கிழக்கின் காணிகளுக்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவை மீளப் பெறுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

இலங்கையின் ஏனைய மாகாணங்களில் இல்லாத வகையில், கிழக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் செயற்படுவதற்கு, விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ள குடிமைச் சமூக அமைப்பொன்று, அந்த நடவடிக்கையை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

“கிழக்கு மாகாண காணிகளை பாதுகாத்தல்” என்ற பெயரில், தென் மாகாணத்தின் முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பள்ளியகுருகேவின் தலைமையில் அது சார்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிப்பதற்கான முன்மொழிவுக்கு 2026 ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

கிழக்கு மாகாணத்தின் காணிப் பிரச்சினைகளில் தலையிடுவதற்காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையிலான விசேட பிரிவொன்றை உடனடியாக நிறுவுவதற்கும், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனைத்து சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் காணிகளை நிரப்புதல் என்பவற்றை தடுப்பதற்காக பாதுகாப்புப் பிரிவினருக்கு முழு அதிகாரங்களை வழங்குவதற்கும் இதன் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

சட்டவிரோதமான முறையில் காணிகளை ஆக்கிரமித்தல், அனுமதியற்ற காணி அபகரிப்புகள் மற்றும் கடற்கரையோரமாக இடம்பெறும் அனுமதியற்ற கட்டுமானங்கள் ஆகியன அந்த மாகாணத்தை பாதிக்கும் பிரதான பிரச்சினைகள் என ஜனாதிபதியினால் அமைச்சரவைக்கு எடுத்துரைக்கப்பட்டிருந்தது. மேலும் குறித்த தீர்மானத்திற்கு அடிப்படையாகக் கூறப்பட்ட நடவடிக்கைகள் பாரிய பிரச்சினைகள் என்பதைத் தங்களின் அமைப்பும் நிராகரிக்கவில்லை எனவும் ஆனால் அவை கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் தனித்துவமான பிரச்சினைகள் அல்ல எனவும் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள கிழக்கை தளமாகக் கொண்ட ‘நீதிக்கான மய்யம்’ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் ஏனைய அனைத்து மாகாணங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் நிலவி வரும் நிலையில், கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இவ்வாறானதொரு விசேட குழுவை நியமிப்பது பாகுபாடு காட்டும் செயலாகும் என நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷாபி எச். இஸ்மாயிலின் கையெழுத்துடன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவை இலங்கையின் ஒவ்வொரு மாகாணத்திலும் பதிவாகியுள்ள பிரச்சினை என்பதுடன் இது நாடு முழுவதும் நிலவும் ஒரு நிகழ்வாகும். தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இவ்வாறான பிரச்சினைகள் பதிவாகியுள்ளன. ஆனால் அந்த மாகாணங்களுக்கு எந்தவொரு விசேட குழுவும் நியமிக்கப்படவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரம் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாகுபாடான செயல் மிகுந்த கவலைக்குரிய விடயமாகும். கிழக்கு மாகாணம் என்பது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் இணக்கமாக வாழும் ஒரு பிரதேசம் என்பதை ஜனாதிபதிக்கு நினைவூட்டும் அந்த அமைப்பு, குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களைப் பாதிக்கும் வகையில்,போருக்கு பின்னர் காணிகளை இழந்த வரலாற்றையும் அவர்கள் சுமந்து நிற்கிறார்கள் என்பதை வலியுறுத்தியுள்ளது.

நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இவ்வாறானதொரு நிறுவனம் நிறுவப்படாத நிலையில், இந்த மாகாணத்திற்கு மாத்திரம் விசேடமாக நடைமுறைப்படுத்தப்படும் ஒரு பொறிமுறையை நிறுவுவது அந்த சமூகங்களுக்கு தவறான ஒரு கருத்தை ஏற்படுத்தும் என ஜனாதிபதிக்கு நினைவூட்டும் அந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷாபி எச். இஸ்மாயில், அரசியலமைப்பின் 12(1) ஆம் பிரிவின் மூலம் அனைத்து நபர்களுக்கும் சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மைச் சமூகங்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் பொருந்தும் வகையில், ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பொறிமுறையொன்றைச் செயற்படுத்துவது இந்த அடிப்படை உரிமைகளுக்கு முரணானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்குச் சுட்டிக்காட்டும் நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர், காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகப் பயன்படுத்தக்கூடிய பொறிமுறைகள் ஏற்கனவே போதுமான அளவில் நடைமுறையில் உள்ளன என்பதையும் நினைவூட்டியுள்ளார்.

“12(2) ஆம் பிரிவானது இனம், மதம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடை செய்கிறது. சிறுபான்மைச் சமூகங்கள் செறிந்து வாழும் ஒரு பிரதேசத்திற்கு மாத்திரம் பொருந்தும் வகையில், ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட பொறிமுறையொன்றைச் செயற்படுத்துவது இந்த அடிப்படை உரிமைகளுக்கு முரணானது. ஒன்பது மாகாணங்களிலும் சட்டத்தை சமமாகவும் பாரபட்சமின்றியும் நடைமுறைப்படுத்துவதே அரசியலமைப்பிற்கு இணங்க சரியான அணுகுமுறையாகும். அடையாளம் காணப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அனைத்து விதிகளும் சட்டத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என்பது மிக முக்கியமான விடயமாகும். 1979 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க அரசாங்கக் காணிகள் (உடைமைகளை மீளப் பெறுதல்) சட்டமானது, முறையான சட்டரீதியான செயல்முறையின் மூலம் சட்டவிரோதமாக அபகரிக்கப்பட்டுள்ள அரசாங்கக் காணிகளை மீளப் பெறுவதற்கு, உரிய அதிகாரிகளுக்கு தெளிவான மற்றும் பரந்த அதிகாரங்களை வழங்குகிறது,” என சட்டத்தரணி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அரச நில கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 454) மற்றும் நில அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் ஆகியன, காணி ஆணையாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக செயல்படும் ஜனாதிபதிக்கு, வழங்கப்பட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்படாத நில மானியங்களை இரத்து செய்து, அந்த காணிகளை மீளக் கையகப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகின்றன என்பதை நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டுகிறது. அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமான நிலங்களையும், எந்தவொரு சிறப்பாக நியமிக்கப்பட்ட நிறுவனமும் இன்றி, மேற்குறிப்பிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் சட்டபூர்வமாக மீளக் கையகப்படுத்த முடியும் என அமைப்பு வலியுறுத்துகிறது.

கிழக்கு கடற்கரையின் உயர்ந்த சுற்றுலா வளர்ச்சி வாய்ப்புகளை பயன்படுத்தி, கிழக்குக் கடற்கரை சார்ந்த ஹோட்டல்களை நடத்திச் செல்லும்போது அரச அதிகாரிகளால் பாரபட்சமின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்கும் ஜூன் 22 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.

கடலோரச் சூழல் அமைப்பையும் பாதுகாக்கும் வகையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு முறையான திட்டத்தைத் தயாரிக்கவும், கிழக்கு கடற்கரை சார்ந்த ஹோட்டல்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டில் அரச அதிகாரிகள் பாரபட்சமின்றியும் வெளிப்படைத்தன்மையுடனும் சட்டத்தை அமுல்படுத்துவதை உறுதிப்படுத்தும் ஒரு செயன்முறையை உருவாக்கவும், ஜூன் 22 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. அமைச்சரவைத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சினையையும் மாகாணத்திற்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட விசேட குழுவொன்றினால் மாத்திரமன்றி, தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் தீர்க்க முடியும் என நீதிக்கான மய்யம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் தற்போது தேவைப்படுவது புதியதொரு பொறிமுறை அல்ல, மாறாக ஏற்கனவே உள்ள சட்டத்தை அனைத்து மாகாணங்களுக்கும் ஒரே மாதிரியாக, பாரபட்சமின்றியும் நிலையானதாகவும் செயற்படுத்துவதற்கான அரசியல் உறுதியே என, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

கடற்கரைப் பிராந்தியத்திற்குள் இடம்பெறும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதற்கும், அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் கடற்கரை பாதுகாப்புப் பணிப்பாளருக்கு ஏற்கனவே முழு அதிகாரம் உள்ளது என்பது நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் ஷாபி எச். இஸ்மாயிலின் கையெழுத்துடன் அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“கடற்கரை பாதுகாப்பு மற்றும் கடற்கரை வளங்கள் முகாமைத்துவ சட்டமானது கடற்கரைப் பிராந்தியத்திற்குள் இடம்பெறும் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்துவதுடன், அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு எதிராக அமுலாக்க நடவடிக்கை எடுப்பதற்கான முழு அதிகாரத்தையும் கடற்கரை பாதுகாப்புப் பணிப்பாளருக்கு வழங்குகிறது. 1950 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க காணிக் கொள்வனவுச் சட்டமானது, ஒவ்வொரு கட்டத்திலும் நீதித்துறை மீளாய்விற்கான அணுகலுடன், பொது நோக்கங்களுக்காக காணிகளைக் கொள்வனவு செய்வதற்கான நியாயமான மற்றும் அரசியலமைப்பிற்கு இணங்கக்கூடிய நடைமுறையொன்றை வழங்குகிறது. பிரதேச செயலாளர்கள், காணி ஆணையாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் ஏற்கனவே நிறுவப்பட்டு, செயற்படுவதற்கான முழு அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.”

அதற்கமைய, அனைவரையும் உள்ளடக்கிய, வெளிப்படைத்தன்மை கொண்ட பொது மக்கள் விசாரணை நடத்தப்படும் வரை, 2026 ஜூன் 22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தை இரத்துச் செய்யுமாறு அல்லது நிறுத்தி வைக்குமாறு நீதிக்கான மய்யம் ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

“அரசியலமைப்பின் 12 ஆவது பிரிவிற்கு இணங்க, நிலங்களின் முறையற்ற பயன்பாடு தொடர்பாகச் செயற்படுத்தப்படும் எந்தவொரு அமுலாக்க நடவடிக்கையையும் அனைத்து மாகாணங்களுக்கும் சமமாகப் பயன்படுத்துமாறும், போதுமான, தேசிய மட்டத்திலான நோக்கைக் கொண்ட மற்றும் நீதித்துறை மேற்பார்வைக்கு உட்பட்ட தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பையே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் கருவியாக மாற்றுமாறும் நாங்கள் மேலும் கேட்டுக்கொள்கிறோம்.”

உள்நாட்டு யுத்த மோதல்கள் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்த போதிலும், இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாக மீள்குடியேற்றுவதற்கான முறையான வேலைத்திட்டமொன்று செயற்படுத்தப்படாமை மற்றும் நிர்வாகக் கட்டமைப்புகளை அமைக்கும் போது பொதுவான அளவுகோல்களிலிருந்து விலகிச் சென்றமை ஆகியவற்றின் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தேசிய பாதுகாப்பிற்கும் நேரடித் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன என “கிழக்கு மாகாண காணிகளை பாதுகாத்தல்” என்ற பெயரில் விசேட குழுவொன்றை நியமிப்பது தொடர்பாக ஜூன் 22 ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மான அறிவித்தலில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Latest articles

Similar articles