முல்லைப்பெரியாறு ஆற்றங்கரையில் பவதாரிணி நல்லடக்கம்

இளையராஜாவுடன் இணைந்து இசைத்துறையில் பவதாரணி செயற்பட்டு வந்தார். பிரபுதேவா நடித்த ‘ராசய்யா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘மஸ்தானா மஸ்தானா’ என்ற பாடலைப் பாடி பின்னணிப் பாடகியாக தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார் பவதாரிணி.

2001ஆம் ஆண்டு ‘பாரதி’ என்ற படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடல் பாடியதற்காக தேசிய விருது பெற்றார். இதனைத் தொடர்ந்து 2002இல் ரேவதி இயக்கிய ‘மித்ர் மை பிரெண்ட்’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் உருவெடுத்தார். பிறகு அமிர்தம், இலக்கணம், வெள்ளச்சி, மாயநதி உள்ளிட்ட 10 படங்களுக்கு இசையமைத்தார்.

இவருக்கு சபரிராஜ் என்பவருடன் திருமணம் முடிந்தது. குழந்தைகள் இல்லை. இந்நிலையில் உடல்நலக்குறைவால் கடந்த 5 மாதங்களாக இலங்கையில் சிகிச்சைப் பெற்று வந்தவர், இங்கேயே உயிரிழந்தார். அவரின் உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு தி.நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தினர். ரஜினி, கமல், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் பவதாரணியின் உடல் இளையராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்குகள் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய சென்னையிலிருந்து இன்று காலை தேனி மாவட்டம் லோயர்கேம்ப்புக்கு அவரது உடல் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

இளையராஜா மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முல்லைப்பெரியாறு தொடங்கும் இடமான லோயர்கேம்ப் பகுதியில் ஏழரை ஏக்கர் நிலம் வாங்கியிருந்தார். அதில் தங்குவதற்கு பங்களாவுடன் சிரி குரு கிருபாவேத பாடசாலா என்ற வளாகத்தை அமைத்திருந்தார்.

சொந்த ஊர் பண்ணைபுரம் என்ற போதிலும் இளையராஜா தன் தாயார் சின்னத்தாய்க்கு இங்கேயே நினைவிடம் அமைத்திருந்தார். அருகே கடந்த 2011இல் மனைவிக்கும் நினைவிடம் அமைத்தார்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது இளையராஜா குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் தாய் மற்றும் மனைவியின் நினைவிடத்திற்கு இடையே மகளின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (Cinemavikatan)

Latest articles

Similar articles