வாழ்க்கையின் பெரும்பகுதியில் குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாதெனவும், சிறந்த வாழ்க்கையை பெற தன்னை சிறப்பாக வளர்த்த தன் பெற்றோருக்கு நன்றி கடன்பட்டிருப்பதாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவுஸ்திரேலியய வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.
தனது இறுதி போட்டிக்கு பின்னர் மனைவி குறித்து உணர்வுபூர்வமான பல கருத்துக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
“நம் வாழ்க்கையின் பெரும்பகுதியில் குடும்பத்தினர் ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. சிறந்த வாழ்க்கையை பெற, என்னை சிறப்பாக வளர்த்த என் பெற்றோருக்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன். எனது சகோதரர் ஸ்டீவ், அவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றியே இந்த நிலையை எட்டினேன்.” என அவர் தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“என் மனைவி கேண்டீஸ், எங்களுக்கென ஓர் அழகான குடும்பம். குடும்பத்துடன் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் நான் நேசிக்கிறேன். என் மரணம் வரை அந்த நேசம் தொடரும். இதற்கு மேல் பேச வேண்டாம், ஏனென்றால் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிடுவேன். ஆனால், கேண்டீஸ். உலகம் என்றால் நீதான். குடும்பத்துக்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதாலேயே ஓய்வு முடிவு எடுத்தேன்” என உருக்கமாக பேசியுள்ளார் வோர்னர்.
