அல்லு அர்ஜுனுக்கு பிணை: என்ன வழக்கு? குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்ன தண்டனை? (முழு விபரம்)

டிசம்பர் 4ஆம் திகதியன்று புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி கூட்டத்தில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனை நம்பள்ளி நீதிமன்றம் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுக்க உத்தரவிட்டது.

இந்நிலையில், அவருக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால பிணை வழங்கியது.

“அல்லு அர்ஜுன் வைத்திய பரிசோதனைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அல்லு அர்ஜுனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கியது” என்று ஏ.என்.ஐ செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால பிணை வழங்கியது.

‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் டிசம்பர் 5ஆம் திகதி வெளியானது. அதற்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 4ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இரவு 9.30 மணிக்கு விசேட காட்சி திரையிடப்பட்டது.

சந்தியா திரையரங்கில் `benefit show’ நிகழ்ச்சியும் நடைபெற்றது. அங்கு தில்சுக்நகரை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது மனைவி ரேவதி (35), மகன் ஸ்ரீதேஜா (9), மகள் சான்விகா ஆகியோருடன் வந்திருந்தார்.

அன்று அந்த திரையரங்கிற்கு அல்லு அர்ஜுனும் படம் பார்க்க வந்தார். அப்போது அவரைக் காண இரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்களைக் கட்டுப்படுத்த பொலிஸார் தடியடியும் நடத்தினர்.

“இதில் ரேவதியும், அவரது மகன் ஸ்ரீதேஜாவும் கீழே விழுந்தனர். கூட்ட நெரிசலில் அவர்களால் சுவாசிக்க முடியாமல் மயக்கமடைந்தனர். உடனே ரேவதியையும் ஸ்ரீதேஜாவையும் ஒருபுறம் அழைத்துச் சென்று முதல் உதவி செய்தனர். அதன் பிறகு, வித்யாநகரில் உள்ள துர்காபாய் தேஷ்முக் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். ரேவதி ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்” என சிக்கடப்பள்ளி பொலிார் கூறினர்.

ரேவதியின் மகன் ஸ்ரீதேஜாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன், சந்தியா தியேட்டர் நிர்வாகம் மற்றும் அல்லு அர்ஜுனின் பாதுகாவலர்கள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் அண்மையில் அறிவித்தது.

இதுகுறித்து ரேவதியின் (உயிரிழந்த பெண்) கணவர் பாஸ்கர் அளித்த முறைப்பாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

“திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தபோது, அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 30-40 பேர் திடீரென தியேட்டருக்குள் நுழைந்தனர்.”

“அப்போது, ஏராளமான இரசிகர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் திடீரென அங்கு வந்ததால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் ரேவதியும், அவரது மகனும் மூச்சுவிட முடியாமல் சுயநினைவை இழந்திருந்தனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என பொலிஸார் முன்னர் குறிப்பிட்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை காலையில் அல்லு அர்ஜுன் வீட்டிற்கு வந்த சிக்கடப்பள்ளி பொலிஸ் உதவி ஆணையாளர் ரமேஷ் குமார் தலைமையிலான பொலிஸ் குழு, அல்லு அர்ஜுனை காவலில் எடுப்பதாக அவரிடம் தெரிவித்தனர்.

அல்லு அர்ஜுனை பொலிஸார் அழைத்துச் செல்லும் காணொளி ஒன்று வெளியானது.

அதில் அல்லு அர்ஜுன், “உடையை மாற்றிக் கொண்டு வருகிறேன், கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்” என்று கேட்பது பதிவாகியுள்ளது. அந்த காணொளியில் அல்லு அர்ஜுன் “வீட்டின் படுக்கையறைக்குள் வந்து தன்னை அழைத்துச் செல்வது அவமானகரமானது” என்று கூறுவதும் பதிவாகியுள்ளது.

அல்லு அர்ஜுனின் மனைவி சினேகா அழுவதும் அவருக்கு அர்ஜுன் ஆறுதல் கூறுவதும் தெரிகிறது. அதன் பின்னர், அவர் சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அல்லு அர்ஜுன் உடன் அவரது தந்தை அல்லு அரவிந்த், சகோதரர் அல்லு சிரிஷ் ஆகியோரும் சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு வந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக டிசம்பர் 8ஆம் திகதி சிக்கடப்பள்ளி பொலிஸார் 3 பேரை கைது செய்தனர்.

சந்தியா திரையரங்கின் உரிமையாளர்களில் ஒருவரான எம்.சந்தீப், திரையரங்கின் முகாமையாளர் எம்.நாகராஜூ, திரையரங்கின் மேல்தள பொறுப்பாளர் ஜி.விஜய சந்தர் ஆகியோரை பொலிஸாரை கைது செய்தனர். இதையடுத்து இந்த வழக்கில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என கூறி சந்தியா திரையரங்க நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அதுவொரு `பெனிஃபிட் ஷோ’ (Benefit show – ரசிகர்கள் மற்றும் விஐபிகளுக்காக படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஒருங்கிணைக்கப்படும் காட்சி) என்பதால், திரைப்படக் குழுவினர் திரையரங்குடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக திரையரங்க நிர்வாகம் மனுவில் கூறியுள்ளது.

தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி அல்லு அர்ஜுன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அல்லு அர்ஜுன், தான் திரையரங்கிங்கு வருவதாக பொலிஸாருக்கு முன்கூட்டியே தெரிவித்ததாகவும், பெண்ணின் மரணத்திற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மறுபுறம், ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் ஏற்கனவே காணொளி பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்தச் சம்பவத்தால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அவர்களது குடும்பத்திற்கு 25 இலட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அல்லு அர்ஜுன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் மூத்த சட்டத்தரணி சிந்தப்பள்ளி லட்சுமிநாராயணன் பிபிசியிடம் தெரிவித்தார்.

அல்லு அர்ஜுன் மீது பதியப்பட்ட முதல் வழக்கு பி.என்.எஸ் சட்டம் 105. இந்தப் பிரிவு குறித்துப் பேசிய சிந்தப்பள்ளி லட்சுமி நாராயணன், ஒரு நபரின் மரணத்திற்கு ஒரு நபர் மறைமுகமாகப் பொறுப்பேற்றால் இந்தப் பிரிவின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யலாம் எனக் கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்ட நபர் தன் அலட்சியத்தின் மூலம் ஒரு நபரின் மரணத்திற்குக் காரணமானால் இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம். இதுவொரு கொலைக் குற்றமாகக் கருதப்படுவதில்லை. ஆனால், இது தீவிரமான குற்றமாகக் கருதப்படுகிறது” என்றார்.

“இந்தச் சட்டப் பிரிவின்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு, 5 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை, அபராதம் அல்லது அதிகபட்சமாக ஆயுள் தண்டனைகூட விதிக்கப்படும்” என அவர் கூறினார்.

இது பிணையில் வெளிவர முடியாத பிரிவு, ஆனால் நியாயமான காரணங்கள் இருந்தால், குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் ஒருவர் முன்பிணை மனுவை தாக்கல் செய்யலாம் என இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.

ஒருவர் வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்தி இருந்தால், அவருக்குக் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம்.
யாராவது தெரிந்தே, வேண்டுமென்றே மரணத்தை ஏற்படுத்தியதாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்திய தண்டனை சட்டம், 105, 118(1) மற்றும் பி.என்.எஸ் சட்டத்தின் பிரிவு 3(5) ஆகியவற்றை விபரித்த அவர், “இந்தப் பிரிவு, ஒருவர் மற்றவரைக் காயப்படுத்துவது அல்லது தீவிரமாகக் காயப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது” என்றார்.

பாதிக்கப்பட்ட நபர் ஆயுதத்தால் காயமடையும்போது இந்தப் பிரிவு பொருந்தும். அதாவது, ஆயுதம் என்பது துப்பாக்கியால் சுடுவது, கத்தியால் குத்துவது, நெருப்பு அல்லது எரியக்கூடிய பொருளைப் பயன்படுத்துவது, அல்லது வெடிக்கும் பொருளைப் பயன்படுத்துவது, மூச்சுத் திணறல் ஏற்பட வைப்பது அல்லது ஒரு விலங்கைப் பயன்படுத்தி காயப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது 20,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தண்டனைச் சட்டம் கூறுகிறது.

“பாதிக்கப்பட்ட நபருக்கு பலத்த காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனை அல்லது குறைந்தபட்சம் ஓராண்டு முதல் அதிகபட்சம் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது” என்றார் லட்சுமிநாராயணன்.

கூட்ட நெரிசலில் உயிரிழந்த ரேவதி என்பவரின் கணவர் பாஸ்கர், அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை தொலைபேசி வாயிலாக அறிந்து கொண்டதாகக் கூறியுள்ளார்.

“படம் பார்ப்பதற்காக என் குடும்பத்தை சந்தியா தியேட்டருக்கு அழைத்துச் சென்றேன். அல்லு அர்ஜுன் அங்கு வந்தது அவருடைய தவறு அல்ல” என பாஸ்கர் ஊடகங்களிடம் கூறினார்.

“அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை தொலைபேசி மூலமாக அறிந்தேன். இதுபற்றி பொலிஸார் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. தேவைப்பட்டால் வழக்கை மீளப்பெற நான் தயாராக இருக்கிறேன்” என்றார். (BBC Tamil with some changes)

Latest articles

Similar articles