ஷானகவுக்கு பதிலாக மெண்டிஸ்; இலங்கைக்கு 3 தலைவர்கள்

இலங்கையின் புதிய தெரிவுக்குழுவானது முறையே குசல் மெண்டிஸ் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோரை ஒருநாள் மற்றும் இருபதுக்கு-20 அணிகளை வழிநடத்த நியமிக்கப்பட்ட நிலையில், இலங்கையின் வெள்ளைப்பந்து தலைவராக இருந்த தசுன் ஷானகவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது.

தற்போது டெஸ்ட் அணிக்கு திமுத் கருணாரத்ன தலைமை தாங்கி வரும் நிலையில், இலங்கை அணிக்கு மூன்று விதமான தலைவர்கள் இருப்பது இதுவே முதல் முறையாகும்.

2009 லாகூர் தாக்குதலுக்குப் பின்னர், 2019இல் இலங்கை அணியின் பாகிஸ்தானுக்கான முதலாவது சுற்றுப்பயணத்தில் ஷானக தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் இலங்கை 41 ஒருநாள் போட்டிகளில் 23இலும், 48 இருபதுக்கு-20 போட்டிகளில் 22இல் வெற்றிபெற்றது. 2022 இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடம்பெற்ற இருபதுக்கு-20 ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்தமை அவரது பதவிக்காலத்தின் சிறப்பம்சமாகும், இறுதிப் போட்டியில் இலங்கை பாகிஸ்தானை வென்றது.

தென்னாப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிகள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடர் வெற்றி ஆகியவையும் குறிப்பிடத்தக்கது.

எனினும், இந்த சாதனைகள் அனைத்தும் 2021 மற்றும் 2022 இருபதுக்கு-20 உலகக் கிண்ணம் மற்றும் 2023 ஒருநாள் உலகக் கிண்ணம் ஆகியவற்றில் மோசமான தோல்விகளால் மறைந்துபோனது.

துடுப்பாட்டத்தில் அவரது மோசமான பெறுபேறு, முதன்மையாக ஒருநாள் போட்டிகளில், அவரை மிகவும் ஆய்வுக்கு உட்படுத்தியதோடு, இரசிகர்கள் அவரது இடத்தை கேள்விக்குள்ளாக்கினர். எனவே, புதிய தெரிவுக் குழு தலைவர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்வுகூறப்பட்டது.

Latest articles

Similar articles