மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இந்தியாவின் தலையீடு ‘அவசியமற்றது’

இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் இந்தியா தலையீடு செய்யக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் (TPA) தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசியன் தலையீடு ‘அவர்களுக்கோ நமக்கோ எந்த நன்மையும் செய்யாது’ என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு, ஆளும் தேசிய மக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, தமிழ் முற்போக்குக் கூட்டணி இந்தியாவிடம் கோரிக்கை விடுக்குமா என, தென்னிலங்கையின் ஆங்கிய ஊடகமொன்று எழு்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

“இந்தியா தற்போதைய பிரச்சினையில் தலையிடக்கூடாது. குறிப்பாக, மாறிவரும் உலக ஒழுங்கின் பின்னணியில், அத்தகைய ஒரு உத்தி அவர்களின் நலனுக்கும் உகந்தது. இந்தியா ஒரு தமிழ் ஆதரவு நாடாகக் கருதப்படக்கூடாது, மாறாக இலங்கையை ஒட்டுமொத்தமாக ஆதரிக்கும் ஒரு நாடாகவே கருதப்பட வேண்டும்.” என முன்னாள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில் இந்திய அரசுக்கு ஒரு தார்மீகப் பொறுப்பு காணப்படுவதாகவும் மனோ கணேசன் குறிப்பிடுகின்றார்.

“இலங்கையில் தமிழ் ஆயுதப் போராட்டத்தை முறியடிப்பதில் இந்தியாவின் இராஜதந்திரமும் இராணுவத் தலையீடும் தீர்க்கமான பங்காற்றியதில் இருந்து அந்தப் பொறுப்பு எழுகிறது. இந்தியாவின் பணி முழுமையடையாமல் இருந்தபோதிலும், அந்தச் செயல்பாட்டில் அது சுமார் இரண்டாயிரம் வீரர்களை இழந்தது. இந்தத் தலையீட்டிற்கு முன்னதாக, தமிழ் ஆயுதக் குழுக்கள் இந்தியாவில் பயிற்சி பெற்றன. அதன் விளைவாக, இந்தியத் தொடர்பு இலங்கையின் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான பிரச்சினையாக மாறியது.”

இலங்கையின் தேசியப் பிரச்சினை நாட்டுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேசத்தின் தலையீடு அவசியமில்லை என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த காலத்தில், இலங்கையின் அடுத்தடுத்த அரசாங்கங்களுடன் இந்தியா கொண்டிருந்த நல்லெண்ணத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி ஒரு சுமுகமான அரசியல் தீர்வை எட்டுவதற்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் தவறியதாகவும் எம்.பி., மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

போர் முடிவடைந்தவுடள் அவர்கள் செயல்பட்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர், துரதிர்ஷ்டவசமாக, அவர்கள் தங்கள் அரசியல் நிலையை வலுப்படுத்தவும் மேலும் முன்னேறவும் மாகாண சபை கட்டமைப்பைத் திறம்படப் பயன்படுத்தத் தவறியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் அடிப்படையில் இந்தியா மற்றும் அடுத்தடுத்த சிங்களப் பெரும்பான்மை அரசாங்கங்களின் நம்பிக்கையை பெறவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் தவறியதாக நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest articles

Similar articles