வடக்கில் யுத்தம் நிறைவுக்கு வருவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் அரச படையால் கொல்லப்பட்ட தமிழ் பாடசாலை மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் வாழ்ந்த கிராமங்களில் உள்ள வீதிகளுக்கு அவர்களின் பெயர்களை சூட்டுவதற்கு துணுக்காய் பிரதேச சபையில் முன்மொழியப்பட்டுள்ளது.
18 வருடங்களுக்கு முன்னர் அரச படைகளால் கொல்லப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் முயற்சியை கைவிடப்போவது இல்லை என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சத்குணநாதன் சுஜன்சன் தெரிவிக்கின்றார்.
“எமது இந்த மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட இந்த மிலேச்சத்தனமான கொடூர செயலை வெளிவுலகிற்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பு. அதனைவிட உயிரிழந்தவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும். அதற்கான முயற்சிகள் தொடர்ந்து இடம்பெறும். பிரதேச சபையிலும் இவர்களுக்கான கல்லறை அமைப்பது மற்றும் அந்த மாணவர்கள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் வாழ்ந்த கிராமங்களில் காணப்படும் வீதிகளுக்கு அவர்களுடைய பெயர்களை சூட்டுவது தொடர்பில் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வருடமும் இடம்பெறும் நினைவேந்தலில் அனைவரும் பங்கேற்று உயிரிழந்தவர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க வலியுறுத்த வேண்டும்.”
நவம்பர் 27, 2007 அன்று, அம்பியுலன்ஸில் பயணம் செய்தபோது, இராணுவத்தின் ஸ்ரீலங்கா ஆழ ஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் ஆறு பாடசாலை மாணவர்கள் கொல்லப்பட்டனர்.
முல்லைத்தீவு, துணுக்காய், ஐயன்கன்குளம் பகுதியில் இலங்கை இராணுவத்தினால் அம்பியூலன்ஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அதில் பாடசாலை சீருடையுடன் பயணித்த மாணவர்களான நாகரத்தினம் பிரதீபா (வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா (வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16), அற்புதராசா அஜித்நாத் (வயது-17) ஆகியோரும் சுகாதாரத் தொண்டர்களான சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (வயது-21) ஆகியோரும் பலியாகினர்.
