13 வயது சிறுவனின் உயிரிழப்பிற்கு ஜனாதிபதி காரணமா?

மாலைத்தீவில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவனை இந்திய ஹெலிகொப்டரில் அழைத்து செல்ல அனுமதி வழங்க அந்நாட்டு ஜனாதிபதி தாமதித்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காபு அட்டோலைச் சேர்ந்த 13 வயது சிறுவனுக்கு உடல் நிலை திடீரென மோசமடைந்ததுள்ளது, இதையடுத்து, இந்திய அரசு வழங்கிய ஹெலிகொப்டர் மூலம் அந்த சிறுவனை மாலேவில் உள்ள உயர் வைத்தியசாலைக்குச் கொண்டு செல்ல அனுமதி கோரப்பட்டது. இந்த விவகாரத்தில் மாலைத்தீவு அரசு மிகவும் தாமதம் காட்டியுள்ளது.

இதையடுத்து, சரியான நேரத்தில் வைத்திய சிகிச்சைக்கு கொண்டுசெல்லமுடியாததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அரசின் தாமதமே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என சிறுவனின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவில்லை என்ற விமர்சனத்திற்கு மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சர் எக்ஸ் தளத்தில் கூறிய பதிலில் “வைத்திய உதவிகளுக்கு 93 சதவீதம் மாலைத்தீவு விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவசர கால வைத்திய நடைமுறைகளுக்கு ஜனாதிபதியின் அனுமதி பெறவோ அல்லது அவருக்கு தகவல் தெரிவிக்கவோ தேவையில்லை என்பது விதி. மாறாக அந்தப் பணியானது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை சார்ந்தது என தெரிவித்துள்ளார்.

அவசர வைத்திய சிகிச்சை மற்றும் அனர்த்த காலங்களில் மீட்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு ஹெலிகொப்டர் மற்றும் ஒரு டோர்னியர் விமானத்தை மாலைத்தீவுக்கு இந்தியா வழங்கியுள்ளது.

எனினும், மாலைத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் வலுப்பெற்று வருகிறது. சீனா ஆதரவாளராக கருதப்படும் மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு அங்கிருக்கும் இந்திய அதிகாரிகளை மார்ச் 15ற்குள் வெளியேறுமாறு அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்திய ஹெலிகொப்டர்கள், விமானங்கள் பயன்பாட்டையும் ஜனாதிபதி தவிர்ப்பதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. (Hindutamil)

Latest articles

Similar articles