தென்கொரியாவில் விமானம் விபத்துக்குள்ளாகி 179 பேர் உயிரிழந்த நிலையில், நாட்டின் விமான போக்குவரத்து அமைப்பின் பாதுகாப்பு தரத்தை முழு வீச்சுல் ஆய்வு செய்யுமாறு பதில் ஜனாதிபதி சோய் சாங்-மாக் (Choi Sang-mok) உத்தரவிட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான ஜேஜு விமானத்தினை மீட்கும் பணி முழுமையாக நிறைவு பெற்ற பின்னர், இந்த ஆய்வினை ஆரம்பிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
விமானங்களின் தரம், விமான போக்குவரத்து முகாமைத்துவ்ம், விமான நிலைய ஓடுபாதைகளின் நிலை என அனைத்தையும் உள்ளடக்கி விரிவான ஆய்வுக்கு பதில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, தென் கொரிய விமான விபத்துக்கு பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
“பெல்லி லேண்டிங் முறையில் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் நுரை தெளித்திருக்க வேண்டும். தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். சுற்றுச்சுவரை அகற்ற வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காததே விபத்துக்கு காரணம்” என அவுஸ்திரேலிய ஏர்லைன்ஸ் நியூஸ் சமூக ஊடக ஆசிரியர் ஜெப்ரே தோமஸ் குறிப்பிட்டிருந்தார்.
“பறவை மோதி சக்கரம் செயலிழந்ததாக கேள்விப்பட்டதே இல்லை” என ஜெப்ரே டெல் என்ற நிபுணர் கூறியுள்ளார். “தரையிறங்கியதும் விமானத்தின் வேகத்தை குறைக்காதது தவறு” என்று டெரவர் ஜென்சன் என்ற நிபுணர் தெரிவித்தார். இந்நிலையில் தான் பாதுகாப்பு தொடர்பாக விரிவான ஆய்வுக்கு தென்கொரிய பதில் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தென்கொரியாவின் முவான் நகரில் நேற்றைய தினம் (டிசம்பர் 29) நிகழ்ந்த விமான விபத்தில் பயணிகள், விமானிகள் உட்பட 179 பேர் உயிரிழந்தனர். விமானம் முழுமையாக தீக்கிரையானது. அதன் பின்பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் மாத்திரமே பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
ஓடுபாதையில் விமானத்தின் அடிப்பகுதி உரசியபடி சென்ற நிலையில், திடீரென ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம் பலத்த வேகத்தில் சுற்றுச்சுவரில் மோதியது. இதில் விமானம் தீப்பிடித்தது.
தென்கொரிய வரலாற்றில் மிக மோசமான விமான விபத்தாகக் கருதப்படும் இந்த விபத்தையடுத்து 7 நாட்கள் தேசிய அளவில் துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
