K-pop காணொளியை பார்த்த 2 சிறுவர்ளுக்கு தண்டனை ’12 வருட கடுமையான உழைப்பு’

தென் கொரியாவின் புகழ்பெற்ற கோ-பொப் நிகழ்ச்சியை கண்டு இரசித்த குற்றத்துக்காக தங்கள் நாட்டைச் சேர்ந்த இரு சிறுவர்களை 12 வருடங்கள் கடுமையான வேலை செய்யுமாறு வட கொரிய அரசு தண்டனை விதித்துள்ளது.

இந்த விடயம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தண்டனை தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியில், ஒரு திறந்தவெளி அரங்கில் பழுப்பு நிற உடையணிந்த 2 சிறுவர்கள் கைகள் கட்டப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள். அரங்கில் 1000 சிறுவர்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்கின்றனர். இது அந்த காணொளி கொவிட் காலத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

அப்போது ஒருவர் தண்டனையை அறிவிக்கிறார். அவர்கள் இருவரும் வெளிநாட்டுக் கலாச்சாரத்தால் ஈர்க்கப்பட்டதால் வாழ்க்கையை அழித்துக் கொண்டார்கள் என கூறுகிறார்.

வட கொரியா பல ஆண்டுகளாகவே தென் கொரியாவுடன் எந்த விதத்தில் தொடர்பு ஏற்படுத்தினாலும் சொந்த மக்களை தண்டிக்கும் போக்கைக் கொண்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு இதற்காக பிரத்யேக சட்டத்தைக் கொண்டுவந்தது. தென் கொரிய பொழுதுபோக்கு அம்சங்களை இரசிப்பதை தடை செய்யும் சட்டம் அது. அந்தச் சட்டத்திற்கு அமையவே அந்த இரண்டு சிறுவர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வட கொரியாவில் இருந்து கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியேறி ஜப்பானில் தஞ்சமடைந்து அங்குள்ள டோக்கியோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பேராசிரியராக இருக்கும் முனைவர் சோய் க்யோங் ஹுய் கூறுகையில், “இதுபோன்ற கடுமையான தண்டனையை அளித்ததன் மூலம் ஒட்டுமொத்த வட கொரிய மக்களுக்கும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரிய கலாச்சாரம் வட கொரியாவில் ஊடுருவி வருவதை இது உறுதிப்படுத்துகிறது.” எனக் குறிப்பிட்டுள்ளார். (Hindutamil)

Latest articles

Similar articles