கிளிநொச்சியில் சுயாதீன ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவனுக்கு (சிவா) தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை பொலிஸார் அலட்சியப்படுத்தியது, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாக கிளிநொச்சி ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கொலை அச்சுறுத்தல் தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும், அச்சுறுத்தல் விடுத்த நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காது பொலிஸார் காட்டும் மெத்தனப்போக்கும், இந்த விடயத்தை சாதாரண ஒரு அச்சுறுத்தலாக மாற்றியிருப்பதும் எமக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. குற்றவாளிகளுக்குத் துணைபோகும் வகையிலான இத்தகையச் செயற்பாடுகள், சட்டத்தின் ஆட்சியின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைப்பதுடன், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.”
கிளிநொச்சியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் நடைபெற்ற இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில், சட்டவிரோத மணல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்டதாக பேஸ்புக்கில் பதிவிட்டதைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக மரண அச்சுறுத்தல் வந்ததால், தனது பாதுகாப்பை கருத்திற்கொண்டு கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததாக சுயாதீன ஊடகவியலாளர் தர்மலிங்கம் பரமசிவன் தனது பேஸ்புக்கில் வெளியிட்ட காணொளி பதிவில் வலியுறுத்தியுள்ளார்.
“பாடசாலை ஒன்றின் நிகழ்வில் பிரதம விருந்தினராக சட்டவிரோத செயலில் ஈடுபடும் நபர்கள், கள்ள மணல், போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை அழைத்தமை தொடர்பாக நான் பதிவிட்டிருந்தேன். நான் அந்த பதிவில் பாடசாலையின் பெயர், நபர்களின் பெயரை பாவிக்கவில்லை. எனினும் மிக மோசமான தொலைபேசி அச்சுறுத்தலின் பின்னர்தான் நான் என்னுடைய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, ஊடகவியலாளராக எந்த நேரத்திலும் எங்காவது செல்லும்போது ஏதாவது இடம்பெறலாம். பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளேன்.”
அந்த மரண அச்சுறுத்தலுக்குப் பின்னர் தனது அன்றாட கடமைகளை தான் எவ்வாறு அச்சத்துடன் முன்னெடுக்கின்றேன் என்பது பற்றி பேஸ்புக்கில் வெளியிட்ட காணொளி பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“குறிப்பாக எனக்கு பயமாகத்தான் இருக்கின்றது. குறிப்பாக பின்னால் வந்து ஒரு வாகனம் ஹோன் அடிக்கும்போதும் பயமாகத்தான் இருக்கின்றது. ஒரு டிப்பர் வாகனம் வரும்போதும் பயமாகத்தான் இருக்கிறது. அந்த டிப்பர் யாருடையது? எதற்காக வருகிறது?”
மார்ச் 17, 2026 அன்று, ஊடகவியலாளர் பரமசிவன் தனது பேஸ்புக் தளத்தில், “கிளிநொச்சியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டிக்கு பிரதம விருந்தினர்களாக கள்ள மணல் கடத்தலில் ஈடுபடும் நபர் மற்றும் போதைபொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் செய்யும் நபர்கள். பாடசாலை மாணவர்களுக்கு என்ன சொல்ல போகிறார்கள்? ” என பதிவிட்டார்.
மேலும், அந்தப் பதிவை இட்ட பின்னர், தன்னை ஜனா என அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் தொலைபேசியில் தன்னை அச்சுறுத்தியதாகவும் ஊடகவியலாளர் கூறுகிறார். மேலும், தன்னை அச்சுறுத்தும் குரல் பதிவையும் தன்னுடைய பேஸ்புக் காணொளியின் இறுதியில் அவர் இணைத்துள்ளார்.
அந்த அச்சுறுத்தலின் ஒரு பகுதி இவ்வாறு அமைந்துள்ளது;
“காணும் இடத்தில் அடி விழும். கமண்டில் ஜனா என இருக்கிறது. அது ஜனாவைப் பற்றியல்ல என கமண்ட் பண்ணு இல்லையென்றால் அடி நான் அடிப்பேன் உனக்கு. நீ ரெக்கோட் பண்ணினாலும் பரவாயில்லை. உனக்கு குடும்பம் இருக்கு. கமண்டில் ஜனா என இருக்கு. என்ன வேண்டுமோ போடு. நான் கொல்லுவேன்.”
கிளிநொச்சியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் நடைபெற்ற இல்லங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொண்ட அந்த சட்டவிரோத மணல் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் யாரென ஊடகவியலாளர் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிடவில்லை என்றாலும், அந்தப் பதிவிற்குப் பதிலளித்தவர்களில் பலர் அவர் ‘ஜனா’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தொலைபேசியில் தன்னை ‘ஜனா’ என அறிமுகப்படுத்திக்கொண்டு ஊடகவியலாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த நபர், அந்தப் பதிவில் உள்ள கருத்துகளுக்குப் பதிலளித்து, தான் ‘ஜனா’ என்ற நபரை குறிப்பிடவில்லை என கூறுமாறும் ஊடவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.
