“மன்னாரின் வளத்தையும் சுரண்டி வாழ்வியலையும் கெடுப்பது நியாயமா” ஜனாதிபதிக்கு கடிதம்!

மன்னார் தீவில் அமைக்கப்படும் பெரிய அளவிலான காற்றாலைகள் சுற்றுச்சூழலுக்கும் மக்களின் வாழ்க்கைக்கும் அழிவை ஏற்படுத்தும் என்ற உள்ளூர் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்காமல் முதலீட்டாளர்களை அனுமதித்ததற்காக மன்னார் மக்கள் ஜனாதிபதியை அதிருப்தி அடைந்துள்ளனர்.

“மன்னார்த்தீவுப் பகுதிக்குள் காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டங்கள் வேண்டாம் எனும் மன்னார் மக்களின் கூட்டுக் கோரிக்கையை அடியோடு நிராகரித்து ஆட்சியாளர்கள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது கடும் விசனத்துடன் ஆழ்ந்த கவலை அடைகின்றோம்.”

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 20 மெகாவொட் ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலைகள் உற்பத்தி நிலையம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் தேசிய மின்கட்டமைப்போடு உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், சமத்துவம் என்பது வெறும் வார்த்தைகளுக்கு மட்டுமல்ல, சமூகநீதி மூலம் நடைமுறையில் நிரூபிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

“ஜனநாயகம் என்பது வலிமையற்றவர்கள் கடலுக்குள் உப்பை கரைப்பதற்கு ஒப்பானது. சமத்துவம் என்பது உதட்டளவில் அல்ல அது சமூக சமநீதியாக செயல் வடிவம் பெற வேண்டும்.”

2050 ஆம் ஆண்டளவில் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வு இலக்கை எட்டும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, CEYLEX Renewables நிறுவனத்தினால் மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட, 20 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட ‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ (WINDSCAPE MANNAR) காற்றாலை மின்நிலையம் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது.

‘மன்னார் விண்ட்ஸ்கேப்’ காற்றாலை மின் திட்டத்தின் கீழ், நாட்டின் வலுசக்தி வரலாற்றில் முதல் முறையாக, தலா 05 மெகாவொட் கொள்ளளவைக் கொண்ட மிகப்பெரிய 04 காற்று விசையாழிகள் நிறுவப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு நிறுவனம் ஒன்றினால் இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படுவதால், வெளிநாட்டு ஒப்பந்ததாரர்களுக்குச் செல்லும் பாரிய வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்குள்ளேயே தக்கவைத்துக்கொள்ள முடிந்துள்ளதோடு, இது உள்நாட்டுப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த பங்களிப்பு செய்கிறதென அதில் கூறப்பட்டுள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இணங்க, மன்னாரில் ஹேலிஸ் பென்டொன்ஸ் லிமிடெட் (Hayleys Fentons Limited) நிறுவனத்தால் நிர்மாணிக்கப்படும் 50 மெகாவோட் காற்றாலை மின் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வும் ஜனவரி 15ஆம் திகதி, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.

இன அடிப்படையிலான அடக்குமுறையில் எந்த மாற்றமும் இல்லை

இனத்துவ மொழித்துவ பிரதேசத்துவ வேறுபாடுகள் அடிப்படையில் பௌத்த தேசியவாத இனவாத அடக்குமுறை கோட்பாட்டை பஞ்சசீல சித்தாந்தம் இன்றி அடிப்படை வாதமாகவே மேலெழுந்தது அதனால் தான் இந்த நாட்டில் 70 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டிமைவாத அடக்குமுறையை அணைய விடாமல் பிரகாசித்து பாதுகாத்து ஆட்சி மாறினாலும் கட்சி மாறினாலும் வழி வரைபடம் மாறுவதில்லை என்பதே கசப்பான உண்மை என, பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அழிவுகரமான முறையில் நிறுவப்பட்ட காற்றாலைகள் மீது உள்ளூர்வாசிகள் நடத்திய போராட்டத்தை எதிர்கொண்டு, மன்னார் தீவில் கட்டுமானத்தைத் தொடங்கியுள்ள இரண்டு புதிய காற்றாலைகள் தொடர்பான மன்னார் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஓகஸ்ட் 13, 2025 அன்று ஜனாதிபதி அளித்த வாக்குறுதியையும் உறுதிப்படுத்தும் இந்தக் கடிதம், ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகள் மற்றும் வலிகள் பற்றிய சரியான புரிதல் இல்லாததால், இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்ந்து சபிக்கப்பட்டுள்ளது ன வலியுறுத்துகின்றது.

“மன்னார் மாவட்டம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் அதன் இயல்பை கெடுக்காமல் பாதுகாப்பதே அவசியமாகும் எமது மக்களின் கூட்டு கோரிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டு திட்டமிட்டபடி 14 காற்றாலை பணிகளும் நடைபெறுகின்றன கனிமமண் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் என எமக்கு கூறினீர்கள் ஆனால் கனிமமண் அகழ்வுக்குரிய இரண்டு நிறுவனங்களும் தமது செயற்பாட்டை தொடர்ந்த வண்ணமே உள்ளனர்.”

“அதானிக்கு வழங்க இருந்த 52 காற்றாலைக்குரிய இடங்களும் வேலை நிறுத்தப்படவில்லை அதானியின் கம்பனி தான் வெளியேறியதே தவிர திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை காணி சுவீகரிப்பும் நிறுத்தப்படவில்லை.” என கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதே கடிதத்தில், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்புத் திணைக்களம் ஆகியன வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கையகப்படுத்தியுள்ள 220 ஆயிரம் ஹெக்டேயர்களுக்கும் அதிகமான காணியில் காணப்படும் விவசாய நிலங்கள் மற்றும் குளங்களை விடுவிக்கத் தவறியது குறித்தும் சிவகரன் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“221,220 ஹெக்டேயர் நிலம் மன்னார் மாவட்டத்தில் வனத்திணைக்களம், வன விலங்குகள் திணைக்களத்தினாலும் வர்த்தமானிக்குட்படுத்தப்பட்டள்ளது. இதில் 35,750 ஏக்கர் நிலம் வளம் மிக்க பயிர்ச்செய்கைக்குரிய இடமாகும் அதில் 108 குளங்களும் உள்ளடங்குகின்றன. இதனை விடுவிக்குமாறு தங்களிடம் கோரியபோது ஆறு மாதத்துக்குள் விடுவிப்பதாக கூறினீர்கள். இதுவரை ஏதும் நிகழவில்லை, உரித்து நிர்ணயம் செய்யப்பட்ட காணியை கூட பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது.

ஏழைகள் வாழ்வாதாரத்திற்கு பாலைப்பழம் பிடுங்குவதற்கு கூட முடியாத மிக மோசமான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

“புதிதாக கூடியேறுவதற்கு ஒரு துண்டு நிலம் கூட இல்லை முப்படைகளுக்கும் பௌத்த கோயில்கலையும் கட்டமைப்பதற்கு எந்தச் சட்டமும் கட்டுப்படுத்துவதில்லை மன்னாரின் வளத்தையும் சுரண்டி வாழ்வியலையும் கெடுப்பது நியாயம் தானா? தற்பேதைய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவார்களுக்கு கூட இதுவரை முறையாக நிவாரனம் கிடைக்கவில்லை.” எனவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாட்டாளி வர்க்கத்தின் நண்பன் எனக் கூறும் ஜனாதிபதி தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் காணிகளையாவது விடுவிக்க வேண்டுமென்பதே, மன்னார் மக்களின் எதிர்பார்ப்பு எனவும், பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

Similar articles