“150 தமிழர்களின் வீடுகளை இடித்து அமைக்கப்பட்ட இராணுவ கமாண்டர்ஸ் பங்களா; 13 வருடங்களில் இடித்து அழிக்கப்பட்ட 21 ஆலயங்கள்”

பல தசாப்தங்களாக அரச இராணுவத்தால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது பாரம்பரிய காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கில் தமிழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வேளையில், வடக்கில் மேலும் பல காணிகளை கையகப்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளமையால் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இராணுவம் ஆக்கிரமித்துள்ள காணிகளை விடுவிப்பதே தனது நோக்கம் என ஜனாதிபதி தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் கூறி ஒரு வாரம் கூட ஆவதற்குள், அவரின் பிரதி அமைச்சரொருவர் வடக்கில் மேலும் பல பல ஏக்கர் காணிகளை ஆக்கிரமிக்கும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கில் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான காணிகளை மேலும் ஆக்கிரமிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர 2026 ஜூலை 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

“தற்போதைய காணி கையகப்படுத்தும் செயற்பாட்டிற்கு இணையாக, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்திக்கான காணி தேவை குறித்து அளவீடு செய்யப்பட வேண்டிய காணிப் பரப்பளவு தொடர்பாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, விமானப் படையினால் அறிக்கையொன்று பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன்போது, தற்போதைய பலாலி விமான நிலையமும் இலங்கை விமானப் படை பயன்படுத்தும் எல்லைக்கு அப்பால் உள்ள காணிகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக, காணி அமைச்சு, நில அளவைத் திணைக்களம், இலங்கை இராணுவம் மற்றும் வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலாளர்கள் ஆகியோருடன் இணைந்து செயற்படுவது பொருத்தமானது என நாம் அறிக்கையிட்டுள்ளோம். மேலும், பாதுகாப்பு அமைச்சு, சிவில் விமான சேவைகள் அதிகார சபை மற்றும் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு, காணிகளை துல்லியமாக அடையாளம் காணும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

முப்படையின் பயன்பாட்டிற்கு அவசியமானது என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளை இப்போதைக்கு விடுவிக்க முடியாது என நாடாளுமன்றத்தில் தெரிவித்த பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் தற்போது இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் 1600 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை இராணுவத்திற்கு சட்டப்பூர்வமாக கையகப்படுத்தும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேலும் குறிப்பிட்டார்.

பலாலி இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணியை பின்வரும் காரணங்களினால் இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்க முடியாது என்பதே எமது அமைச்சின் அறிவிப்பாகும்;

“இந்த காணி பகுதி உள்ளடங்கலாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் தற்போது இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வரும் மொத்தமான 1661 ஏக்கர் காணிப் பரப்பளவை இராணுவத்திற்கு முறையாக கையகப்படுத்தும் நடவடிக்கைகளும், காணி உரிமையாளர்களான பொதுமக்களுக்கு நட்டஈட்டுத் தொகையை வழங்கும் நடவடிக்கைகளும் இந்த அமைச்சின் மற்றும் விவசாய, பெருந்தோட்ட, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.”

இராணுவத்திற்கு மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் இந்தக் காணிகள் அவசியமானவை என பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“கோரப்பட்ட காணி பகுதிக்கு மிக அருகில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படுவதற்கான வலயமானது அமைந்துள்ளதுடன், அதன் காரணமாகவும், பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு கருதியும், இந்த இராணுவ வைத்தியசாலை அமைந்துள்ள காணிப் பரப்பளவானது மூலோபாய ரீதியாகவும் தந்திரோபாய ரீதியாகவும் இராணுவத்திற்கு அவசியமானது என நாம் அறிவிக்கின்றோம்.”

ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை விடுவிப்பதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளையில், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் வெளியிட்ட கருத்தானது, காணிகளை இழந்த மக்களின் உள்ளங்களில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக, யுத்தம் காரணமாக இராணுவத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ் மக்களின் காணிகளை மீள வழங்குமாறு கோரி ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்ட பின்னர், இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்திருந்த ஆசிரியரான வி. ஜெகநாதன் தெரிவித்தார்.

“இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் வலிகாமம் வடக்கில் 2,506 ஏக்கர் காணி இன்னும் விடுவிக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளன. உயர் பாதுகாப்பு வலயங்களுக்கு இங்கு இடமில்லை என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். எனவே, எமக்குள்ள கவலை என்னவென்றால், இந்த 2,506 ஏக்கர் காணியை ஆக்கிரமிப்பதற்காக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர அவர் முன்னாள் இராணுவ ஜெனரல் ஆவார். கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் இராணுவத்தின் தேவைக்காக 1,661 ஏக்கர் வேண்டும் என்றும், விமான நிலையத்தை விரிவுபடுத்த 774 ஏக்கர் வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதாவது, எமது 2,500 ஏக்கருக்கும் அதிகமான காணி எமக்கு தேவை என்பதால் மேலும் காணிகளை கைப்பற்றவுள்ளதாக அவர் கூறியுள்ளார். அது எங்களுக்கு மனவேதனையைத் தருகிறது.”

யுத்தம் நிறைவடைந்ந பின்னர் வடக்கில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை அபகரித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்றுவரை இரத்து செய்யப்படாத காரணத்தினால், காணிகளை இழந்த வலிகாமம் வடக்குப் பிரதேசத்திற்குட்பட்ட பலாலி, மயிலிட்டி, வசாவிளான், கட்டுவான், குரும்பசிட்டி, தையிட்டி உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி 2026 ஏப்ரல் மாதம் முதல் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அரசாகத்தின் பாதுகாப்புப் படையினரால் அபகரிக்கப்பட்ட தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளுக்குள் இராணுவத்தினால் ஹோட்டல்கள் அமைக்கப்பட்டுள்ளமையால் அவர்கள் அந்த காணிகளை விடுவிக்க தயங்குவதாக, கேப்பாப்பிலவு மற்றும் பலாலியில் காணிகளை இழந்த மக்களின் காணி உரிமைக்காக உருவாக்கப்பட்ட குடிமைசார் அமைப்புகள் மற்றும் சம உரிமை இயக்கம் என்பன கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த, வி. ஜெகநாதன் மேலும் தெரிவித்தார்

“அதேபோன்று, அந்த வீதிக்குத் தெற்கு திசையில் உள்ள, விமான நிலையத்திற்கு வடக்கே உள்ள காணிகளை விடுவிக்காமல் வைத்திருப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. ஆனால், அங்கே இராணுவம் அமைத்த ஹோட்டல்கள் உள்ளன. அதுபோன்று விமானப்படை அமைத்த ஹோட்டல் ஒன்றும் உள்ளது. மேலும் பல வியாபார நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய சிறிய சிறிய விடயங்கள் காரணமாகத்தான், காணிகளை விடுவிக்காமல் வைத்துள்ளனர்.”

தமது பாரம்பரிய காணியில் அமைக்கப்பட்டிருந்த பல வழிபாட்டுத் தலங்கள், யுத்தம் முடிவடைந்து சில ஆண்டுகள் கடந்த பின்னர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தாலும் இராணுவத்தாலும் அழிக்கப்பட்ட விதம் குறித்தும் வி. ஜெகநாதன் கொழும்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியிருந்தார்.

“இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் என்ற பெயரில் எமது காணியில் இருந்த 21 மதத் தலங்கள் 2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. இந்து, கத்தோலிக்க மதத் தலங்கள், அதே போன்று ஐந்து பாடசாலைகள் இடிக்கப்பட்டுள்ளன. இடிக்கப்பட்டது மட்டுமின்றி, சிவில் பாதுகாப்புத் திணைக்களமும் இராணுவமும் எமது வீடுகள், மதத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை இடித்து அழித்துவிட்டு விவசாயம் செய்கின்றன.”

கமாண்டர்ஸ் பங்களா என அழைக்கப்படும் வட மாகாண இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை அமைப்பதற்காக 150 தமிழ் குடும்பங்களின் வீடுகள் இராணுவத்தினால் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“மயிலிட்டியில் சுமார் 150 வீடுகள் இடிக்கப்பட்டு, ‘கமாண்டர் பங்களா’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஜெனரல் ஒருவர் மாதத்திற்கு ஒருமுறை வந்து தங்குவதற்காக, 150 குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவிட்டு ‘கமாண்டர் பங்களா’ கட்டப்பட்டுள்ளது.”

இராணுவத்தினரால் பலவந்தமாக கைப்பற்றப்பட்டுள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பிரதேசத்திலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, ‘கமாண்டர்ஸ் பங்களா’ என அழைக்கப்படும் வட மாகாண இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக 2026 ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், 2026 ஜூன் 21 ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தியிலும் காணியை இழந்தவர்களினால் வாராந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் கைப்பற்றப்பட்டுள்ள வடக்கு மக்களின் காணிகளை விடுவிப்பது தமது விருப்பம் என ஆறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் தெரிவித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, அது தொடர்பாக இராணுவத்திடம் அறிக்கையொன்றைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டதாக இலங்கை த தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன், ஓகஸ்ட் 03 ஆம் திகதி ஜனாதிபதியை சந்தித்ததன் பின்னர், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கொழும்பிலுள்ள ஊடகவியலாளர்களைச் சந்தித்தவேளை குறிப்பிட்டார்.

 

Latest articles

Similar articles