யாழ். சட்டவிரோத திஸ்ஸ விகாரையின் நடுவே பொது வீதி; பொலிஸாரின் தடை கோரிக்கை நிராகரிப்பு

தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து, இராணுவ அனுசரணையுடன் வடக்கில் புதிதாக பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ள காணியின் நடுவில் அமைந்துள்ள பழைய வீதியொன்றை மீளத் திறப்பதற்குப் பிரதேசத்தின் உள்ளூராட்சி நிறுவனம் ஒன்று மேற்கொண்ட முயற்சிக்கு எதிரான தடையுத்தரவை நீதிமன்றம் இரண்டாவது முறையாகவும் நிராகரித்துள்ளது.

யாழ்ப்பாணம், காங்கேசனத்துறையில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ ரஜமகா விகாரையானது தற்போது தன்வசப்படுத்தியுள்ள காணியின் நடுவே இருந்த பழைய வீதியொன்றை மீள் புனரமைப்பதற்கு வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, பலாலி பொலிஸாரால் வெள்ளிக்கிழமை (ஓகஸ்ட் 7) கோரப்பட்ட தடையுத்தரவை மல்லாகம் நீதமன்றம் நிராகரித்துள்ளதாக என பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான குறித்த வீதியை 2026 மே 11 ஆம் திகதிக்கு முன்னர் திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரி, திஸ்ஸ ரஜமகா விகாரையின் விகாராதிபதியான தேரருக்கு, ஏப்ரல் 29 ஆம் திகதி வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். சுகிர்தன் எழுத்துமூலம் அறிவித்திருந்ததாகவும் பிராந்திய ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டனர்.

விகாரை ஊடாக வீதியொன்று திறக்கப்பட்டால் அது அமைதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடும் எனத் தெரிவித்து திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியால் பொலிஸில் செய்யப்பட்ட முறைபாட்டுக்கு அமைவாக, பிரதேச சபை விடுத்த அறிவித்தல் அமைதியை சீர்குலைக்க காரணமாக அமையலாம் எனக் குறிப்பிட்டு, 2026 மே 10 ஆம் திகதி பலாலி பொலிஸாரால் மல்லாகம் நீதமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் செயலாளர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

அந்த கடிதத்தினால் அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதனை பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டத் தவறியுள்ளமையால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இரு பிரதிவாதிகளையும் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என அவர்கள் சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழுவின் உறுப்பினரான சட்டத்தரணி எஸ். கஜேந்திரன் குறிப்பிட்டார்.

“குறித்த விடயத்தினால் அமைதிக்கு பாதகம் ஏற்படும் என்பதற்கான காரணங்களை வழக்குத் தாக்கல் செய்த பொலிஸ் அதிகாரிகள் சமர்ப்பிக்காதமையினால், இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இரு பிரதிவாதிகளையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. அதற்கமைய, குறித்த வீதியைத் திறப்பதற்கும் அது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் எந்தவித தடையும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.”

இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் ஓகஸ்ட் 06 ஆம் திகதி நான்காவது முறையாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, உள்ளூராட்சி நிறுவனம் ஒன்றுக்குரிய அதிகாரங்கள் மற்றும் சட்டபூர்வ ஏற்பாடுகள் மீது நீதிமன்றத்தினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது விடயங்களை ஆராய்ந்த மல்லாகம் நீதிமன்றம், நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளின்படி சம்பந்தப்பட்ட பிரதேசத்திற்குள் வீதிகளை அமைப்பதற்கும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான முழுமையான அதிகாரங்களும் பிரதேச சபையிடம் உள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த விகாரை அமைந்துள்ள காணியின் நடுவே உத்தேசிக்கப்பட்ட வீதியை அமைப்பதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு பிரதேச சபைக்கு எந்தவித சட்ட ரீதியிலான தடையும் இல்லை என நீதிமன்றம் அறிவித்ததுடன், பலாலி பொலிஸாரின் கோரிக்கையின் பேரில் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவை முழுமையாக நீக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் பிராந்திய ஊடகவியலாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

திஸ்ஸ ரஜமகா விகாரை அமைக்கப்பட்டுள்ள, தமக்கு சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு கோரி, 2023 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் மக்களும், 16 தமிழ் குடும்பங்களுக்குச் சொந்தமான எட்டரை ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை இராணுவம் பலவந்தமாக அபகரித்து திஸ்ஸ விகாரையை அமைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

Latest articles

Similar articles