தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாகவும், சண்டைப் பயிற்சியாளர்கள் இயக்குநர்களாகவும், தனுஷ் போன்ற நாயகர்கள் இயக்குநர்களாகவும் மாறி வரும் சூழலில், இப்போது கலை இயக்குநர் ஒருவர், இயக்குனர் அவதாரம் எடுக்கிறார்.
இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’, ‘இந்தியன் 2’, அட்லியின் ‘தெறி’, ‘பிகில்’, ‘மெர்சல்’ ‘ஜவான்’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட பல படங்களின் கலை இயக்குநரான அறியப்பட்டவர் டி. முத்துராஜ். இப்போது ‘பேபி ஜோன்’, ‘இந்தியன் 3’, ‘எல்.ஐ.கே’, இளையராஜா பயோபிக் ஆகிய படங்களின் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் விரைவில் இயக்குநராகவுள்ளார் முத்துராஜ். இது குறித்து விகடன் சினிமா சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில், ”கலை இயக்குநர்கள் இயக்குநர்களாக மாறுவது ஒன்றும் புதிதான விஷயமல்ல. ஹொலிவுட்டில் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன், நம் சினிமாவில் இயக்குநர்கள் பரதன், அடூர் கோபாலகிருஷ்ணன் இப்படி பல கலை இயக்குநர்களாக இருந்து இயக்குநர் ஆனவர்கள் தான். அந்த வகையில் முத்துராஜூம் இயக்குநர் ஆகிறார். சாபு சிரிலிடம் உதவியாளராக இருந்தவர். இயக்குநர்கள் ஷங்கர், அட்லீ இவர்களின் குட்புக்கில் இருப்பவர். படம் இயக்க வேண்டும் என்பது அவரது பல வருட கனவு” எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் குழந்தைகளுக்கான படமாக இயக்குகிறார். இப்போது அதற்கான முன் தயாரிப்பு வேலைகளில் இறங்கியிருக்கிறார். அடுத்தாண்டு அதன் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள். ‘காக்கா முட்டை’யில் சிறந்த குழந்தை நட்சத்திரங்கள் கிடைத்தது போல, முத்துராஜின் படத்திலும் சிறந்த நடிகர்கள் நிச்சியம் கிடைப்பார்கள்” என்கிறார்கள் அவர்கள்.
