டுபாய் விமான நிலையத்திற்கு கடந்த 2023ஆம் ஆண்டில் 8 கோடியே 69 இலட்சம் பேர் வந்துள்ளனர்.
இவர்களில் இந்தியர்கள் 1 கோடி 19 இலட்சம் பேர் என டுபாய் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டுபாய் விமான நிலையத்திலிருந்து 104 நாடுகளில் உள்ள 262 நகரங்களுக்கு 102 விமான நிறுவனங்கள் மூலம் செல்ல முடியும். இதனால் கடந்தாண்டில் டுபாய் விமான நிலையத்துக்கு வந்த பயணிகளின் எண்ணிக்கை 8 கோடியே 69 இலட்சமாக அதிகரித்துள்ளது.
67 இலட்சம் பேருடன் சவுதி அரேபியா இரண்டாவது இடத்திலும், 59 லட்சம் பேருடன் இங்கிலாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.
வெளிநாட்டு பயணத்துக்கு டுபாய் சர்வதேச விமான நிலையம்மிகவும் பரபரப்பான விமான நிலையமாக காணப்படுகிறது.
இதனால் டுபாய் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த நான்காவது காலாண்டில் டிசம்பர் மாதத்தில் அதிகளவாக 78 இலட்சம் பேர் சென்றுள்ளனர்.
அதேபோல் கடந்தாண்டில் விமான பயணிகளின் 7 கோடியே 75 இலட்சம் பைகளையும் டுபாய் விமான நிலையம் கையாண்டுள்ளது. இதன் வெற்றி சதவீதம் 99.8 சதவீதம். 1,000 பயணிகளில் இருவர் மாத்திரமே தங்கள் பைகளை மாற்றி எடுத்துச் செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாய் விமான நிலையத்தில் கடவுச் சீட்டை சரிபார்க்க 7 நிமிடங்களுக்கும் குறைவான காலமே எடுத்துக்கொள்ளப்படுவதாக 95 சதவீத பயணிகள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு சோதனை 4 நிமிடங்களுக்கு குறைவாக உள்ளது.
இவ்வாறான காரணங்களால் விமான நிலைய சேவையில், டுபாய் விமான நிலையம் உலகளவில் சிறந்த இடமாக விளங்குகிறது. (Hindutamil)
