப்படுத்தப்படும் அனைத்து ஆளணியினர்களது பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்படுதல் வேண்டும்.
• ஹெய்ட்டியில் பாதிக்கப்பட்டவர்கள் அணுகக்கூடிய, இரகசியமான முறைப்பாட்டுப் பொறிமுறையொன்றை நிறுவுதல் வேண்டும்.
மேலும் 2004-2007 காலப்பகுதிக்குரிய துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகள் தொடர்பில் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழுவின் நிலுவையிலுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும், இனங்காணப்பட்ட பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குமாறும் அவர்கள் இலங்கை அரசாங்கத்திடமும் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த அறிக்கையில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் (ITJP), இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்கான முன்னெடுப்பு, இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்துக்கான மக்கள் (PEARL) அமைப்பு, பிரித்தானிய தமிழர் பேரவை, அமெரிக்கத் தமிழர் நடவடிக்கை குழு (USTAG), சர்வதேச நீதிக்கான அவுஸ்திரேலிய நிலையம் மற்றும் இனப்படுகொலை தடுப்பு மற்றும் தண்டனைக்கான சர்வதேச நிலையம் உள்ளிட்ட பதினான்கு அமைப்புகள் கையொப்பமிட்டுள்ளன.
