ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் தங்களைச் சந்திப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கையில் வசிக்கும் ரோஹிங்கியா பிரதிநிதியொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“2024 டிசெம்பரில், 57 சிறுவர்கள் உட்பட சுமார் 116 ரோஹிங்கியா மக்கள் ஆபத்தான கடல் பயணத்திற்குப் பின்னர் இலங்கைக்கு வந்தனர். இதன்போது இரண்டு படகுகள் மூழ்கியதில் ஆறு பேர் உயிரிழந்தனர். வன்முறை, சித்திரவதை, இடம்பெயர்வு மற்றும் அச்சுறுத்தல் போன்ற, அவர்கள் எதிர்கொண்ட அனுபவங்கள், அவர்கள் அரசியல் பாதுகாப்பை நாடுபவர்கள் என்பதை எடுத்துக்காட்டுகின்றன. எனினும், அவர்கள் 20 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மனிதாபிமான உதவிகளைப் பெறுவதற்கும் மட்டுப்படுத்தப்பட்ட அணுகல் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தத் தடுப்புக்காவலில் உள்ளவர்களை விடுவிப்பதுடன், அதுவரை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு, சட்டத்தரணிகள், மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் அவர்களைச் சந்திக்க அனுமதிக்குமாறும், அரசியல் பாதுகாப்பை நாடுபவர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ எனக் குறிப்பிடுவதைத் தவிர்க்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம்.” என மொஹமட் அன்வர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு 2026 செப்டெம்பர் 7ஆம் திகதி பிற்பகல் ஜெனீவாவில் ஆரம்பமானது.
இலங்கையில் வசிக்கும் ரோஹிங்கியா அகதியான மொஹமட் அன்வர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, இலங்கையில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட வேறு எந்த நாட்டிலும் நிரந்தர குடியிருப்பு பெற முடியாத ஏனைய அகதிகளுக்கும் குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.
“மியன்மாரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், தற்போது இனப்படுகொலை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், அது முடிவுக்கு வருவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவும் தகவல்களை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. நாங்கள் ரோஹிங்கியாக்கள், நாடற்றவர்களாக உள்ளோம். எனவே, இலங்கையில் வசிக்கும் ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட வேறு எந்த நாட்டிலும் நிரந்தர வதிவிடத்தைப் பெற முடியாத ஏனைய அகதிகளுக்கு குடியுரிமை அல்லது நிரந்தர வதிவிட அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.”
அரசியல் பாதுகாப்பை நாடும் ரோஹிங்கியாக்கள் மற்றும் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் இலங்கையின் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நிறுத்துமாறும் அவர் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இலங்கைக்குள் வந்த 40-இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 100-இற்கும் அதிகமானோரை கொண்ட முதலாவது அகதி குழுவான ரோஹிங்கியாக்கள், கடலில் சிக்கித் தவித்தபோது அவர்கர்களை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வன்னிப் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே முதலில் மீட்டனர்.
முல்லைத்தீவு விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரில் இருந்து தப்பிவந்த ரோஹிங்கியா போரினால் பாதிக்கப்பட்ட அகதிகளை மீண்டும் மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதாக கடந்த ஆண்டு ஆரம்பத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்த கருத்துக்கு, குடிமைச் சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமன்றி அரசியல்வாதிகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
வடக்கு கடற்பரப்பில் தமது உயிர்களைக் காப்பாற்றிய இலங்கை கடற்படையினருக்கு நன்றி தெரிவித்த மொஹமட் அன்வர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றியபோது, பாணந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து ரோஹிங்கியாக்களினதும் வாழ்வாதாரம், குடியிருப்பு, உணவு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டும் என இலங்கை அரசாங்கத்திடம் மேலும் கோரிக்கை விடுத்தார்.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கைகளையும், மியன்மாருக்கான சுயாதீன விசாரணை பொறிமுறையின் அறிக்கைகளையும் நான் கருத்திற்கொள்கிறேன். 2024 டிசெம்பரில் யாழ்ப்பாணத்திற்கு அப்பால் கடற்பரப்பில் இருந்து சுமார் 105 ரோஹிங்கியாக்களை இலங்கை கடற்படை மீட்டமைக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். பாணந்துறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் அனைத்து ரோஹிங்கியாக்களினதும் வாழ்வாதாரம், குடியிருப்பு, உணவு, கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான உரிமைகளை உறுதி செய்யுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.”
ரோஹிங்கியாக்களை மீண்டும் மியன்மாருக்கு அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, அகதிகள் தொடர்பான 1951ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சாசனம் உள்ளிட்ட மனிதாபிமானக் கோட்பாடுகள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளை மீறும் செயலாகும் என சோனகர் இஸ்லாமிய கலாசார நிலையத்தின் தலைவர் ஒமர் கமில், 2025ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
