9 வருட போராட்டத்திற்கு தீர்வு வழங்காத அரசாங்கத்தையும் சர்வதேசத்தையும் தமிழ் தாய்மார் சாடுகிறார்கள்!

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதன் பின்னரும் தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடும் தாய்மாரின் போராட்டம் 9 வருடங்களை நிறைவு செய்துள்ளது.

3000 நாட்களைக் கடந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பதை வலியுறுத்தும், தாய்மார் ஏற்பாடு செய்திருந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு சர்வதேச தலையீட்டுடன் நீதியை நிலைநாட்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலயம் முன்பாக ஆரம்பமான பேரணி, டிப்போ சந்தி மீனாட்சி அம்மன் ஆலயம் முன்பாக நிறைவடைந்தது.

போராட்டத்தின் இறுதியில் ஒன்பது பிரதான கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதமொன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததோடு அந்த கடிதம் ஊடங்களுக்கும், பொது மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டது.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், சுழற்சி முறையிலான தொடர் போராட்டத்தை ஆரம்பித்தது.

இதுவரை நீதி கிடைக்காத, இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 400 பேர் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அறிந்துகொள்ளாமலேயே காலமாகியுள்ளனர்.

யுத்தத்திற்கு முன்னரும், பின்பும் எமது தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன ஒடுக்குமுறைகளின் மிக உச்சக்கட்டமாக 2009ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

படுகொலைகளை செய்ததாக குற்றஞ்சாட்டப்படும் இராணுவத்திற்கு பதவி உயர்வு வழங்கும் நாட்டில் ஒருபோதும் நீதி கிடைக்காது என வலியுறுத்தும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் தமிழர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கான சர்வதேசத்தின் தலையீட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Latest articles

Similar articles