லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ: அணையுமா? அதிகரிக்கும் உயிரிழப்பு (முழு விபரம்)

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் ஏற்பட்ட காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதோடு, காட்டுத் தீ காரணமாக, குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கணக்கான கட்டடங்கள் தீக்கிரையாகியுள்ளன.

தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சுமார் 2 இலட்சம் மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, வரும் நாட்களில் இந்த தீ மேலும் பரவலாம் என அஞ்சப்படுகிறது.

மக்கள் தங்களால் இயன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதைத் தவிர, இரண்டு இலட்சம் பேர் விரைவில் வீடுகளை விடடு வெளியேற நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவவேளை, மக்கள் வெளியேற்றப்பட்ட சில பகுதிகளில் கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெலிசேட்ஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள கடுமையான தீயைப் போலவே, ஈட்டன் பகுதியிலும் தீ முற்றிலும் கட்டுப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையில், ஹொலிவுட் ஹில்ஸ் பகுதியில் பரவிய தீ குறையத் தொடங்கியுள்ளது, ஆனால் அதுவும் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படவில்லை.

ஹொலிவுட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீடுகள், பாடசாலைகள் மற்றும் வணிக கட்டடங்கள் உட்பட 5,300 கட்டடங்கள் அழிந்துள்ளன.

காட்டுத் தீயால் வீடுகளை இழந்த பிரபலங்களில் சில நாட்களுக்கு முன்பு கோல்டன் குளோப் விருதுகளில் கலந்து கொண்ட லைடன் மீஸ்டர், அடம் பிராடி மற்றும் பரிஸ் ஹில்டன் ஆகியோர் அடங்குவர்.

அமெரிக்க காப்பீட்டுத் துறையானது, அமெரிக்க வரலாற்றில் இது மிகவும் விலையுயர்ந்த காட்டுத் தீயாக இருக்கும் என்று அஞ்சுகிறது. ஏனெனில் தீயினால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு மிக அதிகமாக உள்ளது.

சுமார் 8 பில்லியன் டொலர் மதிப்புள்ள காப்பீடு செய்யப்பட்ட சொத்துக்களை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் தெற்கு கலிபோர்னியாவிற்கான தீ முன்னறிவிப்பு மிகவும் தீவிரமான நிலையில் இருந்து கடுமையானதாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த தீயால் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் கலிபோர்னியாவின் பல பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன.

தீ அணைப்புக்கான ஏற்பாடுகள் குறித்தும் அரசியல் சர்ச்சை கிளம்பியுள்ளது. சில தீயணைப்பு வீரர்கள், தீயணைக்கப் பயன்படுத்தும் குழாய்களில் தண்ணீர் கூட இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், இம்மாதம் 20ஆம் திகதி பதவியேற்கவுள்ள நிலையில், இப்பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த காட்டுத்தீக்கு பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலையே காரணம் என உள்ளூர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வானிலையால் மரங்கள், செடிகள் காய்ந்து, தீ பரவுவது எளிதாகிவிட்டது.

ஆனால், தீக்கான காரணம் தெரியவில்லை எனவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிக காற்று மற்றும் மழையின்மை தற்போதைய தீ பரவ காரணமாக இருந்தாலும், காலநிலை மாற்றம் சூழலை மாற்றுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மேற்கு அமெரிக்காவில் ஏற்படும் மிகப்பெரிய காட்டுத் தீ, காலநிலை மாற்றத்துடன் தொடர்புடையது என அமெரிக்க அரசாங்கத்தின் ஆராய்ச்சி தெளிவாகக் கூறுகிறது.

வெப்பமிகுந்த கோடைக்காலம் மற்றும் சமீபத்திய மாதங்களில் மழையின்மையின் காரணமாக, கலிபோர்னியா பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அறியப்படுகின்றது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் காட்டுத்தீ ஏற்படும் காலமாக, மே முதல் ஒக்டோபர் மாதங்கள் பொதுவாக கருதப்படுகிறது.

இந்தத் தீ பரவுவதற்கு ஒரு முக்கிய காரணம் நிலத்திலிருந்து கடற்கரையை நோக்கி வீசும் ‘சாண்டா அனா’ எனப்படும் காற்றாகும்.

மணிக்கு 100 கிலோமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் வீசும் இந்தக் காற்று, தீயை எரியூட்டியதாக நம்பப்படுகிறது.

கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்து அமெரிக்கக் கடற்கரையை நோக்கி சாண்டா அனா காற்று வீசுகிறது. மேலும் வருடத்திற்கு பல முறை இக்காற்று வீசுவதாக அறியப்படுகின்றது.

சாண்டா அனா காற்று பொதுவாக செப்டெம்பர் பிற்பகுதியிலிருந்து மே மாதம் வரை வீசும். பொதுவாக இந்த காற்று சில நாட்களுக்கு மட்டுமே வீசும், ஆனால் சில நேரங்களில் அவை பல வாரங்களுக்கு தொடர்ந்து வீசுவதையும் காணமுடியும். (BBC Tamil with minor changes)

 

Latest articles

Similar articles