சர்வதேச தலையீட்டுடன் அரசாங்கம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்குப் பதிலாக, ஒரு சுயாதீன சட்டத்தரணிகள் அலுவலகத்தை நிறுவ அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவரின் பொருத்தப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
முறைப்பாட்டாளரான அரசாங்கத்தின் சட்டத்தரணியாகவும் செயற்படும் சட்டமா அதிபர் திணைக்களமே குற்றம் சாட்டப்படும் அரச அதிகாரிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் நடைமுறை, உள்ளூர் மற்றும் சர்வதேச சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், அரசாங்கம் அந்த அலுவலகத்தை நிறுவ வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவிற்கு அமைய, சுயாதீன சட்டத்தரணிகள் அலுவலகத்தை நிறுவும் நோக்கத்துடன் ஒரு தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமிக்க மே மாதம் அமைச்சரவை அனுமதி அளித்ததோடு, இது உச்ச நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட தலைமையில் செயல்படும்.
அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் தலைவராக இருக்கும் நீதிபதி, சுயாதீன சட்டத்தரணிகள் அலுவலகத்திற்கு ஆலோசனை வழங்குவது குறித்து, மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (CHRD) நிறைவேற்றுப் பணிப்பாளரும் மூத்த சட்டத்தரணியுமான கே.எஸ். ரத்னவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
“அவர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் பணியாற்றியபோது, ஜனாதிபதி ஆணைக்குழு, அந்த ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்தபோது, ACF கிள்ளிங்ஸ் என சொல்வார்கள். அதில் நியமிக்கப்பட்ட சர்வதேச சட்ட நிபுணர்கள், சட்டமா அதிபர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அந்த விசாரணையை நிராகரித்து அதிலிருந்து விலகிக் கொண்டனர். எனவே, அத்தகைய நபர் இப்போது சுயாதீன சட்டத்தரணிகள் அலுவலகத்திற்கு எவ்வாறு ஆலோசனை வழங்க முடியும், அது எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை நாம் ஆராய வேண்டும்.”
பரிஸை தளமாகக் கொண்ட ‘பசிக்கு எதிரான நடவடிக்கை’ (Action Contre la Faim – ACF) அலுவலக வளாகத்தில் ஓகஸ்ட் 2006 இல் 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை ‘ACF படுகொலை’ என அழைக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் எண்ணிம காப்பகத்தைத் திறப்பதற்கு இணையாக, சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை நிலையம் (JILP) ஏற்பாடு செய்த ‘அரசியல் தீர்வும் பொறுப்புக்கூறலும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் விசேட உரையாற்றிய மூத்த சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல், பொறுப்புக்கூறல் என்பது அடைய முடியாத இலக்காக மாறிவிட்டது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ், பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச அதிகாரிகளின் அலட்சியமான அல்லது வெறுப்புடனான அணுகுமுறையே இதற்கு அடிப்படைக் காரணம் எனவும் வலியுறுத்தினார்.
“பொறுப்புக்கூறல் என்பது எங்களுக்கு எட்டாக் கனியாகவே இருக்கின்றது. இந்த பொறுப்புக்கூறல் எவ்வாறு கைநழுவி போகிறது என்பதை ஆராய்ந்தால், அதற்கு அடிப்படையாக இருப்பது சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ், பாதுகாப்புப் படைகள் மற்றும் அரச அதிகாரிகள் இவர்களின் பாராமுகம் அல்லது வெறுப்புடனான அணுகுமுறையாலேயே பொறுப்புக்கூறல் எங்களுக்கு எட்டாமல் இருக்கிறது. அரசியல் விருப்பம் எனச் சொல்வார்கள். நமது நாட்டின் அரசாங்கங்களுக்கு என்றுமே இருந்ததில்லை. எந்தவொரு விடயத்திலும் அழுத்தம் கொடுக்கப்படும்போது மாத்திரமே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவை இடம்பெற்றுள்ளன.”
பொறுப்புக்கூறல் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்மறையான பங்கையே வகிப்பதாக மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் (CHRD) நிறைவேற்றுப் பணிப்பாளரும் மூத்த சட்டத்தரணியுமான கே.எஸ். ரத்னவேல் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“பொதுவாக, சட்டமா அதிபர் திணைக்களத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றினாலே ஒருவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் பின்னர் உச்ச நீதிமன்றத்திற்கும் சென்றுவிடுவார். எனினும், படிப்படியாக நீதித்துறையில் இருப்பவர்கள் நீதவான் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் மேல் நீதிமன்றம் என படிப்படியாக உயர்ந்து வரவேண்டும். இருப்பினும், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருப்பவர்கள் குறுகிய காலத்தில் உயர் பதவிகளுக்கு சென்றுவிடுவார்கள். எனவே, பொறுப்புக்கூறல் விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்மறையான வகிபாகத்தை கொண்டுள்ளது.”
பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள்
சுயாதீன சட்டத்தரணிகள் அலுவலகத்தை நிறுவுவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, ஒக்டோபர் 1, 2025 அன்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணாயக்காரவுடன் கலந்துரையாடல் நடத்தியது, மேலும் அலுவலகத்தை நிறுவுவதற்கான ஆரம்ப திட்டங்களைத் தயாரிப்பது குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டதாக அமைச்சு அறிவித்தது.
அதன் ஆரம்பக் கருத்துருவை வரைந்த பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்கள் பெறப்படும் என அமைச்சு மேலும் குறிப்பிட்டிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் உச்ச நீதிமன்ற நீதிபதி, ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட, சட்டமா அதிபர், ஜனாதிபதி சட்டத்தரணி பரிந்த ரணசிங்க, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி அயேஷா ஜினசேன, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி ராஜீவ் அமரசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, ஜனாதிபதி சட்டத்தரணி யு.ஆர். டி சில்வா மற்றும் மூத்த சட்டத்தரணிகள் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Source; Thamilan.lk
