ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கையிலிருந்து அனுப்பிவைக்கப்படவுள்ள மிகப்பெரிய இராணுவ பொலிஸ் படைப்பிரிவின் தகுதி குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தளத்தில் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், இலங்கை இராணுவம் மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் சபையும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஹெய்ட்டியின் தரைவழி ஒடுக்குமுறைப் படையில் (GSF) இணைவதற்காக இலங்கையிலிருந்து 1,132 படையினர் அனுப்பப்படவுள்ளனர். இதில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ வரலாற்றில் முதல் முறையாக நிலக்கண்ணிவெடிகள் மற்றும் மரணிப்புப் பொறிகளை செயலிழக்கச் செய்வதற்கான விசேட பயிற்சி பெற்ற 43 பெண் இராணு வீரர்கள் அடங்குகினறனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் இலங்கையிலிருந்து அனுப்பப்பட்ட சில படையினருக்கு எதிராக சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான தீர்க்கப்படாத குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், வெளிப்படையான முழுமையான விசாரணைகள் இன்றி, அதே இராணுவ வீரர்கள்களை ஹெய்ட்டியில் பணிக்கு அமர்த்துவது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty International) கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.
“இந்த அண்மைய பணியமர்த்தலுக்கான தகுதிச் சோதனை செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்பட்டது, எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் எவை? மேலும் பணியமர்த்தப்படும் இலங்கைப் படையணியினர் மற்றும் ஏனைய அனைத்து படையணிகள் தொடர்பாக புதிதாக எழக்கூடிய குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தொடர்பில் இலங்கை அதிகாரிகள், GSF தலைமையகம், இணை நாடுகளின் நிலையான குழு மற்றும் ஐக்கிய நாடுகள் சபை, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும்” என ஐக்கிய நாடுகள் சபையின் நியூயோர்க்கில் உள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி ரென்சோ பொமி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவின் இணைத் தலைமையில் செயற்படும் கூட்டு நாடுகளின் நிலையான குழுவில் (Standing Group of Partners) பஹாமாஸ், எல் சல்வடோர, குவாத்தமலா, ஜமைக்கா மற்றும் கென்யா ஆகிய நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன.
இலங்கை இராணுவமே தனது படையினரை முன்தகுதிச் சோதனைக்கு உட்படுத்துவதும், அமெரிக்கத் தூதரகத்தின் பரிசோதனைகள் மாத்திரம் மேற்கொள்ளப்படுவது என்பது போதுமானதல்ல என்று தெரிவித்த சர்வதேச அமைப்புகளின் கூட்டமைப்பு, கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையை சந்தித்த பின்னர், இலங்கைப் படையினருக்கு எதிராக கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளுக்கான பொறுப்புக்கூறல் தொடர்பில் “எந்தத் தெளிவும் இல்லை” என்று தெரிவித்தது.
“இது வெளிப்படைத்தன்மை, மனித உரிமைகள் சார்ந்த சுயாதீனக் கண்காணிப்பு மற்றும் தெளிவான நிறுவனப் பொறுப்புக்கூறல் இல்லாமை போன்ற கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. அனைவருக்கும் அதிகாரம் இருக்கும்போது எவரும் பொறுப்பேற்காததால், பொறுப்புக்கூறல் என்பது இல்லாமல் போகிறது,” என்று ஐ.நா சந்திப்பின் பின்னர் ‘உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம்’ (ITJP) தனது எக்ஸ் (X) சமூக ஊடகத் தளம் வழியே அதிருப்தியை வெளியிட்டிருந்தது.
“நாட்டின் பாதுகாப்பிற்காகவும், மக்களின் சுதந்திரத்திற்காகவும், அரசாங்கத்தின் பாதுகாப்பிற்காகவும், எவரேனும் பணிகளை ஆற்றியிருந்தால், அந்தப் பணிகளுக்குத் தோள் கொடுத்த அனைவரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆனால், அதேபோன்று இராணுவத்தின் நற்பெயரையும், இராணுவத்தின் பொறுப்புகளையும் புறக்கணித்து, சில சிறிய குழுக்களின் அதிகாரத் தேவைகளுக்காக இராணுவத்திற்குப் பொருத்தமற்ற, எதிர்பார்க்காத காரியங்களைச் செய்திருந்தால், இராணுவத்தின் நற்பெயர், பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பெருமைக்காக அவர்களுக்கு எதிராகச் செயற்பட நாம் தயாராக இருக்கிறோம்,” என ஹைட்டி செல்லத் தயாராகும் படைப்பிரிவினருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வின் போது, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
2004 – 2007 காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளுக்காக ஹைட்டியில் பணியமர்த்தப்பட்டிருந்த 134 இலங்கை இராணுவத்தினர், சிறுவர்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்நாட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அசோசியேட் செய்திச் சேவை 2017 ஆம் ஆண்டில் வெளிப்படுத்தியிருந்தது. அவர்களில் 114 பேர் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்ட போதிலும், எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
2005ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2006 ஆம் ஆண்டு ஜூன் வரை ஹைட்டியில் அமைதி காக்கும் பணிகளுக்காக அனுப்பப்பட்டிருந்த மூன்றாவது படைப்பிரிவின் கெமுனு ஹேவா படையணியின் உப தளபதியாக தற்போதைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
