வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) அரச அனுசரணையுடன் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வுக்கு, போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 31 பேர் உயிருடன் இருப்பதாகக் கூறும் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர், அவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடாமல் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றி வருவதாக போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிட்டா, மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் அருகில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“31 பேரை கண்டுபிடித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். அந்த 31 பேர் யார் என்பது எங்களுக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல, இரண்டு வாரங்களுக்கு முன்னர் நாங்கள் ஒரு பயிற்சிப் பட்டறைக்குச் சென்றபோது, OMP அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவர் 27 பேரைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார். அந்த 27 பேர் யார் என்று கேட்டபோது, அது எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள். நாங்கள் சொல்லமாட்டோம் என்கிறார்கள். அப்படியானால் OMP என்றால் என்ன? உண்மை இல்லாத OMP.”
காணாமல் போனோர் தொடர்பான இருபத்திரண்டாயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளை எட்டு ஆண்டுகளாக விசாரணை செய்து, அவர்களில் 31 பேர் உயிருடன் இருப்பதை கண்டறிந்துள்ளதாக, காகாணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் பதவியில் ஐந்தாவது ஆண்டாகப் பணியாற்றி வரும் சட்டத்தரணி மகேஷ் கட்டுலந்த, அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
“காணாமல் போன சம்பவங்களுடன் தொடர்புடைய சில சந்தேகத்திற்கிடமான தகவல்கள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில், சுமார் 2,000 முறைப்பாடுகள் மேலதிக விசாரணைக்காக எமது தடயமறிதல் மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 31 பேர், காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருந்த போதிலும், தற்போது உயிருடன் இருப்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அவ்வாறு உயிருடன் இருப்பதாக கண்டறியப்பட்டவர்களில் மூவர் கடந்த காலத்தில் இயற்கை காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.”
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு–கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முயன்றபோது, பொலிஸார் போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செயற்பட்டதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, சிவானந்தன் ஜெனிட்டா பொலிஸ் அதிகாரிகளிடம் கடுமையாக கேள்வி எழுப்பியதுடன், தமது பிள்ளைகளின் பிரிவால் துயருற்று வீதியில் போராடும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களுக்கு காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திடமிருந்து கிடைக்கும் நீதி என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
“இது உங்களுடைய பிரச்சினை அல்ல. பிள்ளைகளை இழந்தால்தான் அந்த வேதனை என்ன என்பது தெரியும். அவர்கள் வெறுமனே இழப்பீடு வழங்கும் அலுவலகமாகவே இதை வைத்திருக்கிறார்கள். அந்த இழப்பீட்டு அலுவலகத்தால் எங்களுக்கு நீதியை வழங்க முடியுமா? ஒரு பிள்ளையின் பெறுமதி என்ன என்பது அவர்களுக்குத் தெரியுமா? துயரத்துடனும் வேதனையுடனும் இந்த வீதியில் நிற்கும் மக்களுக்கு கிடைக்கும் நீதி என்ன?”
காணாமற்போனோர் பற்றிய அலுவலகம், ஒகஸ்ட் 25ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்காக வைத்திய முகாம், தொழில் வழிகாட்டல் உள்ளிட்ட பல்வேறு நடமாடும் சேவைகளை நடத்தியதாக பிராந்திய ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 352 குடும்பங்கள் கலந்துகொண்டதாகவும், 217 பேர் வைத்திய முகாமில் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நடவடிக்கையும் இதன்போது இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டவர்களில் 31 பேர் உயிருடன் இருப்பதாக காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் கண்டறிந்துள்ள தகவல்கள், அவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் அவர்களது குடும்பங்களுக்கு மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் 1,594 சம்பவங்கள் மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளன. குடும்பங்களின் சட்ட மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, 2026 ஜூலை 31ஆம் திகதி வரையில் 2,719 காணாமற்போனமைக்கான சான்றிதழ்களும் (Certificate of Absence), 409 மரணச் சான்றிதழ்களும் (Certificate of Death) வழங்கப்பட்டுள்ளன. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 31 பேர் தொடர்பான இறுதித் தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன. தனியுரிமையைப் பாதுகாக்கும் நோக்கில் அந்தத் தகவல்கள் சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 5,427 பேருக்கு இழப்பீடு வழங்குவதற்காக இழப்பீட்டு அலுவலகத்திற்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.”
காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் நினைவு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்தமை தொடர்பில், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கமும் ஒகஸ்ட் 24ஆம் திகதி மன்னார் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை முன்னிட்டு, காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் யாழ்ப்பாணத்தில் இவ்வாறான நிகழ்வொன்றை ஏற்பாடு செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என கேள்வி எழுப்பிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினையை நாட்டிற்குள்ளேயே தீர்த்துவிட்டதாக சர்வதேச சமூகத்திற்கு காண்பிப்பதற்காகவே காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
“ஒரு நாட்டில் சர்வதேச நடைமுறைகளைப் பின்பற்றுவதில்லை என்று கூறும் அரசாங்கம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை எதற்காகக் கொண்டாடுகிறது? அவர்களது சட்டங்களும் நடைமுறைகளும் எமது நாட்டுக்குத் தேவையில்லை. ஆனால் OMP மற்றும் அரசாங்கம் இணைந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சர்வதேச தினத்தை கொண்டாடுவதன் மூலம், ‘சர்வதேச சமூகத்திற்கு நாங்கள் நாட்டிற்குள்ளேயே தீர்வை வழங்கிவிட்டோம். இங்கு வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் எதுவும் இல்லை. அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டுவிட்டன’ என்று காட்டுவதற்காகவே இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.”
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும் எனக் கூறி அரசாங்கம் முன்வைத்துள்ள இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்வதையும், தமது நெருங்கிய உறவுகளை இழந்துள்ள போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்கள் கடுமையாக நிராகரிப்பதாக தெரிவித்த அந்த சிவில் சமூக செயற்பாட்டாளர், போரினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் தங்களது பிள்ளைகளையே மீண்டும் கோருகின்றனர் என வலியுறுத்தினார்.
“எங்கள் உறவினர்கள் கேட்பது இழப்பீடு அல்ல. எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள். இல்லையெனில், அவர்களை நீங்கள் கடத்திச் சென்று காணாமல் ஆக்கி கொலை செய்தீர்கள் என்பதை சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளுங்கள்.”
