யாழ்ப்பாாணத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் ‘சிறுவன் என்பதை மறைக்கும்’ பொலிஸாரின் திட்டம் அம்பலமானது

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் உள்ள அல்லைப்பிட்டி சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது சிறுவனின் கொலையை மறைக்க பொலிஸார் முயற்சிப்பதாக சந்தேகங்கள் எழுந்துள்ளன.

உயிரிழந்த சித்தந்கேணியைச் சேர்ந்த அல்பினோ அயூப்ராஜ் அருள் பயாஸ், பிறப்புச் சான்றிதழ் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு அமைய, அவர் நவம்பர் 9, 2008 அன்று பிறந்துள்ளார்.

ஆனால் பொலிஸார் அவர் 19 வயதுடையவர் எனக் கூறுகின்றனர்.

பிள்ளையை இழந்த தாயார் தலைமையிலான குடும்ப உறுப்பினர்கள், சிறுவனின் கொலைக்கு காரணமான பொலிஸ் அதிகாரிகளை உடனடியாகக் கைது செய்து நீதி நிலைநாட்ட வேண்டும் எனக் கோரி, சிறுவனின் உடலை மயானத்திற்கு எடுத்துச் செல்லும் இறுதி ஊர்வலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலையும் என்ற அடிப்படையில், அருள் பயாஸின் கொலைக்கு நீதி கோரி அவரது உறவினர்கள் நடத்திய போராட்டங்களைத் தடை செய்ய நீதிமன்றத்திடம் பொலிஸார் தடை உத்தரவு கோரியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொதுமக்களின் உரிமையை அங்கீகரித்த நீதிமன்றம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, பேருந்து நிலையம் மற்றும் பலாலி வீதி ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு இன்றி போராட்டம் நடத்த அனுமதி வழங்கியது.

அருள் பயாஸின் உடலை, நேற்றைய தினம் (பெப்ரவரி 12) தாயார் மற்றும் உறவினர்கள் நீதி கோரி கோசங்களை எழுப்பியவாறு நவாலி இந்து மயானத்திற்கு எடுத்துச் சென்றனர்.

“தாயின் கண்ணீருக்கு நீதி வேண்டும்” என எழுதப்பட்ட பதாகையையும் அங்கு காண முடிந்தது.

பெப்ரவரி 10 ஆம் திகதி பொலிஸார் வாகனத்தை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டிவ் வேனில் பயணித்த 19 வயது இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு பெப்ரவரி 11ஆம் திகதி காலை 4 மணிக்கு வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உயிரிழந்தவரின் பெயர்கூட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

உயிரிழந்த சந்தேகநபர் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஐஸ் மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியிருந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவரின் உடலில் போதைப்பொருள் இருந்ததாக குறிப்பிடப்படாமையால் பொலிஸாரின் ஊடக அறிக்கை சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட 17 வயது அருள் பயாஸின் மரணத்திற்கான காரணம், “துப்பாக்கியிலிருந்து வெளியேறிய தோட்டாவால் மூளை சிதைந்தமை” என சட்ட வைத்திய அதிகாரி ருத்ரபசுபதி மயோதரனின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், உயிரிழந்த சிறுவனுடன் வேனில் பயணித்த மற்ற இருவரையும் தலா 25,000 ரூபாய் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.

பயாஸின் வயதை உறுதிப்படுத்தும் உத்தியோகபூர்வ ஆவணங்கள் இருந்தபோதிலும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த நபர் 19 வயது இளைஞர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்த நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடக சந்திப்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு.கே. வூட்லர் முயற்சித்திருந்தார்.

Latest articles

Similar articles