சிறைக்கைதிகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் இலங்கையின் முன்னணி அமைப்பொன்றின் உயர்மட்ட பிரதிநிதிகள் இருவருக்கு கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
கைதிகளின் மனித உரிமைகள் மீறப்படுவது தொடர்பான தலையீடுகளை உடனடியாக நிறுத்துமாறு, சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் (CPRP) தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கும் கடிதங்கள் ஓகஸ்ட் 05 ஆம் திகதி குறித்த அமைப்பின் அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக, அந்த அச்சுறுத்தல்களை வன்மையாகக் கண்டித்து தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட மக்கள் அமைப்புகளால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
நீர்கொழும்பு மற்றும் மஹர உள்ளிட்ட சிறைச்சாலைகளில் கைதிகளின் மரணங்கள் குறித்து CPRP தலைமைத்துவம், ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்தமையும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
“தேசப்பற்றுள்ள பாதுகாப்புப் பிரிவு” எனக் குறிப்பிட்டு, ஜூலை 17 ஆம் திகதியிடப்பட்டு, சிறைக்கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேராவுக்கும் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் சில்வாவுக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ள இரண்டு அச்சுறுத்தல் கடிதங்களையும் பார்ப்பதற்கு எமக்கு கிடைத்தது.
“மேற்குறிப்பிட்ட இருவருக்கும் தற்போது வந்துள்ள இரண்டு அச்சுறுத்தல் கடிதங்களிலும், இது தொடர்பாக செயற்பட வேண்டாம் என்றும், செயற்பட்டால் பூமிக்கு ஆறு அடி ஆழத்திற்கு செல்ல நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது”
‘ஆறு அடி ஆழத்திற்கு அனுப்புவோம்’ என்ற கொலை அச்சுறுத்தலைக் கொண்ட அந்த இரண்டு கடிதங்களும் ஓகஸ்ட் 05 ஆம் திகதி சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் அலுவலகத்திற்கு கிடைத்தவுடன், குறித்த அமைப்பு உடனடியாக தொலைபேசி ஊடாக ‘Tell IGP’-இற்கு அறிவித்துள்ளதுடன், ஓகஸ்ட் 06 ஆம் திகதி பொரளை பொலிஸிலும் முறைப்பாடு செய்துள்ளது. அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டதாக சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்தது.
இந்த கொலை அச்சுறுத்தல்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என தெரிவிக்கும் மூத்த ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், இது தொடர்பில் ஆராய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என வலியுறுத்தியுள்ளார்.
“இதனை இலகுவாக எடுத்துக்கொள்ள முடியாது காரணம், இந்த நாட்டில் இதுபோன்ற செயல்கள் இந்த முறைகளில் தான் பல்வேறு அரசாங்கங்களின் கீழ் ஆரம்பமாகின.”
உயிரிழந்த கைதிகளின் வீடுகளுக்குச் சென்று அது தொடர்பான தகவல்களைத் திரட்டிவரும் ஊடகவியலாளர்களுக்குக் கூட பல்வேறு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவது தெளிவாகப் புலப்படுவதாகவும் ஜோசப் ஸ்டாலின் இதன்போது குறிப்பிட்டார்
கைதிகளின் கருத்துக்களை நாட்டுக்கு வெளிப்படுத்தும் இதுபோன்ற அமைப்புகளை அடக்குவதன் மூலம் கைதிகளின் குரலும் ஒடுக்கப்படுகின்றது என்பதை வலியுறுத்திய ஆசிரியர் சங்கத் தலைவர், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பின் இரு பிரதிநிதிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் உடனடியாக விசாரணையொன்றை நடத்துமாறு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.
சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பானது இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு அல்ல என்பதை வலியுறுத்திய ஆசிரியர் சங்கத் தலைவர், அவர்கள் எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாகவும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
“இதுபோன்ற அச்சுறுத்தல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கைக்காகவும் குரல் கொடுக்க நாம் தயாராக இருக்கிறோம் என்ற விடயத்தை கூற விரும்புகிறோம்.”
