தனது கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னரின் பச்சை நிற தொப்பி காணாமல் போயுள்ளது.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளி பதிவிட்டுள்ள டேவிட் வோர்னர், “அனைவருக்கும் வணக்கம். எனக்கு வேறு வழியில்லை என்பதால் கடைசி முயற்சியாக இந்த காணொளியை பதிவிடுகிறேன். எனது பச்சை நிற தொப்பி எனது பயணப்பையில் இருந்து காணாமல் போயுள்ளது. சில தினங்களுக்கு முன் மெல்பேர்ன் விமான நிலையத்தில் இருந்து சிட்னிக்கு எனது பயணப்பை எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது காணாமல் போயிருக்கலாம்.
கமராவில் பரிசோதித்து பார்த்தபோது போதுமான தகவல் ஏதும் கிடைக்கவில்லை. எனது தொப்பியை யாராவது எடுத்திருந்தால் தயவு செய்து கொடுத்து விடுங்கள். நான் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை. என்னிடம் மற்றொரு பை உள்ளது. அதனை உங்களுக்குப் பரிசாக கொடுக்கிறேன். ஆனால், என்னுடைய தொப்பியை மட்டும் கொடுத்து விடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்கும் அவர்களின் தொப்பி மதிப்புமிக்கதாக கருதப்படும். அதுவும் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு அந்த அணியால் வழங்கப்படும் பச்சை நிறத் தொப்பியை மிகப் பெரும் கௌரவமாக கருதுவார்கள்.
அந்தவகையில் வோர்னரும் காணாமல் போன தனது பச்சை நிற தொப்பியை கண்டுபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வோர்னர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரே தான் பங்கேற்று விளையாடும் இறுதி டெஸ்ட் தொடர் என அவர் அறிவித்திருந்தார்.
37 வயதான அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,695 ஓட்டங்களை குவித்துள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார் வோர்னர்.
இதுவரை 161 ஒருநாள் போட்டிகளில் 6,932 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 2015 மற்றும் 2023 உலகக் கிண்ணத்தை வென்ற அணியில் வோர்னர் இடம்பெற்றிருந்தார். நடப்பு ஆண்டில் இருபதுக்கு-20 உலகக் கிண்ண தொடர் நடைபெறவுள்ளது. அதில் கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அணிக்கு தேவைப்பட்டால் 2025 சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் விளையாடவும் தான் தயார் என தெரிவித்துள்ளார்.
கழக மட்ட டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும், குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணிக்கு தேவை இருந்தால் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். (hindutamil)
