நீபதிகளின் சேவைக்கால வயதெல்லையை அதிகரிக்கும் முன்மொழிவுகளைத் திரும்பப் பெறுமாறு கோரிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) பிரதிநிதிகள், கடந்த வாரம் ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பான முழுமையான காணொளியை ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) வெளியிடவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம், அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையானது பாரிய பிரச்சினையாகவும் தொடர்ந்து வருகின்றது.
ஜனாதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை பல மணி நேரம் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜனாதிபதியின் உரையை மட்டும் உள்ளடக்கிய சில நிமிட காணொளியைத் தெரிவுசெய்யப்பட்ட ஊடகங்களுக்கு மாத்திரம் வெளியிடுவதற்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) நடவடிக்கை எடுத்திருந்தது.
காணொளி தொடர்பான சர்ச்சை
இரண்டு நாட்களுக்குப் பின்னர், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகத்திற்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) நிர்வாகச் செயலாளர் சுரணி சமரசேகர அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனாதிபதியுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் அனைத்து சட்டத்தரணிகளும் தெரிவித்த கருத்துகள் மற்றும் வெளிப்படுத்திய எண்ணங்கள் அடங்கிய திருத்தம் செய்யப்படாத முழுமையான காணொளியை தமது சங்கத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதேபோல், ஜனாதிபதி ஊடகப் பிரிவு வழங்கியுள்ள குறுகிய காணொளியில், கலந்துரையாடலின் ஆரம்பப் பகுதி மட்டுமே இடம்பெற்றுள்ளதாகவும், அதிலும் சில இடங்களில் ஒலி குறைவாக இருப்பதாகவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலந்துரையாடல் நடைபெற்ற அன்றைய தினமே, ஜனாதிபதியின் ‘உத்தியோகபூர்வ அறிக்கை’ இடம்பெற்ற, திருத்தப்படாத காணொளிப் பதிவு ஒன்று சங்கத்திற்கு வழங்கப்பட்டதாக, குறித்த கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகம் அன்றைய தினமே இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அனுப்பிய பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கலந்துரையாடலில் பங்கேற்றவர்களின் ஏனைய கருத்துகள் மற்றும் தலையீடுகளின் பதிவுகள், நீங்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்கவும், உத்தியோகபூர்வ நடைமுறைகளுக்கு உட்பட்டும், உரிய காலத்தில் நடைமுறைகளுக்கு ஏற்ப மிக விரைவில் வழங்கப்படும்” என பணிப்பாளர் நாயகம் பிரசன்ன பெரேரா ஓகஸ்ட் 14ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு, ஒன்று
எனினும், சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி ஊடகப் பிரிவு பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதம் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, குறித்த கலந்துரையாடலின்போது சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கருத்துத் தெரிவித்த காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் ஒளிபரப்பப்பட்டதன் ஊடாக இந்த விவகாரம் தொடர்பில் மேலும் பல கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்துள்ளன.
நீதித்துறைக்கு மிகவும் தீர்மானமிக்க விதத்திலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுமான ஒரு விடயம் தொடர்பில், நாட்டின் சட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னணி நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் நிறைவேற்று ஜனாதிபதி தலைமையிலான பொறுப்புவாய்ந்த அரசியல் அதிகாரிகளுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் தகவல்களை மறைத்து, ஒருதலைப்பட்சமாக அரசாங்கம் அதனைப் பிரசாரம் செய்வது எந்த அளவுக்கு நியாயமானதும் ஒழுக்கநெறிக்கு உட்பட்ட விடயம் என்ற கேள்விகளை எழுப்புவதற்கு காரணமாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றினால் ஒளிபரப்பப்பட்ட, காணொளியில், சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, கலந்துரையாடலின் ஆரம்ப கட்டத்தில் தெரிவித்த கருத்துகளையும், அதன் பின்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் அறிக்கையையும் நன்கு ஆராயும்போது, மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயம் என்னவெனில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கேள்விக்குரிய விடயத்தை ஆழமாக ஆராயாமல், தனக்குப் பரீட்சயமான வழக்கமான சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தி அதனை எதிர்கொள்ள முயன்றுள்ளார் என்பதாகும்.
கேள்விக்கு சம்பந்தமில்லாமல் பேசுவது
“கலந்துரையாடலுக்குப் பின்னர் நிலைமை சாதகமானதாக மாறக்கூடும்” என ஜனாதிபதி செயலக நுழைவாயில் அருகே வைத்து, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காரிலிருந்து இறங்காமலேயே ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தாலும், கலந்துரையாடலில் பங்கேற்ற பின்னர் எம்முடன் பேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏனைய பிரதிநிதிகளிடமிருந்து அவ்வாறான நம்பிக்கையான வார்த்தைகள் வெளிப்படுத்தப்படவில்லை.
“நாம் இந்தப் பிரச்சினை தொடர்பான விடயங்களையே முன்வைத்தோம். ஆனால், ஜனாதிபதி அவற்றுடன் எந்தவிதத்திலும் பொருந்தாத, சம்பந்தமற்ற சில பதில்களையே வழங்கினார்” என கலந்துரையாடலில் பங்கேற்ற நாட்டின் மிகவும் அனுபவமிக்க மற்றும் மூத்த ஜனாதிபதி சட்டத்தரணிகளில் ஒருவர் எம்மிடம் தெரிவித்தார். ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகள் சங்கத்திற்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறைக்க முயற்சிக்கும் உண்மை என்ன என்பது குறித்து நாம் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாம் பேசச் சென்றது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு தொடர்பாகவோ, அல்லது ஜனாதிபதி பதவியில் எவ்வளவு காலம் இருப்பார் என்பது தொடர்பாகவோ அல்ல. இந்தப் பிரச்சினைக்கு அவை எவ்விதத்திலும் சம்பந்தமில்லை. ஆனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு போன்ற ஒரு விடயத்தை இதனுடன் தொடர்புபடுத்தி, உண்மையான பிரச்சினையிலிருந்து விலகிச் செல்லவே ஜனாதிபதி விரும்புகிறார். அதுமட்டுமன்றி, இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதையோ, அவற்றில் அரசியலைக் கொண்டுவருவதையோ எங்களில் எவரும் விரும்பவில்லை” என தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கோரிய குறித்த ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
“எனக்கு போக வேண்டி வந்தாலும் நான் போவதற்கு தயாரான ஒருவன்” அதேபோன்று, இந்த மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனில், நிச்சயமாக ஒரு ஆபத்தை ஏற்க வேண்டியிருக்கும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையானது, புலனாய்வுப் பிரிவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனது பாதுகாப்புக்கும் அவர்களே பொறுப்பானவர்கள். இந்த நிலையில் எனது உயிருக்கு கூட ஆபத்து இருக்கக்கூடும் என்பதை நான் அறிவேன்” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்
“நாங்கள் கலந்துரையாடச் சென்றது நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாகவே. நாட்டு மக்களுக்கு உணர்வுபூர்வமான ஒரு வழக்கை இதனுடன் தொடர்புபடுத்தி, கவனத்தை வேறு திசைக்குத் திருப்பவே ஜனாதிபதி முயன்றார். அதை நாங்கள் புரிந்துகொண்டோம். மேலும், நீதிபதிகள் ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாலோ அல்லது ஓய்வுபெறுவதாலோ ஒரு வழக்கில் பாதிப்பு ஏற்படும் என்று வாதிடப்படுமாயின், உண்மையில் அந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு போதிய அறிவு இல்லை என்பதையே நாங்கள் அங்கு புரிந்துகொண்டோம்” என குறித்த ஜனாதிபதி சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி, சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்ட கருத்து, மிகவும் நிதானமாகவும், நீதித்துறையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடனும் நேர்மையாக முன்வைக்கப்பட்டதாக சிலர் கூறினாலும், சட்டத்துறையினரின் கருத்துப்படி, ஜனாதிபதியின் கருத்தினுள் நிறைவேற்று அதிகாரத்தின் கர்ஜனை பொதிந்திருந்ததது என்பதாகும். ஜனாதிபதி சட்டத்தரணியும், “நிச்சயமாக, நூறு சதவீதம்” அவ்வாறே இருந்ததாகவும், கலந்துரையாடலில் பங்கேற்ற சட்டத்தரணி பிரதிநிதிகளுக்கும் அந்த சந்தர்ப்பத்திலேயே அவ்வாறான உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
“நூறு சதவீதம் அது அவ்வாறு தான். அவர் இறுதியாகக் கூறிய விடயங்களில் நுட்பமான ஓர் அச்சுறுத்தல் இருந்தது. எனக்கு வேண்டியதை எப்படியாவது நான் செய்தே தீருவேன் என்ற கருத்தே ஜனாதிபதியின் பேச்சிலும் அவரது நடத்தையிலும் வெளிப்பட்டது” என குறித்த ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
“எல்லையை மீறாதீர்கள்” என ஜனாதிபதி மறைமுகமாக கூறினார்
“அரசியலமைப்பை மாற்றுவதற்கான அதிகாரம் அரசாங்கத்துக்கு உள்ளது. அதனை மாற்றுவது எமது உரிமையாகும்” என சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும், சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது ஜனாதிபதி தெரிவித்த கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது.
“எனவே, இதனால் நீதித்துறைக்கு மிகப்பெரிய அழிவு ஏற்பட்டு, அனைத்து விடயங்களும் சீர்குலைந்து, இதற்குப் பின்னர் நீதித்துறை தொடர்பில் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை முற்றாகச் சிதைந்துவிடும் நிலை உருவாகும் என்று கூறுவது, சற்று எல்லையைத் தாண்டி விடயங்களை முன்வைப்பதாகும். அதுதான் போராட்டங்களின் இயல்பு. அதை என்னால் புரிந்துகொள்ள முடியும். ஒரு போராட்டத்தை முன்னெடுக்கும்போது, அந்தப் போராட்டத்திற்கான உண்மையான வாதத்தைவிட சற்று மேலான மட்டத்தில் அந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அது எனக்குத் தெரியும். அப்போது எங்களால் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்க முடியும். இதற்குப் பின்னர் நீதித்துறை தொடர்பில் மக்களின் நம்பிக்கை பாதிக்கப்படலாம் என்ற வகையிலான விடயங்கள் எழக்கூடும்” என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் முன்னணி சட்ட வல்லுநர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.“ எனக்கும் போராடுவதற்கு தெரியும், சரி, நாம் செய்து பார்ப்போம்” என்ற தொனியில், நுட்பமான அச்சுறுத்தலுடன் புன்னகையுடன் கூடிய முகபாவனையுடன் ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததார் என அந்த சட்டத்தரணி தெரிவித்தார்.
இவ்வளவு சர்ச்சைக்குரியதும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியாகக் கடுமையான கவனத்தை ஈர்த்துள்ளதுமான மிக முக்கியமான சட்டத் திருத்தம் தொடர்பில், பிரதான இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் முழுமையான தகவல்களையும் முறையாக அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு என்பதில் எவ்வித விவாதத்திற்கும் இடமில்லை என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் முன்வைக்கப்படும் நீதிபதிகளின் வயது வரம்பை அதிகரிக்கும் நடவடிக்கையானது வெறும் நிர்வாக ரீதியான அல்லது சாதாரண சட்டரீதியான பிரச்சினைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல எனவும், நாட்டு மக்களின் அனைத்து நடவடிக்கைகளிலும் நேரடியாக தாக்கம் செலுத்தக்கூடிய ஒரு தீர்மானமிக்க திருப்புமுனையாகும் எனவும் இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளரும், இலங்கையின் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயற்பாட்டின் முன்னோடியுமான மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்தார்.
இது நீதித்துறையின் சுயாதீன தன்மைக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். நீதிபதிகளின் வயது வரம்பை அதிகரிப்பதற்காக அவர்களின் பணிகளில் தலையிடவோ அல்லது குறுக்கிடவோ நிறைவேற்று அதிகாரம் முயற்சித்தாலோ, அல்லது நீதித்துறை நடவடிக்கைகளில் எந்தவொரு வகையிலாவது தலையிட நிறைவேற்று அதிகாரம் முயற்சித்தாலோ, அதன் மூலம் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும்” என சட்டத்தரணி விஜேநாயக்க எம்முடன் இடம்பெற்ற காணொளி கலந்துரையாடலின் போது தெரிவித்தார்.
நீதிபதிகளின் வயதெல்லையை இவ்வாறு அவசரமாகவும் தன்னிச்சையாகவும் அதிகரிக்க முயற்சிப்பதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்காது என்றும், மாறாக எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் தோன்றக்கூடும் என்றும், குறிப்பாக, நாட்டில் இடம்பெறும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளில் இது நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜேநாயக்க எச்சரித்தார்.
“இது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான வழக்குகளில் நேரடியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினையாகும். ஒருவரின் மனித உரிமைகள் மீறப்பட்டாலோ அல்லது அவ்வாறு மீறப்படக்கூடும் எனக் கருதப்பட்டாலோ, அது தொடர்பில் தாக்கல் செய்யப்படும் மனுவில் பிரதிவாதிகளாக இருப்பது நிறைவேற்று அதிகாரமும் நிர்வாகமும் என்பதை நாம் அறிவோம். அரசாங்கத்திடமும் அரசிடமும் கேள்வி எழுப்புவதற்கு நீதிமன்றத்திற்கு உரிமையும் அதற்கான அதிகாரமும் உள்ளது. நீதித்துறைக்கு இவ்வாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படும்போது, அதன் சுயாதீனத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடும்” என அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் குழு மற்றும் நிறைவேற்றுக் குழுவின் உறுப்பினருமான அவர் இதனைத் தெரிவித்தார்.
குழப்பத்திற்கு மேல் குழப்பம்
எவ்வாறாயினும், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான திருத்தச் செயற்பாட்டில் மாற்றம் எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டால், எதிர்காலத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்யக்கூடும். அவ்வாறான நடவடிக்கை மேலும் ஒரு சட்டரீதியான நெருக்கடிக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் லால் விஜேநாயக்க எச்சரித்துள்ளார்.
“இந்தச் சட்டமூலத்திற்கு எதிராக எங்களால் நீதிமன்றத்தை நாட முடியும். ஆனால், இந்த மனுக்களையோ அல்லது வழக்குகளையோ யார் விசாரித்து தீர்ப்பளிப்பார்கள்? இந்தச் சட்டமூலத்தின் நேரடித் தரப்பினராக இருப்பவர்கள் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளே. அவர்களால் அதனை விசாரிக்க முடியாமல் போகலாம், ஏனெனில், இங்கு நலன் முரண்பாடு ஏற்படும்” என மூத்த சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெளிவுபடுத்தினார்.
எவ்வாறாயினும், முழுமையான அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி இந்தத் தருணத்தில் நாட்டுக்கோ அல்லது சட்டத்துறைக்கோ எந்தவிதத் தேவையும் இல்லாததும், நீதிபதிகள் சமூகத்தினரால் எவ்வித கோரிக்கையும் முன்வைக்கப்படாததுமான ஒரு சட்டத் திருத்தத்தை நாட்டில் கொண்டுவந்து, மேற்கொள்ள முயற்சிக்கும் தன்னிச்சையான நடவடிக்கையின் மூலம், ஒட்டுமொத்த சட்ட மற்றும் நீதித்துறை அமைப்பும் மிகவும் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்க முடியாது என சட்ட மற்றும் அரசியலமைப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கே .விஜேசிங்க
