“நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதிலும் தோல்வி”

தன்னிச்சையான கைதுகளுக்கும், குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் சிறையில் அடைப்பதற்கும் வழிவகுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

சட்ட மற்றும் நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள் தொடர்பிலான உறுதிமொழிகளை அரசாங்கம் வழங்கியிருந்த போதிலும், குறித்த அடக்குமுறை சட்டம் பயன்படுத்தப்படுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சித்திரவதைகள், தடுப்புக்காவல் மரணங்கள் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல் மற்றும் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலை வலுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்து, நல்லிணக்கத்தையும் ஆற்றுப்படுத்தலையும் மேம்படுத்துமாறு அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டில், இலங்கை தொடர்ச்சியான இயற்கைப் பேரிடர்களையும் பொருளாதார அதிர்ச்சிகளையும் எதிர்கொண்டுள்ளதுடன், அவற்றால் மிகவும் வறிய மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊழலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதும், அரசியல் கொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முக்கியமான கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்றிருப்பதும் வரவேற்கத்தக்கது என அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

எனினும், நீண்டகாலமாக நிலவி வரும் தண்டனையின்மை கலாசாரத்திற்கு முடிவுகட்ட மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிவில் சமூகப் பிரதிநிதிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அரச கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும் காணி மற்றும் மதத் தலங்கள் தொடர்பான பதற்றங்களும் தொடர்ந்து நீடித்து வருவதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது.

“இலங்கை தனது நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்படும் வரை, அதனைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அத்துடன், அந்தச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.” என ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ரவினா சம்தாசனி (Ravina Shamdasani) தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles