உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் கிரிக்கெட் தடையை மூன்று வருடங்களில் இருந்து 3 மாதங்களாக குறைத்துள்ளது.
முடிவடைந்த லங்கா பிறிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கை ஊக்கமருந்து தடுப்பு முகவர் (SLADA) நடத்திய விசாரணையில் இது தெரியவந்ததையடுத்து, மறு அறிவித்தல் வரை நிரோஷன் திக்வெல்லவை அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த தடைக்கு எதிராக திக்வெல்ல தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீடு செய்தார்.
அந்த முறையீட்டின் பிரகாரம் திக்வெல்ல இந்த நிவாரணத்தைப் பெற்றுள்ளார்.
அந்தவகையில், ஒழுக்காற்றுக் குழுவினால் விதிக்கப்பட்ட திக்வெல்லவின் மூன்று வருட தகுதியின்மை காலம் 13 ஓகஸ்ட் 2024 முதல் 03 மாதங்களாக குறைக்கப்பட வேண்டும் என உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.
திக்வெல்லவிற்கு பயிற்சியளிக்கும் Nondescripts Cricket Club (NCC) செயலாளர் பர்வீஸ் மஹ்ரூப் கிரிக்கெட் வீரர் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனத்தின் முடிவை தமக்கு அறிவித்ததாக Newswireற்கு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட்டின் (SLC) அனுமதிக்காக கழகம் இப்போது காத்திருப்பதாக மஹ்ரூப் மேலும் கூறியுள்ளார்.
திக்வெல்ல கழகத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்பட்டிருந்தாலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முடிவின் அடிப்படையில் அவரது தகுதி குறித்து எதிர்கால முடிவு எடுக்கப்படும் என அவர் மேலும் கூறினார்.
