இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, ஆட்சியில் உள்ள கட்சி மாத்திரமன்றி, முக்கிய சிங்கள அரசியல் கட்சிகளின் தலைமைகளும் தயாராக இல்லை என சர்வதேச மனித உரிமை அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
யுத்தக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள் முக்கிய அரசியல் கட்சிகளிடமிருந்து எந்தவிதமான எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் தண்டனையிலிருந்து விலக்குப் பெற்றுள்ளதாக கண்காணிப்பகத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் “போர்வீரர்கள்” எனப் போற்றப்படுவதால், இந்தத் தண்டனையின்மை நிலை தொடர்வதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
“தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு எதிரான மோதலின்போது, குறிப்பாகப் போரின் இறுதி மாதங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் எண்ணற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், அந்த மோதலில் ஈடுபட்ட எந்தவொரு ‘போர்வீரரும்’ தண்டிக்கப்படுவதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்பதை பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்” என அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும், சட்டத்திற்கு புறம்பான கொலைகள், சித்திரவதைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் ஏனைய பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பானவர்களில் மிகச் சிலரே இதுவரை பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் உருவான தண்டனையின்மை கலாசாரம் இன்றும் தொடர்கிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கடுமையான மனித உரிமை மீறல்களுக்கான நீதியைத் தாமதப்படுத்தியும் மறுத்தும் வந்த கடந்தகால அரசாங்கங்களின் நடைமுறையிலிருந்து திசைதிரும்புவதற்கு திஸாநாயக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்தகாலக் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் நம்பகத்தன்மையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான பணிப்பாளர் லூசி மெக்கெனன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தமிழர்களுக்கு எதிராக அரச தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படும் மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சித்துள்ளது.
2024 செப்டெம்பரில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரான அனுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.
அவரது கட்சி, விரிவான சட்ட மறுசீரமைப்புகள் மூலம் மனித உரிமைகளை நிலைநிறுத்துவதுடன், அரசியல் கொலைகள் மற்றும் கடத்தல்கள் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதாக உறுதியளித்திருந்தது.
நீதித்துறையில் நிலவும் தாமதங்களை நீக்குவதற்காக அரச வழக்குத் தொடர்ப்புப் பணிப்பாளர் அலுவலகத்தை உருவாக்குதல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து சுயாதீனமாக இயங்கக்கூடிய மாகாண அலுவலகங்களை நிறுவுதல் உள்ளிட்ட கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களையும் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் உறுதியளித்திருந்தது.
ஆனால், பதவியேற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த வாக்குறுதிகளில் குறைந்தளவிலான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் கொண்டிருந்தபோதிலும், முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கான விசாரணைகளை நிறைவு செய்வதிலும், குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்து வழக்குத் தொடர்வதிலும் திஸாநாயக்க அரசாங்கம் மெதுவாகச் செயற்படுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள திருகோணமலை ஐந்து மாணவர்கள் படுகொலை வழக்கு மற்றும் பிரான்ஸ் உதவி நிறுவனமான அக்சன் பாமின் 17 பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
அத்துடன், லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் கீத் நொயர் கடத்தல் தொடர்பான வழக்குகளில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்திருந்த போதிலும், இதுவரை நீதிமன்றத்தில் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஏனைய வழக்குகளிலும், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் முதல் உரிய சட்ட நடைமுறைப் பாதுகாப்புகள் வரையிலான பல்வேறு கவலைகள் தொடர்வதாக கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
திஸாநாயக்க அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ள வலுவான மக்கள் ஆணை இருந்தபோதிலும், நீதியை நிலைநாட்டுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்கள், கடந்தகால மீறல்களை உண்மையாக எதிர்கொண்டு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான தொடர்ச்சியான அரசியல் விருப்பம் போதுமான அளவில் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக முன்னாள் புலனாய்வுப் பிரிவின் தலைவர் துவான் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை மற்றும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் இரு புலனாய்வு அதிகாரிகளுக்கு நீதிமன்றம் வெளிநாட்டுப் பயணத் தடை விதித்தமை ஆகியவை வரையறுக்கப்பட்ட முன்னேற்றங்களில் சிலவாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
எனினும், பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான அவசரத்துடன் திஸாநாயக்க அரசாங்கம் செயற்படவில்லை என அமைப்பின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தபோதிலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற உரிமைகளை மீறும் சட்டங்களை அரசாங்கம் நீக்கவில்லை. அதேவேளை, தண்டனையின்மை கலாசாரத்திற்கு முடிவுகட்டக்கூடிய, மனித உரிமைகளை மதிக்கும் புதிய சட்டங்களையும் இயற்றவில்லை.
“திஸாநாயக்க அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள மக்கள் ஆணையைப் பயன்படுத்தி கடந்தகால நடைமுறைகளிலிருந்து விலகி, உண்மையான பொறுப்புக்கூறலையும் சீர்திருத்தத்தையும் ஆரம்பிக்க வேண்டும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் மேலும் வலியுறுத்தியுள்ளது.
