‘கிவுல் ஓயா’ தமிழ் இனப்பரம்பலை மாற்றும் சிங்களக் குடியேற்றமா?

(நீதி அமைச்சு தனது இணையதளத்தில் ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’ (PSTA) வரைபை வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்வதாக உறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இயற்றவிருக்கும் புதிய பயங்கரவாத சட்ட வரைபு குறித்து மனித உரிமை சட்டத்தரணி கிஷாலி பின்டோ ஜயவர்தனாவின் ஒரு கட்டுரையே இது. இந்தக் கட்டுரை முதன்முதலாக சண்டே டைம்ஸில் ஆங்கிலத்தில் வெளியானது)

யுத்தத்தால் பெரும் பாதிப்புக்குள்ளான வன்னி மண்ணின் இரு மாவட்டங்களான முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகியவற்றின் குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர் பற்றாக்குறைக்குத் தீர்வு காண்பதற்கான திட்டம் எனக்கூறி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டமான ‘கிவுல் ஓயா’ திட்டத்திற்கு  வடக்கில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட இந்தத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 2026 ஜனவரி 19 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரமும் வழங்கப்பட்டிருந்தது.

கிவுல் ஓயா நீர் வளத்தை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் பயன்படுத்தி வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள நீர்ப் பற்றாக்குறை, வறுமை மற்றும் குறை விவசாய உற்பத்தித்திறன் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வாகவும், பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்தியையும் நோக்காகக் கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை அரசாங்கம் தெரிவிக்கின்றது. மகாவலி நீர்த்தேக்க அபிவிருத்திக் கட்டமைப்பின் ‘எல்’ வலயத்தில் நான்கு வருடங்களில் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டிருப்பினும், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் அக்கருத்திட்டத்தை 2023.12.31 அன்று தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. கருத்திட்டப் பிரதேசத்தில் நிலவுகின்ற குடிநீர் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நீர்ப்பற்றாக்குறைக்குத் தீர்வாக உத்தேச கருத்திட்டத்தை துரிதமாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையைக் கருத்தில் கொண்டு. தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள கிவுல் ஓயா அபிவிருத்திக் கருத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கும். உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி 2026ஆம் ஆண்டு தொடக்கம் 2031 ஆம் ஆண்டு இறுதிவரையான காலப்பகுதியில் கருத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கும் கருத்திட்டத்தின் மொத்தச் செலவு மதிப்பீட்டை 23,456 மில்லியன் ரூபாய்களாக திருத்தம் செய்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கிவுல் ஓயா திட்டமும் பின்னணியும்

கிவுல் ஓயா வவுனியா கிழக்கில் உருவாகும் ஒரு ஆறாகும். அதனை இடைமறித்து வெலி ஓயாவை (முன்னர் இது மணலாறு) அண்மித்து அணைக்கட்டு அமைக்கப்படவுள்ளது. அரசாங்கம் குறிப்பிட்டது போல் இது மகாவலி எல் வலயத்தில் அமைக்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய பிரதான அணைக்கட்டாகும். கிவுல் ஓயாவை மறித்து சுமார் 5 கிலோமீற்றர் நீளமான ஒரு அணை மற்றும் சுமார் 13 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கிவுல் ஓயா திட்டத்தினூடாக தற்போது உள்ள 700 ஹெக்டேயர் காணிகளுக்கு – நிகவெவ, எஹடுகஸ்வெவ, கிறி இப்பன்வெவ, ஹெலெம்பே வெவ ஆகிய சிங்கள குடியேற்றப்பகுதிகளின் நெல் வயல்களுக்கு – இரு போகங்களுக்கும் நீர் வழங்கப்படுவதுடன், புதிதாக 1,700 ஹெக்டேயர் காணிகளைப் பெற்று அவற்றை வயல் நிலங்களாக மாற்றி புதிய குடியேற்றங்களை உருவாக்குவதே இந்தத் திட்டமாகும்.

ஆகவே ஏற்கனே சிங்கள் மக்கள் வாழும் பிரதேசத்தை அண்மித்து உருவாக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டத்துடன் இணைந்த குடியேற்றத்தில் குடியேற்றப்படப்போகின்றவர்கள் யார்? என்ற கேள்விக்கான பதில்தான் வடக்கில் இந்தத் திட்டத்தை வலுவாக எதிர்ப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. 

முல்லைத்தீவு, வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு எனக் குறிப்பிடப்பட்டு 1983ஆம் ஆண்டு மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டது. மொரகஹகந்த அணையிலிருந்து வெளியேறும் நீரை வடமத்திய மாகாண கால்வாய் ஊடாக (North Central Province Canal) வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களை அபிவிருத்தி செய்வது குடியேற்றங்களை உருவாக்கும் வகையில் இந்தத் திட்டம் அப்போது முன்மொழியப்பட்டது. ஆனால், மொரஹகந்த நீர்த்தேக்கத்தில் இருந்து எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு நீரைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. – எதிர்ப்பார்த்த அளவு நீரைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதும் அப்போதைய அராசங்கத்திற்கும் தெரியும். – ஆனால் சிங்கள மக்களை குடியேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகள் இணைக்கப்பட்டு மகாவலி எல் வலயம் உருவாக்கப்பட்டது. வவுனியா வடக்கின் எல்லைப்பகுதிகளில் மணலாறு உட்பட பல இடங்களில் வெளி மாவட்டங்களை சேர்ந்த சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டனர். அதன் பின்னர், மணலாறு ‘வெலி ஓயா’ என்ற பெயரில் தனிப் பிரதேச செயலகப் பிரிவுவும் உருவானது. 

இந்தத் திட்டத்திற்கு அப்போது சுமார் 200,000 இலட்சம் ஹெக்டேயர் காணி அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் குடியேற்ற்பபட்டனர். இப்போது அந்த குடும்பங்கள் பல்கிப்பெருகி சுமார் 4,300 குடும்பங்கள் வாழ்வதாக குறிப்பிடப்படுகிறது. (சரியான எண்ணிக்கை தெரியவில்லை). ஆகவே அந்த மக்களுக்கான நீர்ப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காகவே இப்போது இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என்பதோடு, மேலும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களை தமிழர் தாயகத்தில் குடியேற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமென வட மாகாண மக்கள் குற்றஞ்சாட்டுகின்றன.

கசப்பான வரலாறு

முன்னைய அரசாங்கங்கள் வடக்கு, கிழக்கில் முன்னெடுத்த பல்வேறு அபிவிருத்தி மற்றும் குடியேற்றத் திட்டங்களால் – திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத் திட்டங்களால் – தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த பல இடங்கள் சிங்கள மக்களுக்குரியவையாக மாறியிருக்கின்றன. தமிழர் பிரதேசங்களில் அந்த மக்களின் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது – இதுவும் திட்டமிட்ட சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியே – உதாரணமாக, மணலாறு – வெலிஓயாவானது, மண்கிண்டிமலை – பன்சல்கந்தவானது, முந்திரிகைகுளம் – நெலும்வெவானது, ஆமையன்குளம் – கிரிப்பென்வெவானது, மயில்குளம் – மொனரவெவானது, கொக்கச்சாங்குளம் – கலாபோகஸ்வெவானது, கச்சல்சமனங்குளம் – சபுமல்கஸ்கந்தவானது, திரிவைத்தகுளம் – அந்தரவெவானது இந்தப் பட்டியல் இன்னும் நீளமானது.

அழிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் 

முன்மொழியப்பட்ட இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வன்னி மாவட்டத்தில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனக் குறிப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் இதற்காக 2021 ஆம் ஆண்டில் மகாவலி எல் வலயத்திற்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக, 6,000 ஹெக்டேயர் வனப்பகுதிக் காணிகள் வன வள பாதுகாப்புத் திணைக்களத்தினால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். 

“அப்பகுதிகளில் பாரம்பரியமாக வாழும் மக்கள் தமது காணிகளுக்குச் செல்வதற்குத் தடையாக இருக்கும் மகாவலி அதிகார அபிவிருத்தி அதிகார சபையும், வனவளப் பாதுகாப்புத் திணைக்களமும் – அதாவது 2014ஆம் ஆண்டு கூகள் வரைபடத்தின் ஊடாக வனப்பிரதேசமாக ஒதுக்கப்பட்ட காணிகள் எனப் பெயரிடப்பட்ட மக்களின் பாரம்பரியக் காணிகளில் ஒரு ஏக்கரைக்கூட துப்புரவு செய்ய அனுமதிக்காத இத்திணைக்களம், எவருமே கைவைக்காத 13,000 ஏக்கர் வனப்பகுதியை இந்த கிவுல் ஓயா திட்டத்துக்காக வழங்கியுள்ளது. எனவே இங்கு பாரிய பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த கிவுல் ஓயா திட்டத்தின் நீரேந்துப்பகுதி காரணமாக வவுனியா வடக்கிலுள்ள பாரம்பரிய காணிகள், குளங்கள் மற்றும் வயல்கள் பலவற்றை இழக்க வேண்டியேற்படும். ஆனால் இதன் நன்மைகளை புதிதாக குடியேற்றப்படும் குடியேற்றவாசிகள் மாத்திரமே பெற்றுக்கொள்வர்.”

தமிழர்களை விரட்டி சிங்களவர்கள் குடியேற்றம்

திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் மூலம் முல்லைத்தீவு கிழக்கு மற்றும் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்ட வகையில் துரத்தியடிக்கப்பட்டதோடு பிரதேசத்தில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டதாக குறிப்பிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் வட மாகாணத்தில் பிரச்சினைகளை உருவாக்கக் காரணமாக அமையும் எனவும், அதனூடாக அமைக்கப்படவுள்ள குடியேற்றங்கள் முழுமையாகச் சிங்களக் குடியேற்றங்களே எனவும் வலியுறுத்துகின்றார்.  

“1984 ஆம் ஆண்டு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் ஊடாக முல்லைத்தீவு கிழக்கு மற்றும் வவுனியா வடக்கு பிரதேசங்களின் தமிழ் மக்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்த பகுதிகளிலிருந்து படிப்படியாக வெளியேற்றப்பட்டனர். அவர்களது வசிப்பிடங்கள் அழிக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் வருவதற்கு முன்பே சிங்களக் குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டன. யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தனர். யுத்தம் முடிவடைந்து நாம் மீண்டும் வர முயன்றபோது, முன்னர் வாழ்ந்த இடங்களுக்கு வர வழியில்லாமல் போனது: ஒன்றில் வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் அவற்றை அடர்ந்த காடுகளாகப் பிரகடனப் படுத்தியுள்ளது; அன்றேல், யாராவது வந்து குடியேறியுள்ளார்கள். அவர்களோ அந்த மாவட்டத்தைச் சேராதவர்கள். இப்போது இந்தத் திட்டத்தை எடுத்து நோக்கினால் அதுவே இந்தத் திட்டத்தின் உத்தியோகபூர்வக் கொள்கையாகும். இதில் அமைக்கப்படவுள்ள குடியேற்றங்கள் முழுமையாகச் சிங்களக் குடியேற்றங்களாகும். இது சுற்றாடல் திணைக்களத்திலிருந்தும் வந்த ஒரு முறைப்பாடாகும். அவர்கள் முன்வைத்த சாத்தியக்கூறு ஆய்வில் இந்தக் குடியேற்றத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் அதுவே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது.

வாக்குறுதியை மீறும் தேசிய மக்கள் சக்தி 

தேசிய மக்கள்ன சக்தி 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு வெளியிட்ட ‘வளமான நாடு அழகான வாழ்க்கை’ தேர்தல் விஞ்ஞாபனத்தின் 232ஆவது பக்கத்தில், “இனக் கட்டமைப்பை மாற்றியமைக்கும் குறிக்கோளுடன் மேற்கொள்ளப்படும் மக்கள் குடியேற்றங்களை நிறுத்துதல்” என்ற விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக அல்லது குடியேற்றத் திட்டத்தின் ஊடாக அந்த பிரதேசத்தின் இனப்பரம்பல் மாற்றப்படுமாயின் அதனை செய்யாதிருத்தல் என எளிமையாக குறிப்பிட முடியும். எனினும் இந்த தேர்தல் வாக்குறுதியை மீறும் வகையில் அரசாங்கம் கிவுல் ஓயா திட்டத்தை முன்னெடுப்பதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்  பொதுச் செயலளார் எம். ஏ. சுமந்திரன் தெரிவிக்கின்றார்.   

“ஏற்கனவே சிங்கள மக்கள் வாழும் பிரதேசத்தில் தமிழ் மக்களை குடியேற்றுவது அசாத்தியமான விடயம். ஆகவே இந்த திட்டத்தை அமுல்படுத்துவது என்பது நீண்டகாலமாக பல்வேறு அரசாங்கங்கள் மாறி மாறி கொண்டு வந்த திட்டத்தின் நீட்சியே இது. இந்த அரசாங்கம் மிகத்தெளிவாக ஒரு வாக்குறுதியை கொடுத்தது. அதாவது இனப்பரம்பலை மாற்றுகின்ற எந்தவொரு அபிவிருத்தித் திட்டத்தையும் நாங்கள் அமுல்படுத்தமாட்டோம் என எழுத்திலேயே தெளிவாகச் சொன்னார்கள். அப்படிச் சொன்ன அந்த அரசாங்கம்தான் இப்பொழுது அதற்கு உத்தியோகபூர்வ அனுமதியை கொடுத்து திட்டத்தை ஆரம்பிக்கிறது.” என, கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி நெடுங்கேணியில் இடம்பெற்ற பாரிய மக்கள் போராட்டத்தின்போது சுமந்திரன் குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கும் வவுனியா

இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் வவுனியா மாவட்டத்தின் பல தமிழ் கிராமங்களும் அழியக்கூடிய அபாயம் காணப்படுவதாக, சட்டதரணியான சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் சி. அ. யோதிலிங்கம் தெரிவிக்கின்றார். “குறிப்பாக வவுனியா வடக்கில் உள்ள அனைத்து கிராமங்களும் நீரில் மூழ்கும் அபாயமும் உள்ளது.” என அவர் தெரிவிக்கின்றார். 

“தமிழர்களின் இருப்பை அழிக்கமாட்டோம்”

தமிழர்களின் அடையாளங்களை அழித்து, அவர்களின் தனித்துவத்தை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு சிங்கள குடியேற்றத்தையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளமாட்டாது என உறுதியளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்.

“வடக்கில் தற்போது நீர் பிரச்சினை காணப்படுகிறது. அதனை கருத்தில் கொண்டே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம் இந்த திட்டத்தால், சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு, தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகும். தமிழ் மக்களின் இருப்பு அழிக்கப்படும் என சில அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அவர்கள் யார் என்றால் அனுர ஜனாதிபதியினால், இனவாதம் அதிகரிக்கும், இளைஞர்கள் காணாமல் ஆக்கப்படுவார்கள் என கூறியவர்கள்?” என அமைச்சர் சந்திரசேகர் குறிப்பிடுகின்றார்.

உண்மையில் இந்தத் திட்டம் இந்த அரசாங்கத்தினுடையது அல்ல முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் முன்மொழியப்பட்ட ஒன்றுதான், எனினும் கடந்த காலத்தில் குடியேற்றத்திட்டங்களால் குறிப்பாக மாகாவலி அபிவிருத்தித் திட்டத்தால் தமிழர் பிரதேசம் எவ்வாறு சிங்கள மயமானது, தமிழர்களின் காணிகள் எவ்வாறு அபகரிக்கப்பட்டன, இனப்பரம்பல் எவ்வாறு மாற்றியமைக்கப்பட்டது என்பதை இந்த கட்டுரையை வாசிக்கும் உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஏற்கனவே குடியேற்றப்பட்ட சிங்கள மக்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலும், புதிய குடியேற்றத்தை உருவாக்கும் எண்ணத்திலும் முன்னெடுக்கவுள்ள இந்தத் திட்டத்தை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. காரணம் இந்தத் திட்டத்தின் நோக்கம் மிகத்தெளிவானது. அமைச்சவை அங்கீகாரமும் கிடைத்துவிட்டது. திட்டம் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும் அதற்கு முன்னராக வடக்கின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைமைகள், பொது மக்கள் இதுத் தொடர்பில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும். ஆனால் நெடுங்கேணியில் ஒரு போராட்டம் நடந்ததோடு அமைகி காக்கிறது வடக்கு. அந்தப் போராட்டம் மாத்திரம் இந்த திட்டத்தை நிறுத்திவிடாது என்பதை போராட்டத்தை முன்னெடுத்தவர்களும் அறிவார்கள்.  

முன்னைய ஆட்சியாளர்கள் போல அனுர அரசாங்கமும் சிங்கள, பௌத்த மேலாதிக்க சிந்தனையில் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் திட்டங்களை தொடர்வதாகவே தெரிகிறது. அதன் ‘மெகா திட்டம்தான்’ இந்த கிவுல் ஓயா என்பதே வடக்கு, கிழக்கு மக்களின் கருத்து, அதனை தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான அழுத்தங்களை உரிய தரப்பு கொடுக்க வேண்டுமென அந்த மக்கள் கோரி நிற்கின்றனர்.

ச.பார்தீபன்
thibankannan@gmail.com

Article published in thamilan.lk

Latest articles

Similar articles