இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது, இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையமாட்டார்கள் என்ற உறுதிமொழியை இந்திய தரப்பின் பிரதிநிதிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா என்பது குறித்து வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவர் சங்கத் தலைவர் ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் “நீண்டகாலமாக நிலவி வரும் மீன்பிடிப் பிரச்சினைகள் உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக”, எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை அதிகாரிகள் குழுவொன்று இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
“குறிப்பாக, இந்தியாவிலிருந்து இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறையான இழுவைமடி (Bottom Trawling) முறையைப் பயன்படுத்தும் மீன்பிடிப் படகுகளால் வடக்கு கடற்பரப்பில் உள்ள கடல் வளங்கள் பெருமளவில் சேதமடைந்து வருகின்றன. இதனால், வடக்கு பிரதேச மீனவர்களின் தொழில் மற்றும் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.” என கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, கடல் வளங்களைப் பாதுகாப்பது மற்றும் இலங்கையின் கடல் எல்லையை பாதுகாப்பது தொடர்பான விடயங்களுக்கு, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது, முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தையின் அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும் சாத்தியம் உள்ளதா என, வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளரும், ஊடகப் பேச்சாளருமான என். எம். ஆலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அங்கு பேச்சுவார்த்தைக்குச் செல்லும் அதிகாரிகள் குழுவால், இந்திய மீனவர்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழையமாட்டார்கள் என்ற உறுதிமொழியை அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியுமா? அல்லது இந்தியாவிடமிருந்து அவ்வாறான உறுதிமொழியைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுமா? என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.”
இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தை சுற்றின் பின்னர், இரு நாடுகளின் மீனவர் சங்கங்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக, கடற்றொழில், நீரியல்வள மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்ததிருந்தார்.
அதிகாரிகளுக்கு இடையில் முன்மொழியப்பட்டுள்ள பேச்சுவார்த்தையின் போது, எதிர்பார்க்கப்படும் நோக்கம் நிறைவேறாமல் இரு நாடுகளின் மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படுமானால், இந்திய மீனவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்குமாறு எம். எம். ஆலம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
“இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மீனவர்களுக்கு இடையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்தார். அவ்வாறிருந்தாலும், இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே நாம் கூறி வருவது என்னவென்றால், இலங்கையின் கடல் எல்லைக்குள் வரும் இந்திய, குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களுக்கு, இலங்கை அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டுள்ள ட்ரோலர் படகுகள் போன்ற மீன்பிடி முறைகளையும் தடை செய்ய வேண்டும் என்பதாகும். அவ்வாறு தடை விதிக்கப்பட்டால் மாத்திரமே எங்களால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.”
கடலில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அண்டை நாடுகளின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நாளாந்த நிதியுதவித் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்பிடி விவகாரங்களுக்கான தமிழக அமைச்சர் ஆல்நாத் ஸ்ரீநாத் செப்டெம்பர் 2ஆம் திகதி மாநில சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
“சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பங்களைப் பாதுகாக்கும் நோக்கில், மாநில அரசால் வழங்கப்படும் நாளாந்த நிதியுதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக அதிகரித்து வழங்கப்படும்.”
இதன் மூலம் தமிழ்நாடு அரசு, தமது கடல் எல்லையை தாண்டி மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தமிழ்நாட்டு மீனவர்களை ஊக்குவிப்பதாகும் என வட மாகாண மீனவர சங்கத் தலைவரான மொஹமட் ஆலம், மன்னாரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
“மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இலங்கையின் கடல் எல்லையை மீறியதற்காக சிறையில் உள்ள மீனவர்களுக்கு முந்தைய அரசாங்கம் வழங்கிய 500 ரூபாய் நாளாந்த நிதியுதவியை 600 ரூபாயாக அதிகரித்து, மாதத்திற்கு 18,000 ரூபாய் வழங்க தமிழ்நாடு அரசு தீர்மானித்துள்ளது. அதாவது, இதற்கான நிதியை வரவு–செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க முடிவு செய்துள்ளது. உண்மையில், இங்குதான் பிரச்சினை உள்ளது. சட்டவிரோதமான நடவடிக்கையின் காரணமாக கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு அல்லது ஒரு குழுவினருக்கு நிதியுதவி வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? அதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது? சர்வதேச ரீதியாகவோ அல்லது வேறு எந்த மட்டத்திலோ குற்றம் செய்தவர்கள் எனக் கருதப்பட்டு சிறையில் இருக்கும் ஒருவருக்கு, ஒரு நாடோ அல்லது ஒரு மாநிலமோ நிதியுதவி வழங்குவது எவ்வாறு சரியானதாக இருக்க முடியும்? அப்படியானால், அவர்கள் இதற்கு ஆதரவளிக்கிறார்களா?”
இந்திய வெளிவிவகார செயலாளர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, மீனவர் பிரச்சினைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டு பொறிமுறையொன்றை முன்மொழிந்து ஒரு வாரம் கடந்துள்ள நிலையில், இலங்கை கடற்பரப்பின் “அடிவரை” சுரண்டி வரும் இந்திய மீன்பிடிப் படகுகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை இனியும் முன்னெடுக்காமல் இருப்பது என்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மாற்றியுள்ளதாக, குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவித்திருந்தார்.
“பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இருதரப்பு பொறிமுறைகள் தொடர்ந்து செயற்பட்டு வரும் நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மனிதாபிமான அணுகுமுறையே எமது அணுகுமுறைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியதாக, அவர் பயணத்தை நிறைவு செய்து கொண்டதையடுத்து, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஒகஸ்ட் 5ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள மீனவர்கள் திருப்தியடையும் வகையிலான நிலையான தீர்வு எதுவும் வழங்கப்படாமல், டெல்லியில் நிறைவடைந்த, நரேந்திர மோடி மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் முதலாவது அரச தலைவர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 2024 டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து, அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
