முன்னாள் அட்டமஸ்தானாதிபதிக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனங்களுக்கு ‘மகளிர் கழகம்’ அழுத்தம்

குற்றவியல் குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கிற்கு அமைவாக, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் குழுவொன்று, அரசியலமைப்பிற்கு அமை அதிகாரமளிக்கப்பட்ட சுயாதீன நிறுவனங்களை அழைத்து விசாரணை தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவது ஒரு அழுத்தமாக கருதப்படலாம் என சட்ட மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் குற்றவியல் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் குழுவொன்று சட்ட நிறுவனங்களில் தலையிடுவதானது, சட்டத்தை இயற்றும் நாடாளுமன்றத்திற்கும் அதனை நடைமுறைப்படுத்தும் நீதிமன்றத்திற்கும் இடையில் காணப்பட வேண்டிய அத்தியாவசிய அதிகாரப் பிரிவினையை சீர்குலைப்பதாக அமையும் என்பதே அந்த நிபுணர்களின் கருத்தாகும்.

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உற்படுத்திய குற்றச்சாட்டில், தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி மீதான விசாரணைகள் மற்றும் வழக்கு விசாரணைகள் குறித்து, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் சட்டமா அதிபர் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சிறுவர் நன்னடத்தை திணைக்களம் மற்றும் பொலிஸாரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. கடந்த 5ஆம் திகதி நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு அடுத்து, மூன்று நாட்களின் பின்னர் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்ட நாடாளுமன்ற ஊடகப் பிரிவு, அனைத்து விசாரணைகளும் சுமூகமான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அங்கு கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்திருந்தது. அத்துடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைய செயற்படுமாறு நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

“வழக்கிற்கு தொடர்புடைய அரச இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கை மற்றும் ஏனைய வைத்திய அறிக்கைகளை விரைவில் பெற்றுக்கொள்வதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது” என்றும், “வழக்கு தொடர்பில் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் விடுத்த கோரிக்கைக்கு சட்டமா அதிபர் திணைக்களம் உடன்பட்டது”, எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இது முற்றிலும் நீதிமன்ற செயல்முறைக்கு முறையற்ற ஒரு தலையீடாகும். விசாரணைகள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு நாடாளுமன்றக் குழுவொன்றிற்கு மாத்திரமல்ல, நாடாளுமன்றத்திற்குக் கூட முடியாது,” என சட்டமா அதிபர் திணைக்களத்தின் முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும், நாட்டில் பெரும் புகழ்பெற்ற பல வழக்குகளை நடத்தி வருபவரும், பல தசாப்த கால அனுபவத்தைக் கொண்டவருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் மிக உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

நிலையியற் கட்டளைகளில் இல்லாத ஒரு குழு

“பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பது நிலையியற் கட்டளைகளின் கீழ் இயங்கும் ஒன்று அல்ல. அது வெறும் ஒரு சபை மாத்திரமே,” என்று நாடாளுமன்ற நிர்வாகத் துறை மற்றும் சட்டத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட முன்னாள் செயலாளர் ஒருவர் தெரிவித்தார்.

தங்கள் முன்னிலைக்கு எந்தவொரு தரப்பினரையும் அழைப்பதற்கான அதிகாரம் இந்த ஒன்றியத்திற்கு இருப்பதாகக் கூறும், பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொடர்பாக ஒன்றியம் செயற்பட்ட விதம் குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டார்.

ஜூன் 5ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின் போது, இந்த ஒன்றியத்தின் தலைவர்களினால், அதிகாரசபை கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக வெளியான ஊடக அறிக்கைகளை ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர நிராகரித்துள்ள போதிலும், அதிகாரசபை நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதாகவே ஒன்றியத்தின் ஏனைய பெண் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

“தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை நெருக்கடிக்குள்ளாக்கி, அச்சுறுத்தும் வகையில் கேள்வியெழுப்பியமை தவறானது. என்னால் அதனை அங்கீகரிக்க முடியாது,” என இலங்கை நாடாளுமன்றத்தில் 10 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிரத்ன தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியக் கலந்துரையாடலின் உள்ளடக்கம் குறித்து எந்தவொரு மூன்றாவது தரப்பினருக்கும் கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்குமாறு அக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டதாக ஊடகங்கள் ஊடாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஜூன் 10ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.”

“இந்தக் கலந்துரையாடல் பற்றிய தகவல்கள் கசிந்தால், அத்தகைய மீறலுக்கு எதிராக நாடாளுமன்ற சிறப்புரிமைகளை கோருவதற்கு அது காரணமாக அமையும் என அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கப்பட்டது,” என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விசேட அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்தார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அநுராதபுரம் சிறுமி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜின் தலைமையில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் விசேட கலந்துரையாடலொன்று கடந்த மே 25ஆம் திகதி நடத்தப்பட்டிருந்ததுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஒன்றியத்தின் உபகுழுவின் இணைப்பாளர்களாக சமன்மலி குணசேகர மற்றும் சட்டத்தரணி சமிந்திரிணி கிரியெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் குறித்த இணைப்பாளர்கள் கலந்துகொண்டதாக, அதிலிருந்து மூன்று நாட்களுக்குப் பின்னர் இலங்கை நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு பணிப்பாளர் சமந்த மல்லவாரச்சி விடுத்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

பெண்களின் ‘கழகம்’ ஒன்று

பல்லேகம ஹேமரதன தேரருக்கு எதிரான சிறுவர் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் பொலிஸாரை தங்கள் முன்னிலைக்கு அழைத்து விபரங்களைக் கோருவதற்கும், மேலதிக நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகளுக்கு வழிகாட்டல்களை வழங்குவதற்கும் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நடவடிக்கை எடுத்தமையானது, நாடாளுமன்ற மற்றும் நீதிமன்ற மரபுகளுக்கும் அதேபோன்று தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கும் பொருத்தமானதா என நாம் மேலே குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணியிடம் மேலும் வினவியபோது, இது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மட்டத்திலான விடயமல்ல என அவர் தெரிவித்தார்.

“இது ஒரு பெண்கள் கழகம் தானே. அவர்கள் எவ்வாறு சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளையும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையையும் அழைத்து சட்ட வழிகாட்டல்களை வழங்க முடியும்? சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தல்களை வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது? அவ்வாறு செய்ய முடியாது. இது நாடாளுமன்ற சிறப்புரிமைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து செய்யும் ஒரு வேலையாகும்,” என தனது பெயரை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட, முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலான ஜனாதிபதி சட்டத்தரணி இதனை தெரிவித்தார்.

“எவ்வாறாயினும், சில சந்தர்ப்பங்களில் சட்டங்கள் மற்றும் சட்டமூலங்கள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் சட்டரீதியான தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொள்வதற்காக சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை நாடாளுமன்றத்திற்கு அழைக்க முடியும் என்ற போதிலும், விசாரணைகள் குறித்தோ அல்லது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் குறித்தோ அறிவுறுத்தல்களை வழங்குவதற்கோ அல்லது மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கோ சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளை எந்தவொரு சபை அல்லது குழுவின் முன்னிலையிலும் அழைப்பதற்கான எந்த வழிமுறையும் இல்லை,” எனத் தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி, அத்தகைய கோரிக்கையை விடுப்பதே நீதிமன்ற நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படும் முறையற்ற தலையீடாகக் கருதப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.”

நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையிடுதல்

“சட்டமா அதிபர் திணைக்களத்தில் மாத்திரமன்றி, சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணைகளிலும் எவராலும் தலையிட முடியாது. வழக்குகள் குறித்து சட்டமா அதிபருக்கு வழிகாட்டல்களை வழங்க வெவ்வேறு குழுக்களால் முடியும் என்றால், நாட்டின் அரசியலமைப்புச் சட்ட முறைமை எதற்கு? ஒரு அமைச்சராக இருப்பதனாலோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் குழுவாக இருப்பதனாலோ சட்டமா அதிபருக்கோ அல்லது நீதிமன்ற நடவடிக்கைகளுக்கோ அந்த வகையில் செயற்படுங்கள், இந்த வகையில் செயற்படுங்கள் என்று அறிவுறுத்தல்களை வழங்க முடியுமா?” என்று அவர் கேள்வியெழுப்பினார்.

“நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் செயற்பாடுகளை ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் தவறான வடிவில் சித்தரிப்பது, நாடாளுமன்ற சிறப்புரிமைகளை மீறும் செயல் மாத்திரமன்றி, அவதானத்திற்கு உள்ளாகியுள்ள சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவம் தொடர்பிலான பொறுப்பற்ற ஒரு நடத்தையுமாகும். அத்துடன் இது குழந்தையின் தேவைகளைப் பாதுகாப்பதனை வேண்டுமென்றே சீர்குலைப்பதாகும்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹேமச்சந்திர நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

நாடாளுமன்ற ஒன்றியங்களின் அதிகாரங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து நாம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, நாடாளுமன்ற நிலையியற்கட்டளைகளுக்கு உட்பட்ட குழுக்கள் மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களுக்குள்ள எந்தவொரு அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகளும், பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் போன்ற சபைகளுக்கு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

ஒன்றியங்கள் மற்றும் ஏனைய குழுக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“நாடாளுமன்ற ஒன்றியம் என்பது பொதுவான நலன்கள் / நோக்கங்கள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அதற்காக குரல் கொடுப்பதற்கும் அல்லது ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதற்கும் ஒன்றிணையும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவாகும்.”அதன் சட்டபூர்வமான தன்மை பின்வருமாறு அமையும்.
“எவ்வாறாயினும், நாடாளுமன்ற ஒன்றியங்களுக்கான ஏற்பாடுகள், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் குறிப்பிடப்படவில்லை.”

இல்லாத அதிகாரத்தைக் காட்டி சட்டத்தை இழிவுபடுத்துதல்

முன்னர் குறிப்பிடப்பட்ட நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளரிடம் இது தொடர்பாக வினவியபோது, ஒன்றியம் என்பது ஒரு பெயரளவு கூட்டமைப்பே அன்றி, உத்தியோகபூர்வ அதிகாரம் கொண்ட ஒரு பிரிவு அல்ல என்பதை அவரும் தெளிவுபடுத்தினார்.

“பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் என்பது நிலையியற் கட்டளைகளின் கீழ் நிறுவப்பட்ட ஒன்று அல்ல. அதற்கு அத்தகைய எந்தவொரு அதிகாரமும் இல்லை. உண்மையில் இது தொடர்ந்து நீடிக்கும் ஒரு பிரச்சினையாகும். ஒன்றியங்களுக்கு, ஏனைய குழுக்களுக்கு இருக்கும் நாடாளுமன்ற சிறப்புரிமைகள் இல்லை என்பதே எனது கருத்தாகும். ஏனெனில், சரியாக பார்த்தால் இவை சிறிய சிறிய கிளப்கள் (அமைப்புகள்) போன்றவையாகும்,” என அவர் தெரிவித்தார்.

ஒன்றியங்களுக்கும் நிலையியற் கட்டளைகளின் கீழ் நிறுவப்படும் குழுக்களுக்கும் இடையில் எத்தகைய வேறுபாடு காணப்படுகின்றது என வினவியபோது, அது நிலையியற் கட்டளைகளின் கீழ் நிறுவப்பட்டதா என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே முற்றிலும் தீர்மானிக்கப்படுகின்றது என முன்னாள் செயலாளர் தெரிவித்தார்.

கோப், கோபா போன்ற குழுக்களுக்கு, நிலையியற் கட்டளைகளின் கீழேயே உபகுழுக்களை நியமிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அது முறையான நடைமுறைக்கு உட்பட்டே செய்யப்பட வேண்டும். அதாவது, பிரதான குழுவை முறையாகக் கூட்டி, அறிக்கைகளை ஆவணப்படுத்திய பின்னரே உபகுழுக்களை நியமிக்க வேண்டும். மிக முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால், நிலையியற் கட்டளைகளின் கீழ் நீங்கள் குறிப்பிடும் இந்த ஒன்றியங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை என்பதாகும். அப்படியாயின், அதன் கீழ் நிறுவப்படும் எதற்கும் சட்டபூர்வமான செல்லுபடித்தன்மை இருக்க முடியாது அல்லவா?” என முன்னாள் செயலாளர் தெரிவித்தார்.

“வெளிப்படையாகத் தெரியாத இந்தச் சட்ட மற்றும் அரசியலமைப்பு அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் இந்தகைய நடவடிக்கையானது, நாட்டின் சட்டங்களிற்கமைய நிறுவப்பட்ட நிறுவனங்களின் சுயாதீனத்தன்மையை சீர்குலைப்பதற்கோ அல்லது அதற்கு முறையற்ற செல்வாக்கைச் செலுத்துவதற்கோ காரணமாக அமையாதா? என நாம் மேலே குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணியிடம் வினவியபோது, அது நிச்சயமாக நடக்கக்கூடிய ஒரு விடயம் என அவர் தெரிவித்தார்.”

“நாடாளுமன்றத்திற்கு கூட முடியாது”

“அந்தக் குற்றம் தொடர்பான விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையும் பொலிஸாரும் தானே மேற்கொள்கின்றனர். தற்போது அது நீதிமன்றத்தின் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்காகும். விசாரணைகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களை சட்டமா அதிபர் வழங்குவார். எனவே, அதில் ஏதேனும் சிக்கல் எழுந்தால், அந்த தரப்பினர் அதனைத் தீர்த்துக்கொள்வார்கள். இவை அனைத்தினதும் இறுதி மேற்பார்வை அதிகாரம் கொண்டவர் நீதிமன்றமே என்பதை மறந்துவிடாதீர்கள். அவற்றில் தலையிடுவதற்கு நீங்கள் குறிப்பிடும் இந்த ஒன்றியம் மாத்திரமல்ல, நாடாளுமன்றத்திற்குக் கூட முடியாது. அதுமட்டுமன்றி, எங்கிருந்து வந்த அதிகாரத்தை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை வழங்கியது?”

“நீதிமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையில் அதிகார சமநிலை ஒன்று காணப்படுகின்றது, அதனையே நாம் Separation of Powers என்கிறோம். அந்த இரு நிறுவனக் கட்டமைப்புகளும் ஒன்றிலொன்று தங்கியிராமல் சுயாதீனமாகவே செயற்படுகின்றன. அடுத்த மிக முக்கியமான விடயம் தான்Judicial Review என்பதாகும். நீதித்துறை அதிகாரமும், சட்டவாக்க நிறுவனமான நாடாளுமன்றமும் இரு வெவ்வேறானவை. எனினும், இவை இரண்டிற்கும் அவற்றுக்கே உரிய தனித்துவமான அதிகாரமும், ஒன்றினது அதிகாரத்தில் மற்றொன்று தலையிடாத ஒரு மரபும் காணப்படுகின்றது. எனவே, ஒன்றியங்களை அமைத்து சட்டரீதியான நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்துக் கேள்வியெழுப்புவதற்கு முன்னர், இந்த விடயங்கள் குறித்து அந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் தெரிந்திருப்பது நல்லது அல்லவா,” என ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை நெருக்கடிக்குள்ளாக்கியதை அங்கீகரிக்க முடியாது

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் விசாரணை அதிகாரிகளுக்கு அசெளகரியம் ஏற்படும் வகையில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திலுள்ள சிலர் நடந்துகொண்டதையும் கடுமையாக விமரிசித்த, முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலான குறித்த ஜனாதிபதி சட்டத்தரணி, இது ஒரு மிக மோசமான முன்மாதிரியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

“இந்த ஒன்றியத்திலுள்ளவர்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகளுக்குப் பேசுவதற்குக் கூட இடமளிக்காமல் குற்றம் சுமத்தியுள்ளதை நான் அவதானித்தேன். வரலாற்றில் எப்போதுமே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் நாடாளுமன்ற ஒன்றியத்திற்கு மாத்திரமன்றி, ஒரு நாடாளுமன்றக் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு, அவர்கள் மேற்கொள்ளும் விசாரணைகள் குறித்துக் கேள்வியெழுப்பப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டதாக நாம் கேள்விப்பட்டதே இல்லை. இந்த நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு தங்களது அதிகார எல்லை கூட விளங்குவதில்லையா?”

“தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவரும்“ அதன் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளரும் அசெளகரியத்திற்குள்ளாகும் வகையில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சிலர் நடந்துகொண்ட விதம் குறித்து, அந்த ஒன்றியத்தின் ஒரு உறுப்பினர் என்ற ரீதியில் தானும் உடன்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.”

“குழந்தையின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். அதேபோன்று, நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது குறித்து நம் எவருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அத்துடன், இந்த விடயத்தை இந்தளவிற்கு முன்னோக்கிக் கொண்டு வந்தது தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதிகாரிகளை அவ்வாறு அழைத்து பேசுவது நல்லதல்ல.”

மூடிமறைக்கப்பட்டிருந்த ஒரு சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவத்தை இந்தளவிற்கேனும் சட்டத்தின் முன் கொண்டு வந்த, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மீது குற்றம் சுமத்தப்பட்டமை குறித்து அவர் தனது கவலையை தெரிவித்தார்.

“தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை நெருக்கடிக்குள்ளாக்கி, குற்றம் சுமத்தியமை மிகவும் தவறான ஒரு விடயமாகும். பொலிஸார் தானே, விசாரணைகளைச் சரியாக மேற்கொள்ளவில்லை? அது முழு நாடும் அறிந்த ஒரு விடயம் அல்லவா?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கேள்வியெழுப்பினார்.

எவ்வாறாயினும், ஓய்வுபெற்ற பிரதி சொலிசிட்டர் ஜெனரலினால் சுட்டிக்காட்டப்பட்ட மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், குற்றவியல் குற்றமொன்று தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து, நீதிமன்றக் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு ஒன்றியத்தினால் கேள்வியெழுப்பவோ அல்லது அறிவுறுத்தல்களை வழங்கவோ முற்படுவதன் மூலம், முழுமையான சட்ட நடைமுறையும் ஒரு நெருக்கடியான நிலையை நோக்கி நகரக்கூடும் என்பதாகும்.

“அநுராதபுரம் சிறுமி தொடர்பான சம்பவம் குறித்து, நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் சட்டமா அதிபர், பொலிஸார் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியோரை நாடாளுமன்றத்திற்கு அழைத்து கேள்வியெழுப்பியதுடன், அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தது அல்லவா. சரி, இப்போது வேறொரு குழுவினர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை குறித்தோ அல்லது வேறு ஏதேனும் சம்பவம் தொடர்பான விசாரணை குறித்தோ அந்த அதிகாரிகளை அழைத்து கேள்வியெழுப்பவும் அறிவுறுத்தல்களை வழங்கவும் முற்பட்டால் என்ன நடக்கும்? இதுவொரு குழப்பமான நிலையை ஏற்படுத்தும் அல்லவா? அதுமாத்திரமன்றி, நாடாளுமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையில் ஒரு மோதல் நிலைக்கு இது வழிவகுக்கும் அல்லவா?”

நாலந்தாவிற்கும் ஓர் நாடாளுமன்ற ஒன்றியம்

இதேபோன்றதொரு கருத்தைக் கொண்ட நாடாளுமன்றத்தின் முன்னாள் செயலாளர், இதன் மூலம் நாடாளுமன்ற அதிகாரங்கள் கூட குறைத்து மதிப்பிடப்படலாம் என்பதை ஏளனமான முறையில் சுட்டிக்காட்டினார்.

“நாலந்தாவில் கல்வி கற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ‘நாலந்தா நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்றியம்’ என்று ஒன்றை உருவாக்கி, இதே வழியில் குழுக்களை அமைத்து, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளையோ அல்லது வேறு ஏதேனும் அரச நிறுவனத்தின் அதிகாரிகளையோ அழைத்து கேள்வியெழுப்ப முற்பட்டால் என்ன நடக்கும்? இது முற்றிலும் ஒரு வேடிக்கையான விடயமாகிவிடும் அல்லவா? ஆனால், அதுவொரு ஆபத்தான வேடிக்கையாகும்.”

அப்படியாயின், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டத்தில் உள்ளடக்கப்படாத , அத்தகைய சட்டபூர்வ அதிகாரம் இல்லாத ஒன்றியங்களின் முன்னிலைக்கு சட்டமா அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் சமூகமளிப்பது எதனால் என நாம் எழுப்பிய வினாவிற்குப் பதிலளித்த முன்னாள் செயலாளர், பெரும்பான்மையானவர்கள் இந்த உண்மை நிலையை அறியாமலேயே சமூகமளிக்கின்றனர் என தெரிவித்தார்.

“உண்மையில் பெரும்பான்மையானவர்கள் அதனை அறிவதில்லை. அரச அதிகாரிகளினால் இதனை சவாலுக்கு உட்படுத்த முடியும் என்பதே எனது கருத்தாகும். ஏனெனில், இந்த ஒன்றியங்கள் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வருவதில்லை அல்லவா? அதாவது, அழைப்பு விடுப்பதற்கோ அல்லது உத்தரவு பிறப்பிப்பதற்கோ அவற்றுக்கு அதிகாரம் இல்லை. எனினும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளுக்கு இருக்கும் பயம் மற்றும் மதிப்பு காரணமாகவே அரச அதிகாரிகள் சமூகமளிக்கின்றனர்.”

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கருத்து வெளியிடும் உரிமைக்கு தடையா?

எவ்வாறாயினும், தற்போது சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் செயற்பட்டுள்ள விதம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டுள்ளதுடன் சர்ச்சையான ஒரு சூழ்நிலையும் உருவாகியுள்ளது. குறித்த சந்திப்பின் பின்னர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கூட ஒருவித அச்சத்திற்குள்ளாகியிருப்பதாக தோன்றுகின்றது. சமூக ஊடகங்கள் ஊடாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும், அதன் சட்ட அமுலாக்கல் பிரிவின் பணிப்பாளருக்கும் எதிராக முன்வைக்கப்படும் அவதூறுகள் குறித்தும், பொலிஸ் விசாரணைகளுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி அதிகார சபையைக் குற்றம் சாட்டியமை குறித்தும், அதன் பின்னர் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் குறித்தும் நாம் பல சந்தர்ப்பங்களில் அதிகார சபையின் உயர் மட்ட அதிகாரிகளிடம் தொலைபேசி ஊடாக வினவியிருந்தபோதிலும், அவர்கள் அனைவரும் எந்தவொரு கருத்தையும் வெளியிடுவதனை முற்றாகத் தயவுடன் மறுத்துவிட்டனர்.

கே. விஜேசிங்க

Latest articles

Similar articles