வட்ஸ்அப்பின் அடுத்த மேம்படுத்தல் வசதி இதோ!

வட்ஸ்அப்பில் ப்ளுடூத் (Bluetooth) வழியாக அருகில் இருக்கும் பயனர்களுக்கு 2ஜிபி (2GB) வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இது சார்ந்த சோதனை பீட்டா வெர்ஷனில் (Beta Version) இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்ஸ்அப் தகவல் பரிமாற்ற செயலியை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

குறுந்தகவல்கள், படங்கள், காணொளிகள், ஒலிப்பதிவுகளை பகிரும் வசதிகள், காணொளி அழைப்பு மற்றும் சாதாரண அழைப்புகளையும் ஏற்படுத்த இந்த செயலியை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தமது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய மேம்படுத்தல்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ப்ளுடூத் வழியாக பல்வேறு கோப்புகளை பகிரும் அம்சம் விரைவில் வட்ஸ்அப்பில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அருகில் உள்ள பயனர்களுக்கு 2ஜிபி வரையிலான கோப்புகளை பகிர முடியும். இதற்கென ‘Share Files’ என இருக்கும் பிரத்தியேக பிரிவை பயனர்கள் தெரிவு செய்ய வேண்டும். கோப்புகளை பகிர்ந்து முடிக்கும் வரையில் பயனர்கள் அதில் இருக்க வேண்டி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அம்சம் அறிமுகமான பிறகே பின்னரே பகிரும் வேகம் மற்றும் எடுக்கும் நேரம் போன்ற விபரங்கள் பயனர்களுக்கு அனுபவ ரீதியாக தெரிய வரும்.

வட்ஸ்அப்பில் இணையத்தை பயன்படுத்தி பயனர்களுக்கு இடையே 2ஜிபி வரையிலான கோப்புகளை பகிர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. (Hindutamil)

Latest articles

Similar articles