பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு காணி ஒதுக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருந்தாலும், அவை இன்னமும் பயன்படுத்தப்படாத தேயிலைத் தொழிற்சாலைக் கட்டடங்களில் இயங்கி வருகின்றன. போதிய குடிநீர், சுகாதாரம் மற்றும் வகுப்பறை வசதிகள் இன்றி மாணவர்கள் கல்வி கற்கும் நிலை தொடர்கிறது.
இலங்கையின் பெருந்தோட்டச் சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்கள் எதிர்கொள்ளும் கல்வி ஏற்றத்தாழ்வுகளை, பாதுகாப்பற்ற வகுப்பறைகள், ஆபத்தான பயணங்கள் மற்றும் தீர்க்கப்படாத காணிப் பிரச்சினைகள் வெளிப்படுத்துகின்றன.
“nitrogen, oxygen, fluorine, neon …” என, இரண்டு நிமிடங்களுக்குள் தனிமங்களின் ஆவர்த்தன அட்டவணையை (Periodic Table) ஒப்புவித்தார் கன்ஷிகா. அவர் நான்காம் தரத்தில் கல்வி கற்கும் சிறுமி.
அவரது திறமை ஆச்சரியமளித்தது. ஆனால் அந்த நிகழ்வில் மகிழ்ச்சியை விட ஒரு கேள்வியே மேலோங்கியது. இத்தகைய திறமையைக் கொண்ட சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? அவரது திறமையை வளர்க்க வேண்டிய பாடசாலையால் அடிப்படை கல்வி வசதிகளைக்கூட வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
நாங்கள் அப்போது இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில், கடல் மட்டத்திலிருந்து 5,000 அடிக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள மதுரட்ட, ரிலாமுல்லை அருணோதயா இந்து ஆரம்பப் பாடசாலையில் இருந்தோம்.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் அரசாங்கத்தின் புதிய கல்விச் சீர்திருத்தங்களை எதிர்கொள்ளத் தயாராகும் நிலையில், இங்குள்ள மாணவர்கள் பாதுகாப்பான வகுப்பறை, சுத்தமான குடிநீர், போதிய சுகாதார வசதிகள் மற்றும் சமமான கல்வி வாய்ப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்காகப் போராடுகின்றனர்.
“ஒவ்வொரு பெருந்தோட்டப் பாடசாலைக்கும் இரண்டு ஏக்கர் காணி வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்தது. ஆனால் எமக்கு இதுவரை எதுவும் கிடைக்கவில்லை. நம்பகமான குடிநீர் வசதியும் இல்லை. வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே நீரூற்றுகளில் இருந்து நீர் கிடைக்கின்றது.
நல்லாட்சிக் காலத்தில் அப்போதைய பிரதி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனிடம் பாடசாலையின் பிரச்சினைகளை முன்வைத்தோம். மதுரட்ட பெருந்தோட்ட நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” என்கிறார் பாடசாலை அதிபர் வி. விஜேந்திரன்.
இந்தப் பாடசாலையில் ஆறாம் தரம் முதல் எட்டாம் தரம் வரையிலான மாணவர்களும் ஆரம்பப் பாடசாலைக் கட்டடங்களிலேயே கல்வி கற்கின்றனர். வகுப்பறைகள் முழுவதும் தூசு நிறைந்துள்ளன. விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் வீதியிலேயே விளையாடுகின்றனர் என அதிபர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இரண்டு மாணவர்கள் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.
மலசலகூடங்களை அமைப்பதற்காக UNICEF நிறுவனத்திடமிருந்து 150,000 ரூபாய் (452.50 அமெரிக்க டொலர்) நிதியுதவியும் கிடைத்துள்ளது. அதுவே இதுவரை கிடைத்த உதவி என அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான பயணம்
அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களுக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் யதார்த்தத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி இருப்பதாக, பாடசாலையின் பிரதி அதிபர் ஜே. நவரத்தினம் குறிப்பிடுகின்றார்.
கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் டிஜிட்டல் கற்பித்தலுக்குத் தேவையான டிஜிடல் பலகைகள் (digital boards) உள்ளிட்ட உபகரணங்கள் தங்களிடம் இல்லை என அவர் தெரிவிக்கின்றார்.
கல்வி என்பது சிறுவர்களுக்கு சிறகுகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இலவசக் கல்வி, சிறுவர்கள் தாங்கள் பிறந்த சூழலைக் கடந்து முன்னேறுவதற்கான வாய்ப்புகளை வழங்கக்கூடியது. ஆனால் மலையகத் தமிழ் சமூகத்தின் கல்விப் பின்தங்கிய நிலை என்பது வறுமை அல்லது வளப்பற்றாக்குறை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. இது அதிகார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நீண்டகாலமாக வேரூன்றிய சமூகப் படிநிலைகளுடனும் தொடர்புபட்டுள்ளது.
இலங்கையில் பாடசாலைகள் பொதுவாக தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஆனால் பெருந்தோட்டப் பாடசாலைகள் தனித்துவமான வகையாகக் காணப்படுகின்றன. இவை பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் அமைந்துள்ளதுடன், சிக்கலான நிர்வாகக் கட்டமைப்புகளின் கீழ் இயங்குகின்றன. இதன் காரணமாக பொதுக் கல்வி முறைமையில் இவை ஓரங்கட்டப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்படாத இரண்டு ஏக்கர் காணி உறுதிமொழி

2018ஆம் ஆண்டு அப்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் 843 பெருந்தோட்டப் பாடசாலைகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. ஒவ்வொரு பெருந்தோட்டப் பாடசாலைக்கும் இரண்டு ஏக்கர் காணி வழங்குவதற்கான கொள்கை இணக்கப்பாடு அந்த ஆவணத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அரசுக்குச் சொந்தமான பெருந்தோட்டங்கள் தனியார் நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்ததால், பாடசாலைகளின் அபிவிருத்திக்குத் தேவையான காணிகளை அந்த நிறுவனங்களிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து, அப்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பொது நிறுவனங்கள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கிரியெல்ல, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக இருந்த நவீன் திஸாநாயக்க ஆகியோர் இணைந்து முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதன்படி, ஏழு மாவட்டங்களில் குறைந்தளவு காணியில் இயங்கிய 354 பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் வரையான காணியைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இந்தக் கொள்கை உறுதிமொழிகள் ரிலமுல்ல அருணோதயா பாடசாலையின் நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
பாடசாலையின் வகுப்பறைகள் இன்னமும் பழைய தேயிலைத் தொழிற்சாலைக் கட்டடங்களிலேயே இயங்குகின்றன.
பாடசாலையின் பிரதான மண்டபத்தின் நிலைமை மிகவும் ஆபத்தானதாக உள்ளது. போதிய வெளிச்சம் இல்லாத வகுப்பறைகளுக்கு மேலே, பழைய தேயிலைத் தொழிற்சாலையின் களஞ்சிய அறையைப் போன்ற கட்டடத்தின் மேல் தளத்தை ஆசிரியர்கள் கூட்டங்களுக்கும் பிரதான மண்டபமாகவும் பயன்படுத்துகின்றனர். அந்த மரத்தரையில் தூசி படிந்துள்ளது. பல இடங்களில் பெரிய துளைகள் காணப்படுவதால், மேலிருந்து கீழே உள்ள வகுப்பறைகளில் இருக்கும் மாணவர்களைக் காண முடிகின்றது.
அதே ஆபத்தான இடமே கரப்பந்தாட்டப் பயிற்சிக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
தரையில் சிதறிக் கிடக்கும் புறாக்களின் எச்சங்களால் கடுமையான துர்நாற்றம் வீசுகின்றது. பாடசாலையைப் பார்வையிடச் சென்ற குழுவினரில் சிலருக்கே அந்தத் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் வாந்தி வரும் நிலை ஏற்பட்டது. ஜன்னல்களும் கதவுகளும் முறையாகப் பாதுகாப்பு வழங்குவதில்லை. பல வருடங்களாகப் பெய்த மழை மற்றும் வீசிய பலத்த காற்றினால் அவை சேதமடைந்துள்ளன. சிறிய மழை பெய்தால்கூட வகுப்பறைகளுக்குள் நீர் கசிகின்றது. மலையகத்தில் பெய்யும் கனமழைக் காலங்களில் நிலைமை மேலும் மோசமடைகின்றது.
பாடசாலையின் பிரதான மண்டபமாகவும் கூட்டங்கள் நடைபெறும் இடமாகவும் பயன்படுத்தப்படும் இந்த மேல் தளம், மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இடமாக உள்ளது.
நிறைவேற்றப்படாத அபிவிருத்தித் திட்டம்

70 வயதான பி. கிருஷ்ணசாமிக்கு இந்த ஆபத்து தனிப்பட்ட அனுபவமாக உள்ளது. அவரது பேரப்பிள்ளையும் இந்தப் பாடசாலையிலேயே கல்வி கற்கின்றார்.
“எனது பேரப்பிள்ளையும் இந்தப் பாடசாலையில்தான் படிக்கின்றார். மாணவர்கள் ஒன்றுகூடுவதற்குக்கூட முறையான இடமில்லை. அரசாங்கம் பல விடயங்களைச் செய்வதாகக் கூறுகின்றது. ஆனால் எதுவும் நடைபெறுவதில்லை. இவர்களுக்காக யாராவது முறையான கட்டடம் ஒன்றை அமைத்துக் கொடுத்தால் அது மிகப் பெரிய உதவியாக இருக்கும்.”
45 வயதான நவனந்தன் லோகநாதன், இந்தப் பாடசாலை அவசரகால தங்குமிடமாகவும் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடுகின்றார்.
“பாடசாலையை அண்மித்து உள்ள வீடுகளில் மண்சரிவு ஏற்பட்டால் அனைவரும் இந்தப் பாடசாலைக்குத்தான் வருகின்றனர். அப்போது வகுப்புகள் நிறுத்தப்படுகின்றன. மாணவர்களால் கல்வியைத் தொடர முடியாது. யன்னல்கள் உடைந்துள்ளன. சிறிது மழை பெய்தால்கூட வகுப்பறைகளுக்குள் நீர் வருகின்றது. பாடசாலைக்குச் செல்வதற்கு பேருந்து வசதிகூட இல்லை. பணம் இருப்பவர்கள் சுமார் 20 ரூபாய் கொடுத்து யாராவது ஒருவரின் உதவியுடன் ஒரு பகுதி தூரம் பயணிக்கின்றனர்.”
பாடசாலை நுழைவாயிலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் படங்களுடன் கூடிய அறிவிப்புப் பலகை ஒன்று காணப்படுகின்றது.
பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் பாடசாலைக் கட்டடத்தைப் புனரமைக்கும் திட்டம் ஒன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்திற்காக 12,709 அமெரிக்க டொலர்கள் (42 இலட்சம் ரூபாய்) ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்த நிதிக்கு ஏற்ப மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளைப் பாடசாலையில் அடையாளம் காண்பது கடினமாக உள்ளது.
மேலும், அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதிகளிலும் முரண்பாடு காணப்படுகின்றது. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி 2021 ஓகஸ்ட் 1 எனக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், நிறைவுத் திகதி 2021 ஜனவரி 26 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே நிறைவடைந்ததாகக் காட்டப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனமாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் (PHDT) குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்வி என்பது குடிசையில் சாத்தியமில்லை

இந்தப் பாடசாலை மலையகத் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் நீண்டகாலப் பின்தங்கிய நிலைக்கான ஓர் உதாரணமாகும் என, iPEN அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜீவரத்தினம் சுரேஷ் தெரிவிக்கின்றார்.
“எங்களுடைய வாழ்க்கை ஆரம்பித்த இடத்திலேயே இன்னமும் இருக்கின்றது. இந்தப் பாடசாலை அதற்குச் சிறந்த உதாரணம். ஐந்து தலைமுறைகளாகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தேயிலைத் தோட்டங்களுடனும் தொழிற்சாலைகளுடனும் வாழ்ந்து வருகின்றனர். இப்போது அவர்களின் பிள்ளைகளும் அதே நிலைமைக்குத் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஒரு கொட்டகையில் கல்வியை வழங்க முடியாது. இந்தப் பிள்ளைகளுக்கு சமமான உரிமை வழங்கப்படுகின்றதா?”
மலையகத்தில் ரிலாமுல்லை போன்ற பல பாடசாலைகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
“டிஜிட்டல் மயமாக்கல் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. பிரதமரும் அண்மையில் முறைமை மாற்றம் பற்றிப் பேசினார். ஆனால் அடிப்படை வசதிகள்கூட இல்லாத பல பாடசாலைகள் இன்னமும் உள்ளன. முழுக் கல்வி முறைமையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு சிறுவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. பாடசாலைக் கட்டமைப்பு அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமானதாக இருக்க வேண்டும்.”
ரிலாமுல்லை பாடசாலை மாணவர்கள் குறைந்தது ஐந்து கிலோமீற்றர் தூரம் நடந்து பாடசாலைக்குச் செல்கின்றனர்.
கல்விச் சீர்திருத்தம் என்பது டிஜிட்டல் மயமாக்கலை முன்னெடுப்பதுடன் மட்டும் நின்றுவிட முடியுமா? இவ்வாறான மாணவர்களுக்கு பேருந்து சேவையையோ போக்குவரத்துக் கொடுப்பனவையோ வழங்குவதற்குக்கூட அதிகாரிகளால் முடியவில்லை என அவர் கேள்வி எழுப்புகின்றார்.
100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூடுவது குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்தையும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
“இவ்வாறான தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை மூடப்பட்டால், மாணவர்கள் மேலும் கீழ்ப்பகுதியில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்ல முடியுமா? ஒவ்வொரு சமூகத்தினதும் தேவைகளையும் வளங்களையும் அடையாளம் காண்பதன் மூலமே அபிவிருத்தி ஆரம்பிக்கப்பட வேண்டும். றோயல் கல்லூரியில் கல்வி கற்கும் ஒரு மாணவருக்கும் ரிலாமுல்லையில் கல்வி கற்கும் ஒரு மாணவருக்கும் ஒரே மாதிரியான கல்விச் சூழல் கிடைப்பதில்லை. இலங்கை என்பது கொழும்பு மட்டுமல்ல. மலையகம் என்பது நுவரெலியா நகரம் மட்டுமல்ல. ரிலமுல்ல போன்ற பல இடங்கள் நாடு முழுவதும் உள்ளன.”
மலையகத் தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்காகப் பல வருடங்களாகப் போராடிவரும் சுரேஷ், பதிவு செய்யப்பட்ட அஞ்சல் முகவரிகளைப் பெற்றுக்கொள்வதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார். தற்போது சமமான கல்வி உரிமையையும் மற்றொரு போராட்டமாகக் கருதுகின்றார்.
மாணவர்களைப் பின்தள்ளும் கல்வி முறைமை

இந்தப் பிரச்சினைகள் ரிலாமுல்லை பாடசாலையுடன் மட்டும் முடிவடைவதில்லை.
பதுளை மாவட்டத்தின் மீதும்பிட்டிய பகுதியில் உள்ள சிறுவர்கள் நகரத்தை அடைவதற்கு ஆறு கிலோமீற்றர் தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அந்தப் பாதைகள் முறையாக அமைக்கப்பட்ட வீதிகள் அல்ல. குளவிகள் காணப்படுவதுடன், பயணமும் ஆபத்தானதாக உள்ளது. முச்சக்கரவண்டிகளில் பயணிப்பதற்கான வசதி பல குடும்பங்களிடம் இல்லை என சுரேஷ் தெரிவிக்கின்றார்.
“பெருந்தோட்டப் பாடசாலைகள் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் முறைமையை அதிகாரிகளால் மாற்ற முடியாவிட்டால், குறைந்தபட்சம் அர்த்தமுள்ள மாற்றம் ஏற்படும் வரை மலையகச் சிறுவர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்க வேண்டும். 203 வருடங்கள் கடந்துவிட்டன. பெருந்தோட்ட நிறுவனங்கள் இன்னமும் அனைத்திலும் தலையீடு செலுத்துகின்றன. இதனை மாற்றக்கூடிய தெளிவான கொள்கைத் தீர்மானம் ஒன்றைக்கூட நாம் இதுவரை காணவில்லை. ஒவ்வொரு பெருந்தோட்டப் பாடசாலைக்கும் இரண்டு ஏக்கர் காணி வழங்குவதற்கு அரசாங்கங்கள் பலமுறை முயற்சித்துள்ளன. ஆனால் இந்தப் பாடசாலைகள் இன்னமும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படவில்லை. பாடசாலைகள் தோட்டக் குடியிருப்புகளிலிருந்து சற்று தள்ளி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் லயன் குடியிருப்புகளும் பாடசாலைகளும் இன்னமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. அவை இன்னமும் பெருந்தோட்டப் பாடசாலைகள் என்றே அழைக்கப்படுகின்றன. பாடசாலை என்பது பாடசாலைதான். பெருந்தோட்டப் பாடசாலை என்ற தனியான வகைப்பாடு இருக்கக்கூடாது.”
நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மலையகத் தமிழ் மாணவர்கள் இன்னமும் பெருந்தோட்ட நிறுவனங்களாலும் அவற்றின் முகாமையாளர்களாலும் வடிவமைக்கப்பட்ட கல்வி முறைமையின் கீழ் கல்வி கற்கின்றனர்.
நடைமுறையில், இந்தப் பாடசாலைகள் கல்வி அமைச்சின் நேரடி அணுகலுக்கு அப்பால் ஓரங்கட்டப்பட்டுள்ளன. அரசாங்கக் கொள்கைகளும் சுற்றறிக்கைகளும் தரைமட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தத் தவறுகின்றன. இதன் விளைவாக, சிறுவர்கள் இரட்டை ஒடுக்குமுறையை எதிர்கொள்கின்றனர். இலவசக் கல்வியின் முழுமையான பயன்களைப் பெற முடியாததுடன், கல்வி வழங்க வேண்டிய சுதந்திரம், கண்ணியம் மற்றும் வாய்ப்புகளையும் இழக்கின்றனர்.
திறமை மட்டும் போதாது
கன்ஷிகாவால் ஆவர்த்தன அட்டவணையை ஒப்புவிக்க முடிகின்றது. பல தடைகளுக்கு மத்தியிலும் ஒரு சிறுவர் எத்தகைய திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு அவரது திறமை ஓர் உதாரணமாகும். ஆனால் பாதுகாப்பற்ற வகுப்பறைகள், நம்பகமான போக்குவரத்து வசதியின்மை, போதிய சுகாதார வசதிகள் இல்லாமை மற்றும் பல வருடங்களாக நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள் ஆகியவற்றை ஒரு சிறுவரின் திறமை மட்டும் ஈடுசெய்ய முடியாது.
கல்விச் சீர்திருத்தங்கள் சிறுவர்களுக்குச் சிறகுகளை வழங்குவதாக இலங்கை உறுதியளிக்கின்றது.
ஆனால் ரிலமுல்லவில் உள்ள சிறுவர்களுக்கு முதலில் பாதுகாப்பாகக் கல்வி கற்பதற்கான ஒரு பாடசாலையும், சமமான வாய்ப்பும் தேவைப்படுகின்றன. சட்டம் அனைவருக்கும் சமமானது என்றால், இத்தகைய விலக்கல் முறைமை எவ்வாறு தொடர்ந்து நீடிக்க முடியும்?
குறிப்பு – இக்கட்டுரை முதலில் Center for Investigative Reporting (CIR) நிறுவனத்தினால் ஒக்டோபர் 13ஆம் திகதி வெளியிடப்பட்டது. Asian Dispatch CIR-இன் அனுமதியுடன் மறுபிரசுரம் செய்துள்ளது. அதன் தமிழ் வடிவமே இது.
எழுத்து: Bingun Menaka Gamage | ஆசிரியர்: Gagani Weerakoon
