“முரண்பாடுகள், தெளிவுபடுத்தப்படாத இடைவெளிகள், விடுபடல்கள் மற்றும் தவறான தகவல்கள்” – நீதவான் செல்வநாயகம் லெனின்குமார்
குழந்தைகள், சிறுவர்கள் உள்ளிட்ட சுமார் 600 பேரின் மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்ட இலங்கையின் மிகப்பெரிய மனிதப்புதைகுழி தொடர்பாக, நாட்டின் முன்னணி தொல்லியல் நிபுணரால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை, அவர் ஏற்கனவே சமர்ப்பித்திருந்த அறிக்கைகளுடன் முரண்படுவதாக நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் தொல்லியலாளர் அனுஷா வன்னிநாயக்க ஆகியோரால் தயாரிக்கப்பட்ட “யாழ்ப்பாணம், செம்மணியில் மேற்கொள்ளப்பட்ட தடயவியல் தொல்லியல் அகழ்வாய்வு” (Forensic Archaeological Excavation in Chemmani Jaffna) என்ற அறிக்கை, 2026 ஒக்டோபர் 20ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பில் அந்த அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சட்டத்தரணி கஸ்தூரி அகலங்கன், இரண்டு நாட்களுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் எழுத்துமூல ஆட்சேபனைகளைச் சமர்ப்பித்திருந்தார்.
சோமதேவவின் அறிக்கையில் “முரண்பாடுகள், தெளிவுபடுத்தப்படாத இடைவெளிகள், விடுபடல்கள் மற்றும் தவறான தகவல்கள்” காணப்படுவதாக யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 19ஆம் திகதி நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகக் கலந்துரையாடலின்போது நீதவான் இந்த அவதானிப்பை வெளியிட்டுள்ளார். சோமதேவவின் அறிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு செம்மணி விசாரணைகள் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க முடியாது என்பதே நீதவானின் தீர்மானமாகும்.
காணாமலாக்கப்பட்ட தமது உறவினர்கள் செம்மணி சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் குடும்பங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஆணையாளர்கள் உள்ளிட்ட உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் இந்த நிர்வாகக் கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.
பேராசிரியரின் அண்மைய அறிக்கையில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக, பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளும் OMP அலுவலக ஆணையாளரும் நீதவானிடம் தமது கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
இதற்கு முன்னர் பேராசிரியர் சோமதேவ செம்மணி அகழ்வாய்வுகள் தொடர்பாக மூன்று இடைக்கால அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அந்த மூன்று அறிக்கைகளிலும் செம்மணியில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்ட இடம் ‘மனிதப்புதைகுழி’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், 190 பக்கங்களைக் கொண்ட புதிய அறிக்கையில் அந்தக் குறிப்பு நீக்கப்பட்டுள்ளமை சட்டத்தரணிகளால் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட விடயங்களில் ஒன்றாகும்.
“25 நாட்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளின் மூலம் சேகரிக்கப்பட்ட சான்றுகள், தோண்டி எடுக்கப்பட்ட புதைகுழி ஒரு மனிதப்புதைகுழி என்பதையே வலுவாக உணர்த்துகின்றன. அந்த வரையறையை உறுதிப்படுத்தும் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, சடலங்கள் புதைக்கப்பட்டுள்ள முறையாகும்” எனப் பேராசிரியர் சோமதேவவின் இரண்டாவது இடைக்கால அறிக்கையின் ஐந்தாவது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆரம்பகால அறிக்கைகளில், செம்மணி மனிதப்புதைகுழி ஒரு குற்றச்செயல் மற்றும் மனித உரிமை மீறல் இடம்பெற்ற இடமாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், அண்மைய அறிக்கையில் இந்த விடயம் தவிர்க்கப்பட்டுள்ளமை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
தொற்றுநோய் அல்லது இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்கள் அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனப் பேராசிரியரின் புதிய அறிக்கை முன்மொழிகிறது.
எனினும், இவ்வளவு அதிகமான மரணங்கள் நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு, பொலிஸ், மயான நிர்வாகம், உள்ளூராட்சி சபை அல்லது வைத்தியசாலை உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் குறிப்பிடப்படாத நிலையில், இத்தகைய மரணங்கள் இடம்பெற்றதாக எவ்வாறு உறுதிப்படுத்த முடியும் எனப் பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பேராசிரியரின் அறிக்கையில் முன்வைக்கப்பட்ட முடிவை நிராகரித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், பெரியம்மை நோய் (Smallpox) தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இறுதியாக 1919ஆம் ஆண்டிலேயே பதிவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தொல்லியலாளரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், புதைக்கப்பட்ட விதம் ‘மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய மனிதப்புதைகுழிகளின் பண்புகளை ஒத்திருக்கின்றது’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பேராசிரியர் சோமதேவ நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இரண்டாவது அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஒரு சடலத்தின் புகைப்படம், புதிய அறிக்கையில் வேறொரு கோணத்தில் காட்டப்பட்டுள்ளமை தவறான விளக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனச் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இரண்டாவது இடைக்கால அறிக்கையில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தின்படி, அகழ்வாய்வுக் குழுவினரால் 55 என இலக்கமிடப்பட்டு அடையாளப்படுத்தப்பட்ட, மேல்நோக்கிப் படுத்திருக்கும் எலும்புக்கூட்டின் முழங்கால்கள் மடிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. அந்தப் புகைப்படம் சடலத்தின் வலது பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
“அசாதாரணமான முறையில் கிடக்கும் எலும்புக்கூடு (இலக்கம் 55), அது தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என்பதை உணர்த்துகிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அதே சடலத்தின் புகைப்படம் புதிய அறிக்கையில் உயரமான கோணத்திலிருந்து எடுக்கப்பட்டு இடம்பெற்றுள்ளதால், முழங்கால்கள் அசாதாரணமான முறையில் மடிக்கப்பட்டு சடலம் கிடக்கும் தோற்றம் அதில் வெளிப்படவில்லை என்பது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளின் அவதானிப்பாகும்.
சோமதேவ மற்றும் வன்னிநாயக்க ஆகியோரால் தயாரிக்கப்பட்ட செம்மணி இடைக்கால அறிக்கையில் காணப்படும் மேலும் பல குறைபாடுகளையும் சட்டத்தரணி கே. எஸ். இரத்தினவேல் நீதவானின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார்.
அகழ்வாய்வின்போது மீட்கப்பட்ட பாடசாலைப் பை, ஒற்றைச் செருப்பு, நாணயங்கள் மற்றும் பொம்மை போன்ற அன்றாடப் பாவனைப் பொருட்களின் காலத்தைத் தீர்மானிக்கத் தவறியமை தொடர்பாகவும் தொல்லியலாளரின் அறிக்கை விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
“ஒரு செருப்பை மாத்திரம் அணிந்த நிலையில் காணப்படும் சடலம் எவ்வாறு முறையானதும் கௌரவமானதுமான முறையில் புதைக்கப்பட்டதாகக் கூற முடியும்?” எனச் சட்டத்தரணி இரத்தினவேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், குறித்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காமல் ஒதுக்கி வைக்கத் தீர்மானித்துள்ளார்.
தற்போது அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பகுதிக்கு அப்பாலும் மனித உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்பது நிலத்தடி ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால், மேலும் அகழ்வாய்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனக் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர் மிராக் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தக் கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள அடுத்த நிர்வாகக் கலந்துரையாடலில் தீர்மானம் எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் தெரிவித்துள்ளார்.
