ஐதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் பேரவை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட் பேரவை நடத்தை விதிகளின் நிலை 1’ஐ மீறியமைக்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவுக்கு உத்தியோகபூர்வ கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு பணியாளர்களுக்கான நடத்தை விதி 2.12’ஐ பும்ரா மீறியது கண்டறியப்பட்டதோடு, இது ” சர்வதேச போட்டி ஒன்றில் ஒரு வீரர், வீரர் ஆதரவு பணியாளர், நடுவர், போட்டி நடுவர் அல்லது வேறு எந்த நபருடனும் (ஒரு பார்வையாளர் உட்பட) தகாத உடல் தொடர்பை கொண்டது.”
இது தவிர, பும்ராவின் ஒழுக்காற்றுப் பதிவில் ஒரு எதிர்மறை புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது, அவருக்கு இது 24 மாத காலப்பகுதியில் முதல் குற்றமாகும்.
இரண்டாவது இனிங்ஸில் 81ஆவது ஓவரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றது. பும்ராவின் பந்துவீச்சை இங்கிலாந்து அணியின் வீரர் ஒலி போப் அடித்து விட்டு ஓட்டத்தைப் பெற முயற்சித்தார். இதன்போது பும்ரா துடுப்பாட்ட வீரருக்கு வழிவிடாமல் அங்கே நின்று கொண்டு ஒலி போப்’ஐ தள்ளியதாக கூறப்படுகிறது.
எனினும் பும்ரா உடனடியாக மன்னிப்பும் கேட்டுவிட்டார். இந்த நடவடிக்கை ஒலி போப்பை கோபமடைய செய்தது. இது குறித்து நடுவரிடம் அவர் முறைப்பாடு செய்தார். இந்த நிலையில் பும்ரா செய்தது நடத்தை விதி 2.12′ படி தவறு என தெரியவந்தது.
கள நடுவர்கள் போல் ரீஃபெல் மற்றும் கிறிஸ் கபானே, மூன்றாவது நடுவர் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் நான்காவது நடுவர் ரோஹன் பண்டித் ஆகியோர் குற்றச்சாட்டை சுமத்தினர்.
நிலை 1 மீறல்களுக்கு உத்தியோகபூர்வ கண்டனத்தின் குறைந்தபட்ச அபராதம், ஒரு வீரரின் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50 சதவீதம் அபராதம் மற்றும் ஒன்று அல்லது இரண்டு கண்டனப் புள்ளிகள் விதிக்கப்படும். (icc with some inputs)
