மனித உரிமைகள் தினத்தில் ‘டித்வா புயலை தொடர்புபடுத்தி’ மனித உரிமைகள் தலைவரிடம் கேள்வி

ஒட்டுமொத்த இலங்கையையும் பாதிப்புக்குள்ளாக்கிய டித்வா புயலின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்கு (கிட்டத்தட்ட) சமமான எண்ணிக்கையில், காணாமலாக்கப்பட்ட தமது நெருங்கிய உறவினர்களத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், எந்தவொரு நாடும் தமக்கு உதவ முன்வராதது ஏன் என்ற கேள்வியை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் முன்வைக்கின்றனர்.

“தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கணவன்மார் உள்ளிட்ட சொந்தங்களைத் தேடிக்கொண்டிருந்த சுமார் 500 பெற்றோரும் உறவினரும் பதில்களோ, நீதியோ பெறாமலேயே மரணித்து விட்டனர். இந்த எண்ணிக்கை அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கைக்கு அண்மித்த எண்ணிக்கை ஆகும். ஆனால் எமது மரணங்கள் தொடர்பில் எந்தவொரு நாடும் கவலை தெரிவிக்கவோ, உதவ முனவரவோ இல்லை. சர்வதேச சமூகம் இந்த தொடர்ச்சியான துன்பியல் நிலை பற்றி இனங்காணத் தவறியது ஏன்?”

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில், வடக்கு கிழக்கில் வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் கடந்துவிட்ட போதிலும் நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை தென்பட வில்லை என வலியுறுத்தியுள்ளார்.

“இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துடன், நிவாரணக் கண்ணோட்டத்தைக் கருத்திற்கொள்ளும் நாடுகளுக்கு நாங்கள் நினைவுபடுத்துவது என்னவென்றால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் கடந்துவிட்ட போதிலும் நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இன்னும் இல்லை. ஏற்கனவே வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் ‘டித்வா’ புயல் காரணமாக மென்மேலும் பாதிக்கப்பட்டுள்ளது.”

மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 திகதியன்று அம்பாறை திருக்கோவில் பொதுச்சந்தைக்கு முன்னால் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதோடு தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய அநீதிகளுக்கு சர்வதேச விசாரணையின் மூலமே பொறுப்புக்கூறல் நடைபெற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

“இலங்கையில் அதிகாரத்தைப் பெறுவதற்கு இன வெறுப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இருக்கும் வரைக்கும் எந்தக் கட்சியையும் சேர்ந்த எந்தவொரு ஜனாதிபதிக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கான தேவையோ திறனோ இருக்காது. எனவே, எங்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய அநீதிகளுக்குப் பொறுப்புக்கூறல் சர்வதேச விசாரணையின் மூலமே நடைபெற வேண்டும். இது உடனடியாக நடக்க வேண்டும்.”

எனவே, சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“எனவே, எமது நீண்டகால கோரிக்கையை நாம் மீண்டும் முன்வைக்கிறோம்: இனப்படுகொலை, சர்வதேச குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துங்கள்.”

நாடு முகங்கொடுத்த அனர்த்த நிலைமை காரணமாக ஏனைய வருடங்களைப் போல் சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் நீதி கோரி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை இந்த தடவை காண முடியவில்லை என பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Latest articles

Similar articles