இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதிக்கு சர்வதேச நாடுகள் விதித்துள்ள தடைகள் “தப்பிப் பிழைத்த தமிழ் மக்களுக்கு நீதியை நோக்கிய ஒரு சிறிய முன்னேற்றம்” என, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (International Truth and Justice Project – ITJP) தெரிவிக்கின்றது.
“பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, இந்தத் தடைகள் நீதியை நோக்கிய ஒரு சிறிய முன்னேற்றமாகும்.”
தமிழர்களுக்கு எதிரான பெரும் அட்டூழியங்களில் ஈடுபட்டதாகவும் இலங்கையின் போர்க் குற்றவாளிகளில் ஒருவராகவும் பெயரிடப்பட்டுள்ள ஷவேந்திர சில்வாவுக்கு எதிராக சர்வதேசத் தடைகளை விதிப்பதில், தாம் முக்கிய பங்கு வகித்ததாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் தமது X (முன்னர் Twitter) தளத்தில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஷவேந்திர சில்வா வழங்கிய நேர்காணலை மேற்கோள்காட்டி சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் இந்த X தளப் பதிவை இட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு பூர்த்தியை தமிழ் மக்கள் கண்ணீருடன் நினைவுகூர்ந்து ஒரு நாளுக்கு பின்னர், ஷவேந்திர சில்வா இந்த விடயம் குறித்து கவலை வெளியிட்டுள்ளதாக அந்த X பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
“முள்ளிவாய்க்காலில் அட்டூழியங்கள் நடந்து 17 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது விசாக்கள், வங்கிச் சலுகைகள் மற்றும் சர்வதேச அணுகலை இழந்தது குறித்து அவர் பகிரங்கமாகப் புலம்புகிறார்.” என அந்த பதிவு குறிப்பிடுகின்றது.
யுத்தத்தில் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்டமையால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் சர்வதேச வங்கிகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் ஏற்பட்டுள்ள தடைகள் குறித்தும் முன்னாள் இராணுவத்தளபதி வெளிப்படுத்தியுள்ளதாக செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது.
“மேலும், தனக்கும் தனது மனைவிக்கும் சொந்தமான சர்வதேச வங்கி நிதிகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், தனது சகோதரர் மற்றும் மைத்துனியின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கும் நிதித் தடைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் சில்வா கூறினார்.”
தனக்கு விதிக்கப்பட்டுள்ள சர்வதேச ரீதியான பயணத் தடைகளால் தனது இரு பிள்ளைகளுக்கும் கிடைக்கும் கல்வி வாய்ப்புகளும் அற்றுப்போவதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் தமது X தளத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
“சர்வதேசத் தடைகளால் தனது குடும்பத்திற்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்புகள் குறித்து சில்வா முறையிடுகிறார். பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக தனது பிள்ளைகள் மாநாடுகளில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்ல முடியவில்லை எனவும் அவர் குறிப்பிடுகிறார்.”
