சிவகார்த்திகேயனின் `அயலான்’ படத்திற்குக் கிடைத்து வரும் வரவேற்பில், ஏ.ஆர்.ரஹ்மானும் மகிழ்ந்திருக்கிறார். `பொன்னியின் செல்வன்’, `மாமன்னன்’ மலையாளத்தில் பிரித்விராஜின் `ஆடு ஜீவிதம்’ (The Goat Life) எனப் படங்களை ரொம்பவே தேர்ந்தெடுத்து இசையமைத்து வருகிறார் ரஹ்மான். இந்நிலையில் `அயலான்’ படத்திற்குப் பின், இப்போது `லால் சலாம்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சில ஆண்டுகளாகவே தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் `ஒக்ஸ்போர்டு யூனியன் டிபேட் சொசைட்டி’ மாணவர்களிடம் நிகழ்ச்சி ஒன்றில் அவரது பேச்சு பலரையும் வியக்க வைத்தது.
“எதிர்காலத்தைப் பற்றி நாம் பெரிதாகக் கணிக்க முடியாது. ஆனால், அற்புதமான ஒன்று உங்களுக்காகக் காத்திருக்கிறது. இதுபோன்ற எண்ணங்களும், நம்பிக்கைகளும்தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றன” என பேசியிருந்தார். ஒரே சமயத்தில் பல படங்களுக்கு இசையமைக்காமல் லிமிட்டான எண்ணிக்கையில் மட்டுமே இசையமைத்து வருகிறார்.
‘மாமன்னன்’ மாரி செல்வராஜ், ‘அயலான்’ ஆர். ரவிக்குமார் என இளம் இயக்குநர்களின் படங்களுக்கு இசையமைப்பதில் ஆர்வம் காட்டி வரும் அவர், இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதற்கிடையே ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்குப் பின் மீண்டும் மணிரத்னத்துடன் ‘தக் லைஃப்’ படத்தில் இணைந்திருக்கிறார். கமல்ஹாசன், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் சென்னையில் தொடங்குகிறது.
கமலின் ‘தெனாலி’ படத்திற்குப் பின் ஒரு நீண்ட வருட இடைவெளிக்குப் பின் கமலுடன் இணைந்திருக்கிறார் ரஹ்மான். ‘தக் லைஃப்’பில் கமலையும் ஒரு பாடல் பாட வைக்கவிருக்கிறார் என்கிறார்கள்.
மலையாளத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் `The Goat Life’ படத்துக்கு பிரித்விராஜ் பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசை.
இதற்கடுத்து தெலுங்கில் ‘உப்பென்னா’ இயக்குநர் புச்சிபாபு அடுத்து ராம் சரணை வைத்து இயக்கும் படத்திற்கும் இசை ரஹ்மான்தான் என்கின்றனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வரலாம். ராம் சரண் இப்போது ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ படப்பிடிப்பில் இருக்கிறார். இதனை முடித்துவிட்டே புச்சி பாபுவின் படத்தைத் தொடங்குகிறார். (Cinemavikatan)
