போர் முடிவடைந்த பின்னர் வடக்கில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை கையகப்படுத்துவதற்காக மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்து செய்யப்படாத நிலையில், காணிகளை இழந்துள்ள அப்பகுதி தமிழ் மக்கள் தங்களது பாரம்பரிய காணிகளை மீண்டும் வழங்குமாறு கோரி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்த போராட்டங்கள் மேலும் விரிவடைந்துள்ளது.
காணிகளை விடுவிக்கக் கோரி ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு மேலதிகமாக, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் யாழ்ப்பாணம், வசாவிளான் பகுதியில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தற்போது யாழ்ப்பாணத்தில் மூன்று இடங்களில் வார இறுதி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படாத நிலையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அதனை தமிழ் மக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவதாக, வசாவிளான் பகுதியில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) மூத்தத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கத்தால் அந்த வர்த்தமானி அறிவித்தலை இப்போதும் நீக்க முடியும். ஆனால், அதனை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி புதிய முறையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம் பயன்படுத்துகிறது.”
தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 6,000 ஏக்கர் தனியார் காணிகளை கையகப்படுத்தி, 2013ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. எனினும் சுமார் 3,000 ஏக்கர் காணிகளில் அன்றாட வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் காணி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை இரத்து செய்யப்படவில்லை. இதன் காரணமாக, அந்தக் காணிகளுக்கான சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டாலும், அதற்கான குறிப்பிட்ட திகதி எதனையும் அறிவிக்காததன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இதன்போது குற்றஞ்சாட்டினார்.
“அண்மையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்கூட, ‘நாங்கள் விரைவில் காணிகளை விடுவிப்போம்’ என்றுதான் கூறுகிறார்கள். ஆனால், இந்த ‘விரைவில்’ என்பது இன்னும் எத்தனை நாட்கள்? எத்தனை மாதங்கள்? என்பதைத் தெளிவாகக் கூற அவர்கள் தயாராக இல்லை. இந்த மக்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதையே இந்த அரசாங்கமும் ஆட்சியும் செய்து வருகிறது.”
அரச பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த விவசாய உற்பத்திப் பொருட்களை அதே காணிகளின் உரிமையாளர்களே பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் சுட்டிக்காட்டினார்.
“நான் தற்போது நின்று பேசிக்கொண்டிருக்கும் இடத்திலிருந்து கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள காணிகளில் எந்தவிதமான இராணுவ முகாம்களும் இல்லை. ஆனால், அங்கு முழுமையாக இராணுவத்தினர் விவசாயம் செய்கின்றனர். அந்தப் பகுதிகளில் இராணுவத்தினர் விவசாயம் செய்து, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை இதே மக்களுக்கே விற்பனை செய்கின்றனர். தங்களுக்குச் சொந்தமான காணிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை இராணுவத்தினரிடமிருந்து பணம் கொடுத்து வாங்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.”
தமிழ் மக்களின் பாரம்பரிய காணிகளில் அமைந்திருந்த வழிபாட்டு இடங்கள் மற்றும் பாடசாலைகளின் நிலைமையையும் தமிழ் மக்களின் பிரதிநிதி இதன்போது வெளிப்படுத்தினார்.
“இங்குள்ள பாடசாலைகள் மற்றும் கோவில்களுக்குச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மிகவும் வறுமையான நிலையில் வாழும் இந்த மக்களுக்கு சொந்தமான காணிகளை இந்த அரசாங்கம் விடுவிக்காமல், 2013ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை தொடர்ந்து வைத்துக்கொண்டு, மிகப்பெரிய ஆயுத அடக்குமுறையை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது என்பதை நாங்கள் மிகவும் தெளிவாகக் கூறுகிறோம்.”
இராணுவத்தினரால் பலவந்தமாக கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி, 2026 ஏப்ரல் 24ஆம் திகதி முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வடக்கு மாகாண இராணுவத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ‘கமாண்டர் பங்களா’ என அழைக்கப்படும் இடத்திற்கு முன்பாக காணி உரிமையாளர்களால் வாராந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, 2026 ஜூன் 21ஆம் திகதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி சந்தியிலும் காணிகளை இழந்த மக்கள் வாராந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு மக்களின் தனியார் காணிகளை விடுவிப்பது தமது விருப்பம் என ஆறு தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்ததாகவும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாகவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ. சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.
