இஸ்ரேல் – ஈரான் மோதல் ஆரம்பித்து ஒரு நாளுக்குள்ளேயே எரிபொருளுக்கான நீண்ட வரிசை இலங்கையில் உருவாகியது. பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சமே இதற்குக் காரணம். ஒரு மாதத்திற்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், எரிபொருளை நிரப்பிய கப்பல் நாட்டை நோக்கி வரவுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்தாலும் பொது மக்கள் அதனை நம்புவதாக இல்லை. இறுதியில் அரசாங்கம் பொலிஸாரை களமிறக்கியே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் ஆரம்பித்து ஒரு வாரம் ஆகின்ற நிலையில், உலகளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்க அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மைகள் உருவாக்கியுள்ளன. மோதல் புவியியல் ரீதியாக இலங்கையிலிருந்து மிகத் தொலைவில் இருந்தாலும், அதன் பொருளாதார மற்றும் மூலோபாய விளைவுகள் இங்கும் உணரப்படுகின்றன. தொடர்ச்சியாக பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை, மெதுவாக மேலெழும் போதெல்லாம் ஒரு தடை ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிறது, ஆனால் இந்த முறை தடை உள்நாட்டில் அல்ல சர்வதேசத்தில் இருந்து வந்துள்ளது.
எண்ணெய் விலையேற்றமும் பற்றாக்குறையும்
மோதலின் மிக உடனடி விளைவுகளில் ஒன்றாக உலகளாவிய எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்ற எச்சரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுவிட்டது. மத்திய கிழக்கு உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் மையமாக உள்ளது. ஹோர்முஸ் நீரிணை (STRAIT OF HORMUZ) ஊடாகவே சுமார் 20 வீதமான எண்ணெய் விநியோக செயற்பாடு இடம்பெறுகிறது. ஹோர்முஸ் நீரிணையே குறிப்பாக ஈரான், சவுதி அரேபியா, குவைத், கட்டார், பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளின் எண்ணெய் விநியோக செயற்பாட்டின் பிரதான வழித்தடம். இந்த வழி இப்போது பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர படை , ஹோர்முஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா மற்றும் அவற்றின் மேற்கத்தேய நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மாத்திரமே மூடப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கின்றமை சற்று ஆறுதலான தகவல் என நம்பலாம்.
இலங்கை எரிப்பொருட்களை இறக்குமதி செய்யும் நாடாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வியட்நாம், சிங்கப்பூர், தென்கொரியா மலேசியா, ஓமான், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நாடுகளில் இருந்து இலங்கை பெற்றோலியப் பொருட்களை (சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்) இறக்குமதி செய்கிறது. குறித்த நாடுகளுக்கான மசகு எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் தடை, இலங்கையின் இறக்குமதியில் தாக்கம் செலுத்தும் என்கிறார் பேராசிரியர் அமிர்தலிங்கம். ஆகவே இலங்கை பற்றாக்குறையை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்ற எச்சரிக்கையை அவர் விடுக்கின்றார்.
மேலும் மசகு எண்ணெயின் விலை மத்திய கிழக்கு பதற்றத்தால் அதிகரித்துள்ளது. மசகு எண்ணெயின் விலை ஒரு பீப்பாய் 80–100 டொலர்கள் வரை உயரலாம் என உலக எண்ணெய் சந்தைகள் எச்சரிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விநியோக பிராந்தியத்தில் காணப்படும் போர்ச்சூழலால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதோடு, சுத்திகரிக்கப்பட்டு விநியோகிக்கப்படும் பெற்றோலிய பொருட்களின் விலையிலும் கனிசமான அதிகரிப்பை இது ஏற்படுத்தும். ஏற்கனவே அந்நிய செலாவணி பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ள இலங்கை எரிபொருள் இறக்குமதிக்கு கூடுதலான தொகையை செலவிட வேண்டிய நிலைமை ஏற்படும், ஆனால் அதற்கான நிதி இலங்கையிடம் இருக்காது. ஆகவே இயல்பாகவே உள்ளூரில் எரிபொருட்களின் விலை அதிகரித்து பொருட்கள், சேவைகளின் விலைகள் அதிகரித்து மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும்.
இலங்கையின் எரிபொருள் இறக்குமதிகள் – முதன்மையாக சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து பெறப்படுகின்றன – மத்திய கிழக்கு வழித்தடங்களுடன் நேரடியாக இணைக்கப்பட்ட விநியோக இடையூறுகளுக்கு உடனடியான பாதிப்பு இல்லையென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் எஸ். ராஜகருணா கூறியுள்ளார். எவ்வாறெனினும், உலகளாவிய விலையேற்றம் “தவிர்க்க முடியாத ஆபத்து” என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்நியச் செலாவணி அச்சுறுத்தல்கள்
இலங்கை பொருளாதாரத்திற்கு முக்கியமான பணம் அனுப்பும் துறைகளான வீட்டு வேலை, கட்டுமானம், விருந்தோம்பல் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு ஆகியவற்றில் வெளிநாட்டு தொழிலாளர் படையில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து வரும் பணம், நாட்டின் மிகப்பெரிய அந்நியச் செலாவணி வருவாயின் ஆதாரங்களில் ஒன்றாகும். மோதல் நீடிக்கும் பட்சத்தில் அது, மத்திய கிழக்கு நாடுகளில் பொருளாதார ஸ்திரத்தன்மையை சீர்குலைத்து, புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகளை பாதிக்கக்கூடும். பணம் அனுப்புதலில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இலங்கைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்நிய செலாவணி குறைவடைந்தால் இயல்பாகவே எரிபொருள், மருந்து, உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்டும், அதனைவிட ரூபாயின் பெறுமதி குறைவடைந்து டொலரை கொள்வனவு செய்வதற்கு அதிகளவு ரூபாயை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதனால் பணவீக்கம் அதிகரித்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும் என்பதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும். இதனால் நாட்டில் மீண்டும் கடந்த 2022ஆம் ஆண்டைப்போல் ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்படலாம்.
2025 ஆம் ஆண்டில் இலங்கை இதுவரை இல்லாத அளவுக்கு வெளிநாட்டு தொழிலாளர் வருவாயைப் பதிவு செய்துள்ளது, புலம்பெயர்ந்தோர் அனுப்பும் தொகை முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்திருந்தது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கடந்த வருடம் மொத்தம் 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்களை – சுமார் 2,432 பில்லியன் ரூபாய் – இலங்கைக்கு அனுப்பியதாக பணியகம் வெளியிட்ட தரவு வெளிப்படுத்துகிறது.
முடங்கும் சுற்றுலாத்துறை
மத்திய கிழக்கு மோதல், மீண்டு வரும் இலங்கையின் சுற்றுலாத் துறை பின்னடைவைச் சந்திக்கக்கூடும். இலங்கைக்கு பல சர்வதேச விமானங்கள் மத்திய கிழக்கு மையங்கள் வழியாக செல்கின்றன. வான் பரப்பை மூடுவதாலும், விமானப் பயணங்கள் இரத்து செய்யப்படுவதாலும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்து ஹோட்டல் உள்ளிட்ட சுற்றுலாத்துறை முழுமையாக பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகளே அதிகம். இலங்கைக்கு வருவாய் ஈட்டும் ஒரு முக்கிய தொழிற்துறைகளில் சுற்றுலா முதன்மையானது. நீடிக்கும் பிராந்திய மோதல் இந்தத் துறையின் மீளெழுச்சியை நிச்சியமாக பாதிக்கும் என்கிறார் பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம்.
“எங்களுக்கு வரும் மேற்குலக சுற்றுலாப் பயணிகளில் 50 வீதமானோர் மத்திய கிழக்கு விமான நிலையங்களையே இடைமாற்றம்/இடைநிறுத்தத்திற்கு (Transit flight) பயன்படுத்துகின்றனர். டுபாய் இதில் முதன்மையானது. அதனைவிட கட்டார், அபுதாபி போன்றவற்றையும் குறிப்பிட முடியும். அந்த நாடுகளில் இருந்து வரும் பல விமானப் பயணங்கள் இப்போது இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலைமை நீடிக்குமாயின் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவடைந்து அந்தத்துறை ஊடாக ஈட்டப்படும் சுமார் 5 முதல் 6 பில்லியன் டொலர்களை இலங்கை இழக்க வேண்டியேற்படும். மேற்குலகில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளே இலங்கையில் அதிகளவு பணத்தை செலவிடுகின்றனர். இந்திய, சீனவர்கள் இல்லை. ஆகவே கூடுதலான அளவு டொலர்கள், யூரோக்களை செலவிடும் பயணிகளின் வருகை குறைவடையும் போது தொழிற்துறை பாதிக்கப்படுவதோடு, இலங்கையின் வருமானமும் பாதிக்கப்படும்.” என்கிறார் பேராசிரியர்.
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் வான்வெளி மூடப்பட்டதால் துபாய், டோஹா, தம்மம், ரியாத் மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்கான பல சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் இரத்து செய்துள்ளது. எமிரேட்ஸ், கட்டார் ஏர்வேஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் ஆகியவற்றின் தற்காலிக பயண இடைநிறுத்தங்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது, இதனால் துபாய், டோஹா மற்றும் அபுதாபி உள்ளிட்ட முக்கிய வளைகுடா போக்குவரத்து முடங்கியுள்ளது. மார்ச் 3ஆம் திகதி மாத்திரம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) செல்லும் மற்றும் புறப்படும் 205 விமானங்கள் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கும் தேயிலை ஏற்றுமதியும்
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி வருவாய் 2025ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. கடந்த வருடம் ஈராக் இலங்கையிடமிருந்து 39.36 மில்லியன் கிலோவை இறக்குமதி செய்து, இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்யும் முதன்மையான நாடாக பதிவானது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 18.32 மில்லியன் கிலோவுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்தது. மேலும் ஈரான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இலங்கைத் தேயிலையை கொள்வனவு செய்யும் முதல் பத்து நாடுகளின் வரிசையில் காணப்படுகின்றன. ஆகவே மோதல் நிலைமை மோசமடையும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி பாதிப்படையும்.
“எங்களுக்கும் ஈரானுக்கும் இடையில் பெற்றோலுக்காக தேயிலை என்ற ஒப்பந்தம் இருக்கின்றது. இந்த விடயத்தில் பாதிப்பு ஏற்படும். நுவரெலியாவில் விளையும் தரம்கூடிய தேயிலை ஐரோப்பிய நாடுகளுக்கும். தாழ்நிலங்களில் விளையும் தேயிலை மத்திய கிழக்கிற்கும் செல்கிறது. கப்பல் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. ஹோமுஸ் நீரிணை மாத்திரமல்ல செங்கடலும் பிரச்சினைக்குரியதாக மாறியுள்ளது. ஆபிரிக்காவை சுற்றி ஐரோப்பிய நாடுகளை அடைவது கடினம். சுயஸ் கால்வாயும் பிரச்சினை. ஆகவே எங்களது தேயிலை ஏற்றுமதி பாதிப்படையும்.” என எச்சரிக்கின்றார் பொருளியல் துறை பேராசிரியர் அமிர்தலிங்கம்.
ஆடை ஏற்றுமதியும் அமெரிக்காவும்
அதனைவிட இலங்கையின் ஆடை ஏற்றுமதி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளையே நம்பியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருவாயில் 44-52% க்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளன. ஆகவே கப்பல் போக்குவரத்தில் ஏற்படும் பாதிப்பு இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி சந்தையாகும், மொத்த ஆடை ஏற்றுமதியில் சுமார் 40 வீதம் அமெரிக்கா சந்தையையே நம்பியிருக்கிறது. இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக தலையீடு செய்துள்ளமையால், இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் நிச்சியமாக ஒரு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இஸ்ரேல்-ஈரான் மோதல் இலங்கைக்கு நேரடி இராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்தாது. எனினும் மோதல் தொடருமாயின் அதன் மறைமுக பொருளாதார விளைவுகளை நிச்சியமாக இலங்கை எதிர்கொள்ள வேண்டியேற்படும். எண்ணெய் விலை அதிகரிப்பு, பணம் அனுப்புவதில் சாத்தியமான குறைப்பு, சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி மற்றும் வர்த்தக இடையூறுகள் ஆகியன பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முயலும் இலங்கைக்கு பெரும பாதிப்பாகவே அமையும்.
“ஆகவே, மோதல் ஒரு மாதத்திற்குள் முடிந்தால் பாதிப்பு குறைவு. மூன்று நான்கு மாதங்கள் நீடித்தால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும். எரிபொருள் விலை கடுமையாக அதிகரிக்கும். IMF நிகழ்ச்சித் திட்டத்தை கொண்டுச் செல்ல இயலாது. 2028ஆம் ஆண்டு கடனை மீளச் செலுத்த இயலாது. ஆகவே மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்திக்கும்.” என்கிறார் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவிக்கின்றார்.
ச.பார்தீபன்
thibankannan@gmail.com
Article published in thamilan.lk
