மலையகத் தமிழர்களின் அடையாளம் எது?

மலையகம் எங்கும் விரிந்திருக்கும் தேயிலை தோட்டங்கள் இயற்கையின் அழகையும் நாட்டின் வளத்தையும் செழிப்பையும் பறைசாற்றுகின்றன. இவ்வளத்திற்கும் செழிப்பிற்கும் பின்னால் பல இலட்சம் தொழிலாளர்களின் வியர்வை சிந்திய உழைப்பும் இரத்தமும் இருப்பது அனைவரும் அறிந்த விடயமே. இத்தகைய மக்கள் சமூகம் நிலையான கௌரவத்திற்குள் உள்வாங்கப்படுவது எப்போது? இவர்களால் உருவாக்கப்படும் தேயிலை சர்வதேசத்தின் புகழை பெற்றிருக்கையில் சொந்த நாட்டில் கௌரவமான வாழ்வை தமதாக்குவது எப்போது?

அன்று தோட்டங்கள் உருவாக்கப்பட்டபோது அதனை உருவாக்கியவர்கள் அல்லது அதனை உரிமையாளர்கள் வைத்த பெயரை தொடர்ந்து இருப்பதை அவதானிக்கலாம். பெரும்பாலான தோட்டங்கள் ஆங்கில பெயர்களோடு இருக்கின்றன. அப்பெயர்களுக்கு பின்னால் அவர்களோடு தொடர்புடைய வரலாறும் தேங்கி கிடக்கும். இவையும் பதியப்பட வேண்டியவையே. இப்பெயர்களோடு அன்று இத்தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்கள் ஒரு சில இடங்களில் தமக்கே உரித்தான பெயர்களால் தனது தோட்டங்களை பெயர் சொல்லி அழைத்து மகிழ்ந்தார்கள். உதாரணமாக காட்டு பங்களா தோட்டம், மம்பட்டி தோட்டம், லெச்சிமி தோட்டம்….. போன்றவையை குறிப்பிடலாம்.

பெரும்பாலான தோட்டங்களின் பெயர்கள் நூற்றாண்டை கடந்தும் நிலைத்து நிற்கின்றன. 1970 களில் அரசு பெருந்தோட்ட காணிகளை பொறுப்பேற்று மக்களுக்கு கிராமிய நிலமற்ற மக்களுக்கு பிரித்துக் கொடுத்து உருமாறிய தோட்டங்களை தவிர ஏனைய தோட்டங்கள் பழைய பெயர்களையே அழைக்கப்படுவதையும் அவதானிக்கலாம்.

மேலும் 1990களில் அரசு தாம் பொறுப்பேற்ற தோட்டங்களை நிர்வகிக்க முடியாது தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்த போதும் பழைய பெயர்களிலேயே தோட்டங்கள் இயங்குகின்றன. தோட்டங்களில் நிர்வாக வசதி கருதி மேற் பிரிவு மத்திய பிரிவு கீழ் பிரிவு (upper division, middle division, lower division ) என பிரித்து வைத்திருப்பதையும் அனைவரும் அறிவர். இதனை மக்கள் மேல் கணக்கு, நடுக்கணக்கு, கீழ்க்கணக்கு என அழைப்பர்.

தோட்டங்கள் உருவாகியதும் தோட்ட அதிகாரிகளுக்கு பங்களாக்களும், நிர்வாக உத்தியோகத்திற்கான பிரத்தியேக இல்லங்களும் தனித்தனியாக கட்டப்பட்டதோடு; அவர்களுக்கு உழைத்துக் கொடுக்கும் தொழிலாளர்களுக்காக உருவாக்கிய குடியிருப்புகள் நேர் வரிசையில் தொடராக கட்டப்பட்ட குடியிருப்புகளை லயம் என அழைப்பதை நாம் அறிவோம். இவை ஓர்முக மற்றும் இருமுக லயங்களாக அமைக்கப்பட்டன.

அவ் லயங்களில் குடியிருக்கும் தொழிலாளர்கள் ஒருசில இடங்களில் தமது பொருளாதார வசதிக்கு ஏற்படவும், வளர்ந்து வரும் நாகரீகத்துக்கு அமையவும் பழைய வடிவத்தை மாற்றிக் கொண்டாலும் லயம் என்பதே பொதுவான பெயராக இருக்கின்றது. இவ்வாறு அமையப்பெற்ற லயங்கள் எல்லாம் பல்வேறு காரணப் பெயர்களோடும், அமைவிட பெயர்களோடும் இன்றும் அழைக்கப்படுகின்றன. பல தலைமுறையை கடந்தும் அப் பெயர்களே இன்றும் தொடர்கின்றன.

இது நமக்கு மகிழ்ச்சியா? இதுவா நமது அடையாளம்? நமது அடுத்த தலைமுறையில் எதிர்காலத்திலும் இவ்வாறு தான் அழைக்கப்பட வேண்டுமா?

உதாரணமாக ஓட்டு லயம், பெரட்டுக் களத்து லயம், கோயில் லயம், காமம் பொட்டல் லயம், பீலி லயம், பூசாரி லயம், தண்ணி கான் லயம், டோபி லயம், ஸ்டோர் லயம், பெக்டரி லயம், புள்ள காம்பரா லயம், ஸ்கூல் லயம், மேல் கணக்கு லயம், பணிய கணக்கு லயம், நடுக்கணக்கு லயம் என தொடர்கின்றன.

அது மட்டுமல்ல நாம் வாழும் தோட்டங்களுக்குள் பயணிக்கும் பாதைகளுக்கு ஏதாவது பெயர் உண்டா? என்றால் அதுவும் இல்லை. இன்றும் வாழும் பிரதேசம் தொழிற்பிரதேசங்கள் என்பன அடையாளப்படுத்தப்படும்போது மே மலை (மேல் மலை), பணிய கணக்கு, நடுக்கணக்கு என்றே அழைக்கின்றோம். இது இன்னும் எத்தனை காலத்திற்கு?

இது இவ்வாறு இருக்க தோட்டப்பாடசாலைகள் எல்லாம் தற்போது அரசாங்க பாடசாலை என்றாலும் தோட்டப் பாடசாலை என்பதும் இன்னும் வழக்கில் உள்ளது. இப் பாடசாலைகளுக்கு பெயர் சூட்டுவதாக மலையகக் கட்சி ஒன்று மலையக கலாச்சாரத்திற்கு பொருத்தமில்லாத சமஸ்கிருத பெயர்களை திணிக்க முயன்றதை நாம் அறிவோம். அது தொடர்ந்து நிகழவில்லை. இதற்கு பின்னால் உள்ள அரசியல் நிகழ்ச்சி நிரல் யாருடையது ?

நாம் வளர்க்கும் ஆடு, மாடுகள் செல்லப் பிராணிகள் என்பவற்றுக்கெல்லாம் அழகான பெயர் வைத்து மகிழும் காலகட்டத்தில் 200 வருடங்களை கடந்தும் தாம் உருவாக்கிய தேசத்தில் வாழ்ந்து வரும் மக்கள் தமது வீடுகளுக்கு வீதிக்கு தமது அடையாளத்துடனான பெயர்களை வைக்க முடியவில்லை என்றால் அதற்கு காரணம் நாம் பிறந்த மண்ணும், நடக்கும் பாதையும் இன்னும் நமக்கு சொந்தமாகவில்லை என்பதையே வெளிப்படுத்துகின்றது.

தற்போது பெருந்தோட்ட கம்பெனிகளிடம் கையளிக்கப்பட்டுள்ள தோட்டங்களின் ஒப்பந்தக்காலம் 2042இல் முடிவுற்ற பின்னரும் மேலும் 50 வருட காலத்திற்கு அது நீடிக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது, அவ்வாறெனில் இந்த நூற்றாண்டிலும் எமது நிலம் எமக்கு சொந்தமாகாது என்பதுவே உண்மை. இதற்குப் பின்னால் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலே செயல்படுகின்றது என்பதுவே எமது கருத்து. யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கருத்து நிலைபாட்டில் நின்றே மலையக மக்களை நோக்குவர். மலையகம் எனும் தேசம் மலைகத்தவர்களுக்கு சொந்தமாகக் கூடாது. இதுவே நாட்டின் அரசியல் சித்தாந்தம்.

இது இவ்வாறு இருக்க மலையக பெருந்தோட்ட அமைச்சு மலையக அரசியல்வாதிகளோடு, மலையக தொழிற்சங்கங்களோடு எந்தவித உரையாடலும் செய்யாது சம்பள தொடர்பாக கம்பெனிகளோடு செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் அதன் உள்ளடக்கம் தொடர்ந்து மூடு மந்திரமாகவே வைக்கப்பட்டுள்ளது. இது மலையக தொழிலாளர் வர்க்கத்தை தொடர்ந்து அடிமைகளாக வைக்கும் மனோ நிலை என்றே கூறலாம்.

மலையகத்தில் பிறந்த; தற்போதை அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர் “மலையகப் பெண்கள் தற்போது தான் சுதந்திரமாய் வாழ்கின்றனர். மலையகம் அபிவிருத்தி அடைகின்றது” என கூறுகின்றார். இது மலையக மக்களை மேலும் அவமானப்படுத்தும் கூற்றாகவே கொள்ளல் வேண்டும்.

கடந்த வருட இறுதியில் நாம் முகம் கொடுத்த டித்வா சூறாவளி எம்மை விட்டு கடந்து மறைந்திருந்தாலும் அதன் தாக்கத்திலிருந்து இன்னும் எம்மால் மீள இயலவில்லை. மலையக தமிழர்கள் என்பதாலும், தொழிலாளர் வர்க்கம் என்பதாலும் அரசாங்க சட்டமும் கட்டளைகளும் அறிவித்தல்களும் மலையக பெருந்தோட்ட க்களை முழுமையாக எட்டவில்லை. தோட்ட கம்பனிகளின் அசமந்தம் போக்கும் அதிகாரிகளின் பாராமுகமும் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. அத்தோடு மலையக மக்களை பொறுத்தவரையில் ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியும் இன்னும் அந்தரத்திலேய தொங்குகின்றது என்றே கூறலாம்.

மலையக மற்றும் பெருந்தோட்ட தமிழர்களுக்கான பிரச்சினை வீடுகள் மாத்திரமல்ல. சமத்துவ உரிமைகளுடன் சுதந்திர வாழ்வும் பிரச்சினையாகவே உள்ளது. இதற்குத் தடையாக பெருந்தோட்ட கட்டமைப்பும் அதற்குள் பிணைக்கப்பட்டுள்ள தொழிலாளர் சமூகத்தின் வாழ்வுமாகும். இது அவர்களுக்கு கால் விளங்காகவும், கை விளங்காகவும் அமைந்துள்ளது. இது மலையகம் எனும் தேச சிந்தனையில் இருந்து அவர்களை அகற்றி உள்ளதோடு, சுய பொருளாதார வாழ்வியலை கட்டியமைக்க முடியாத நிலைக்கும் தள்ளியுள்ளது. நிச்சயமற்ற எதிர்காலத்தை மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். இது பேரினவாத அரச இயந்திரத்தின் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் இன்னும் ஒரு வடிவம் என்றும் கூறலாம்.

இது உடைக்கப்பட வேண்டுமெனில் மலையக சமூகம் மலையகம் தேசம் சார்ந்த அரசியல் கருத்துருவாக்கத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும். இத்தகை அரசியல் கருத்தியல் மலையக அரசியல் தலைமைகளிடமும் தொழிற்சங்கங்களும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோன்று காணி உரிமைக்கான போராட்டம் என்பது வெறுமனே ஒரு துண்டு நிலத்தை பெற்றுக்கொள்வதற்கான போராட்டமாக மட்டும் முன்னெடுக்கப்படுவதும் கவலைக்குரிய விடயமாகும். மலையக மக்கள் அரசியல் கருத்து உருவாக்கத்துக்குள் உள்வாங்கப்படாது நிலத்துண்டோடும் அதில் கட்டி கொடுக்கப்படுகின்ற வீட்டோடும் அரசியலை முன்னிறுத்த முடியாது என்பதை உரியவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மலையக மக்களால் உயிர் தியாகத்தோடு உருவாக்கப்பட்ட மலையகம் எனும் தேசம் மலையக மக்களிடம் இருந்து பிரிக்கப்படாத வகையில் தற்போதைய பெருந்தோட்ட கட்டமைப்பு உருமாற்றப்பட்டு மலையக மக்களின் கைகளில் அவர்களின் சுதந்திர வாழ்வியலை பாதுகாக்கும் வகையில் ஒப்படைக்கப்பட வேண்டும். உழைக்கும் வர்க்கம் சிறு தோட்ட உரிமையாளர்களாக வளர்கின்ற போது அந்நிலத்தின் அபிவிருத்தி அம்மக்களால் திட்டமிடப்படுகின்ற ஒன்றாகவும் தேசிய அபிவிருத்தையோடு பயணிக்கின்ற ஒன்றாகவும் இருக்கும். இதற்கு மலையக சமூகத்தை இன்னொரு தேசிய இனமாக அங்கீகரித்து அவர்களின் கௌர வாழ்வுக்கான பாதுகாப்பினை அரசியல் யாப்பின் மூலம் உருவாக்குவதற்கான செயற்பாடும் காலத்தின் தேவையாகும்.

அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்

Latest articles

Similar articles